October 16, 2025
  • October 16, 2025
Breaking News
May 28, 2019

மலையாளம் கன்னடத்தில் கலக்கும் பிசாசு நடிகை

By 0 853 Views

தனது முதல் படமான ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். 

ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது.

“சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி. உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றிதான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு கோலிவுட்டில் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைக் கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களை பற்றிய நிறைய அறிவிப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘உல்டா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பிரயாகா. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன, ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து இன்னொரு மலையாள திரைப்படமான ‘பிரதர்ஸ் டே’ படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் முன்னணி ஹீரோ பிரித்விராஜுடன் இணைந்து நடிக்கிறார். ஓணம் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தில் ஜூன் மாதத்தில் தன் பகுதிகளை முடித்துக் கொடுக்கிறார் பிரயாகா.

மறுபுறம் சாண்டல்வுட் என்றழைக்கப்படும் கன்னட சினிமாவில், ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் குமார் ஜோடியாக “கீதா” என்ற படத்தில் நடிக்கிறார். இது ஏற்கனவே கன்னட சினிமாவின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது. கொல்கத்தா, சிம்லா, பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகியவற்றின் ரம்மியமான இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. இறுதி கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கி இருக்கும் படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் விரைவில் முடித்து செப்டம்பர் மாதம் மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

தமிழ் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை பற்றி கேட்டால், புன்னகையோடு அவர் கூறும்போது, “தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல், ஒன்றை மட்டும் பிரித்து சொல்வது கடினம். மிகச்சிறந்த கதைகளை சொல்வதில் இருந்து தங்களின் தனித்தன்மையை இழக்காமல், நேட்டிவிட்டியை இழக்காமல் சர்வதேச தரத்தில் சிறந்த படங்களை சிறப்பாக வழங்குவது வரை எல்லாமே சிறப்பு. இங்கே பல்வேறு தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சி செய்ய மிகவும் ஆவலாக உள்ளேன்..!” என்றார்.