January 22, 2025
  • January 22, 2025
Breaking News
March 28, 2019

ஐரா படத்தின் திரை விமர்சனம்

By 0 922 Views

தேவலோகத்தின் தலைவன் இந்திரன் பவனி வரும் யானை ‘ஐராவதம்’ என்று புராணங்களில் கதைகள் குறிப்பிடுகின்றன. அந்த யானைக்கு பழிதீர்க்கும் குணம் அதிகமாம்.

அப்படி இந்தப்படத்தில் அதற்கு நேரெதிராக கருப்பு நிறத்தில் வரும் நயன்தாராவும் தன் வாழ்க்கை சீரழியக் காரணமானவர்களை இரக்கமின்றி பழிவாங்குகிறார். அதனால்தான் இந்தப்படத்துக்குத் தலைப்பு ‘ஐரா’.

சரி… எதற்காகப் பழி தீர்க்கிறார்..? அது பிளாஷ்பேக் விஷயம்.

நேரடியாகத் தொடங்கும் கதையில் ஒரு ‘பளிச்’ நயன்தாரா பத்திரிகையாளராக வந்து தனக்குப் பார்க்கும் திருமணத்தில் நாட்டமில்லாமல் கிராமத்தில் பாட்டி வீட்டுக்கு வருகிறார். அங்கு நடக்கும் அசாதாரண சம்பவங்களை வைத்து பேய்களைப் பற்றிய தொடர் ஒன்றை யுடியூபில் வெளியிட்டுப் பெரும் புகழடைகிறார். ஆனால், போகப் போக ஒரு ஆவியின் அட்டகாசத்தை அங்கே கண்டு, அது தன்னைக் குறிவைப்பதை உணர்கிறார்.

இன்னொரு பக்கம் கலையரசன் சில நபர்களைத் தேடிப்போகிறார். அவர் தேடிப்போகிறவர்களெல்லாம் அகால மரணமடைகிறார்கள். அதன் காரணத்தை அவர் அறியும் வேளையில் நயன்ஸும் தன்னைத் துரத்துவது யாரென்று கண்டுபிடிக்க இரண்டு தேடல்களும் ஒரே புள்ளியில் இணைகின்றன.

நயன்தாராவுக்கென்றே… அவர் நடிப்பை மட்டும் நம்பியே எழுதப்பட்ட கதை போலிருக்கிறது. ஒருபக்கம் நகரத்து நாகரிக நங்கையாகவும், இன்னொரு பக்கம் அத்தனை பேராலும் வெறுக்கப்படும் எண்ணெய் வழியும் கிராமத்துக் கறுப்புப் பெண்ணாகவும் இரண்டு வேடங்கள் ஏற்றிருக்கிறார்.

கரிக்கட்டையாக மட்டுமல்லாமல் அதிர்ஷ்டக் கட்டையாகவும் நடிப்பதற்கு ஒரு நடிகைக்கு பெரும் துணிவு வேண்டும். அத்தனை டிகிளாமரைஸ் செய்துகொண்டு நயன்தாரா வரும் அந்த ‘பவானி’ என்ற பாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயம் இடம் பிடிக்கும். அத்துடன் அதில் நயன்ஸின் நடிப்பும் அத்தனை பேரையும் நெகிழ வைக்கும். பெண்ணினம் இந்த பவானியைக் கொண்டாடும்.

இன்னொரு வேடமான ‘யமுனா’ நயன்ஸ் எல்லாப் படங்களிலும் ஏற்கும் வேடம் என்றாலும் கிளைமாக்ஸில் பவானிக்காக அவர்செய்யத் துணியும் தியாகத்தில் அதுவும் ஏற்றம் பெறுகிறது. இன்னொரு வேடத்தில் வெறுக்க வைப்பவராகத் தோன்றுவதாலோ என்னவோ யமுனா என்கிற இன்னொரு வேடத்தில் ஒரு தேவதையாகவே தோன்றுகிறார்.

ஆனால், முன்னுக்கு வரும் இளம் நடிகர்கள் எல்லாம் நயன்ஸுடன் நடிக்கும் கனவில் இருக்க, படத்துக்குப் படம் அவருடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் யோகிபாபுவுக்கே கிடைக்கிறது. இதிலும் நயன்ஸின் காதலுக்காக ஏங்குகிறார் யோகிபாபு. அவரை இடைவேளைக்குப் பின் காணவில்லை.

கலையரசன் இறுக்கமாக அறிமுகம் ஆனாலும் அந்த பிளாஷ்பேக் காட்சியில் எல்லோரும் வெறுக்கும் நயன்தாராவைக் காதலித்து மனம் கவர்கிறார். அந்த அன்புதான் நயன்தாராவை எதற்கும் துணிய வைக்கிறது.

நயன்ஸின் பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா அந்தப் பாத்திரத்துக்கேற்ற சரியான தேர்வு. அவரே ஒரு கட்டத்தில் ஆவியின் ஆளாக இருப்பாரோ என்று சந்தேகிக்க வைத்து பின் அனுதாபத்தைத் தேடிக்கொள்கிறார்.

நயன்ஸின் பெற்றோராக வரும் ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணனுக்கு அதிக வேலையில்லை. அந்தக் குட்டிப்பையன் பப்லுவும் சில காட்சிகளில் வந்தாலும் மனம் கவர்கிறான். நயன்தாரா, கலையரசனின் இளவயதில் வருபவர்களும் பொருத்தமாக இருக்கிறார்கள்.

சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு மிரட்டியிருக்கிறது. சுந்தரமூர்த்தி கே.எஸ்ஸின் இசையில் ‘மேக தூதம்…’ கிளாஸிக். படம் முடிந்தும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பின்னணி இசையிலும் ஓகே.

பிரியங்கா ரவீந்திரனின் கதை படத்துக்கு பலம். திரைக்கதையில் ஹாரரை மிஞ்சும் நயன்தாராவின் நெகிழவைக்கும் படைப்புக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், ஹாரர் படங்களுக்குரிய வேகமும், விறுவிறுப்பும் சற்றுக் குறைவாகவே இருக்கிறது. இயக்குநர் சர்ஜுன் கே.எம். அதை வேகப்படுத்தியிருந்தால் இன்னும் படத்தை ரசித்திருக்க முடியும்.

படத்தின் யுஎஸ்பியாக இருக்கும் கருப்பு நயன்ஸை அவ்வளவு சீக்கிரம் தமிழ்சினிமா மறக்காது. அந்தப் பாத்திரப் படைப்புக்காகவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

ஐரா – அசத்திட்டார் நயன் தாரா..!