May 4, 2024
  • May 4, 2024
Breaking News
August 24, 2023

அடியே திரைப்பட விமர்சனம்

By 0 373 Views

டைம் டிராவல், டைம் லூப், பேரல்லல் யூனிவர்ஸ் போன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் கற்பனைகளை எல்லாம் ஹாலிவுட் திரையுலகம், அற்புதமான படைப்புகளாக மாற்றித் தந்திருக்கிறது. 

ஆனால் அவற்றையெல்லாம் அறிவியல் பூர்வமாக தமிழில் சொல்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம். 

ஆனாலும் அதை நமக்கு புரியும் வடிவில் கமர்சியலாக சொன்னால் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை மாநாடு போன்ற படங்கள் நிரூபித்திருக்கின்றன.

அந்த வகையில் பேரல்லல் யூனிவர்ஸ் என்ற இரண்டாம் உலகக் கதையைக் கொண்ட இந்தப் படமும் சேர்ந்து விடும் என்று நம்பலாம்.

வாழ்வில் அடுத்தடுத்த இடிகள் தாக்க, தற்கொலை எண்ணத்தில் இருக்கும் நாயகன் ஜிவி பிரகாஷுக்கு டிவியில் ஒலித்த ஒரு குரல் புதிய நம்பிக்கையைத் தர அதன் மூலம் தன் பழைய காதலியை மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவளுக்கு இவரைத் தெரியாது என்கிற நிலையில் தன் காதலை அவளிடம் சொல்லிவிடத் துடிக்கிறார்.

அதற்கான வேளைக்குக் காத்திருக்கும் நேரத்தில் விபத்து ஒன்றில் சிக்கி மயக்கமடைகிறார். கண் விழிக்கும் போது இன்னொரு உலகத்தில் இருக்கிறார். இதே சென்னைதான் – ஆனால் அது மெட்ராஸ் என்று அழைக்கப்படுகிறது. அங்கே இதுவரை பார்த்திராத விந்தைகள் எல்லாம் நடக்க, நமக்கு தெரிந்த எல்லோருமே வேறு பெயரில் அல்லது உருவில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரே நல்ல விஷயம் யாரை ஜிவி பிரகாஷ் காதலித்தாரோ இந்த உலகத்தில் அவரே அவருக்கு மனைவியாக இருக்கிறார். ஆனால் இது உண்மையா பொய்யா என்று மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாகும் நேரத்தில் திடீரென்று மீண்டும் பழைய உலகுக்குள் பிரவேசிக்க, அங்கே தன் காதலி, நண்பனின் காதலியாக இருக்க… இந்த இரு வேறு உலகக் கதைகள் என்ன ஆகின்றன என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.

சொல்லிப் பார்த்தாலே கொஞ்சம் சிக்கலான கதை அமைப்புதான். ஆனாலும் அதை சுவாரசியத்தோடு கொண்டு சென்றிருக்கும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்குக்கு  பாராட்டுகள்.

ஜிவி பிரகாஷின் உருவத்துக்கும் நடிப்பிற்கும் மிக பொருத்தமான வேடம் இதில் வாய்த்திருக்கிறது. மீசையையும் தாடியையும் ஷேவ் செய்தால் அப்படியே பள்ளி மாணவனாக ஆகிவிடுகிறார் ஜீவி.

முதல் உலகத்தில் பெற்றோரைப் பறி கொடுத்த அவர் இரண்டாம் உலகத்தில் அவர்களைச் சந்திக்கும்போது “நீங்க இன்னும் சாகலையா.?” என்று கேட்கும்போது தியேட்டர் அதிர்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத பாவத்தை ஜீவி நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

காமிராவுக்கு ஏற்ற முகம் என்பார்களே, அது 100% நாயகி கௌரி கிஷனுக்குதான் பொருந்தும். நேரில் பார்த்தால் சாதாரணப் பெண்ணாகத் தோன்றும் அவரைக், கேமரா வழியாகத் திரையில் பார்க்கும்போது பேரழகியாகத் தெரிவது வியப்புக்குரியது. 

அதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு சின்ன சின்ன அசைவுகளில் அவர் காட்டும் முக பாவங்களை ரசித்துக்கொண்டே இருக்கலாம். இந்தப் படத்தில் கௌரி கிஷனை ஜீவி மட்டுமல்ல படம் பார்க்கும் எல்லோருமே காதலிக்க முடியும்.

ஜீவியின் நண்பர்களில் வழக்கம்போல ஆர் ஜே விஜய் கலாய்ப்பதில் தியேட்டரை கலகலக்க வைக்கிறார். முதல் உலகத்தில் வாசிம் அக்ரமாகவும், இரண்டாம் உலகத்தில் வக்கார் யூனுஸ் ஆகவும் அவர் வருவது செம லந்து.

அதேபோல் ஜீவியின் இரண்டாவது உலகத்தில் கௌதம் மேனன் ஆக வெங்கட் பிரபு வருவதும், அவரே வெங்கட் பிரபுவை நக்கல் அடித்துப் பேசுவதும் செம ரகளை. வசனத்தில் கூட எப்படியாவது பிரேம்ஜியைக் கொண்டு வந்துவிடும் அவரது சாமர்த்தியத்தில் ‘அண்ணனுக்கு ஜே’ சொல்லலாம்.

புதிய உலகில் நமக்குத் தெரிந்த அத்தனை பிராண்டுகளும் வேறு வேறு பொருள்களாக இருப்பதும், இயக்குனர் மணிரத்தினம் ஃபாஸ்ட் பௌலராக வருவதும் ஐபிஎல் பெங்களூர் அணியின் கேப்டனாக தோனி இருப்பதும், பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளராக இருப்பதும் ரசிக்கத்தக்க விஷயங்கள்.

முதல் பாதிப் படம் நகர்ந்தது தெரியாத அளவுக்கு திரைக்கதை அத்தனை பரபரப்பாக இருக்கிறது.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு கிளாஸ். ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், இசையில் அமைந்த பாடல்களும் அற்புதம். ஆனால் பேரல்லல் யூனிவர்ஸ் என்றால் என்ன என்பதை வெங்கட் பிரபு விளக்கும் காட்சியில் பின்னணி இசையை இசைக்காமல் இருந்திருக்கலாம். அது விஷயத்தைப் புரிய விடாத தொந்தரவைத் தருகிறது.

அதேபோல் படத்தின் குறை என்று ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் இரண்டாவது உலகத்தில் எல்லாமே மாறி இருக்கிறது என்பதை சில காட்சிகளில் மட்டும் சொல்லி இருந்தாலே போதுமானது. அதுவே தொடர்ந்து ரிப்பீட் ஆகி கொண்டிருப்பது ஒரு வித அலுப்பைத் தருகிறது.

ஆனாலும் லாஜிக் அளவில் இந்தக் குறைகள் இருந்தாலும் படத்தை ட்ரீட் செய்திருக்கும் விஷயத்தில் தொய்வில்லாமல் கொண்டு சென்று முடிவதில் இந்தப் படத்தை எல்லாவிதமான பார்வையாளர்களும் ரசிக்க முடியும்.

அடியே – அடியெடுத்து வைப்பது வெற்றிப் படியே..!