வீட்டின் அருகே குழி தோண்டும் போது திடீரென்று அதில் பொற்காசுகள் நிறைந்த புதையல் கிடைத்தால் எப்படி இருக்கும்..? படத்தின் கதை அதுதான் – படமும் அப்படியேதான்..!
ஏதோ ஒரு மீடியம் பட்ஜெட் படம் என்றுதான் பார்க்க உட்காருகிறோம். ஆனால் அதில் தங்கப் புதையலாய் அடுத்தடுத்து நகைச்சுவை வெடிகள் வெடிக்க ஆரம்பிக்கும் போது நம்மையும் அறியாமல் படத்துக்குள் லயிக்க ஆரம்பத்து விடுகிறோம்..!
அதுவும் காமெடி என்றால் அச்சு பிச்சு காமெடி எல்லாம் இல்லை. நியாயமான… இதுவரை படங்களில் அதிகம் வராத காமெடிகளாக பார்த்துப் பார்த்து கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவி முருகையா.
எந்த வேலைக்கும் போகாமல் அரசு தரும் ரேஷன் தயவிலும் அடுத்த வீட்டுக்காரர்கள் வளர்க்கும் கோழியின் தயவிலும் வயிறார உண்டு வாழ்ந்து வருபவர் பருத்திவீரன் சரவணன். அவரையும் ஒரு மனிதனாக நினைத்து தன் பிள்ளை அவரிடம் வளர்ந்தால் சரியாக இருக்கும் என்று விதார்த்தை அவரிடம் விட்டுவிட்டுப் போகிறார் சரவணன் சகோதரி.
ஆனால் சீட்டாளுக்கு ஒரு மேட்டாளு என்பதாக இருவரும் உதவாக்கரைகளாக உலா வர, அரசு திட்டத்தின் கீழ் அவர்கள் வீட்டில் கழிவறை கட்ட பள்ளம் தோண்டும்போது இந்த தங்கப் புதையல் கிடைக்கிறது. குழியைத் தோண்டிப் புதையலை எடுத்த ஜார்ஜ் மரியானுக்கும் சேர்த்து மூன்று பேரும் அதைப் பங்கு போட்டுக் கொள்ள நினைக்கிறார்கள்.
ஆனால் போகப் போக ஒவ்வொருவராக அந்த விஷயம் தெரிந்து பங்குக்கு வர, இறுதியில் என்ன ஆகிறது என்பது அட்டகாசமான திரைக் கதையாக திரையில் விரிகிறது.
விதார்த் ஹீரோ என்றாலும் தாய்மாமன் சரவணனில் இருந்துதான் கதை தொடங்குகிறது.
பருத்திவீரனில் செய்த லந்தில் பாதியாவது இதில் செய்து இருக்கிறார் சரவணன். ஆனால் அவர் நடிப்பதோ விதார்த் நடிப்பதோ பெரிய விஷயம் இல்லை. அவர்கள் நடிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் அவர்களது எதிர் வீட்டில் குடியிருக்கும் மீன் வியாபாரி ஹலோ கந்தசாமி நடித்திருப்பதெல்லாம் இதில் உச்சபட்சம்.
அவர் மட்டுமன்றி குழி தோண்டும் ஜார்ஜ் மரியன், உடனிருக்கும் பவன்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி கண்ணன், ஊராட்சிமன்ற தலைவர் கர்ணராஜா, பொற்கொல்லர் வேடத்தில் நடித்திருக்கும் வெற்றிவேல் ராஜா, பாம்பு பிடிக்கும் ஜிந்தா என்று ஒவ்வொருவரும் அந்த கிராமத்தின் அப்பாவி மனிதர்களாகவே அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார்கள்.
மேற்படி நடிகர்களையாவது பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவரை பார்த்திராத மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கும் ஜிந்தா கோபி படத்தின் பின் பாதியில் பிரித்து உதறி இருக்கிறார்.
இவ்வளவு அருமையான நடிகர்கள் நம்மிடையே இருக்கிறார்களா என்று மெச்சத் தோன்றுகிறது. இவர்களுக்கெல்லாம் தொடர்ந்து சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.
நாயகியாக நடித்திருக்கும் அருந்ததி நாயர் கொள்ளை அழகு. அவரை வம்புக்கு இழுக்கும் செம்மலர் அன்னத்தை பல படங்களில் சீரியசாகவே பார்த்திருக்கிறோம் ஆனால் இதில் அவரும் காமெடியில் கலந்து கட்டி அடித்திருக்கிறார்.
அருந்ததி நாயரின் அம்மாவாக நடித்திருக்கும் தமிழ் செல்வி மற்ற ஆண்களிடமிருந்து மகளைக் காப்பாற்ற போராடுவதும் கூட காமெடியாகவே அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பானு முருகன் கிராமத்தையும், மக்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஜோகன் சிவனேஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.
படத்தின் பலமே பாத்திரங்களின் அப்பாவித்தனம்தான். வெள்ளந்தி மனிதர்களின் விவகார பேச்சுகள் எப்போதுமே ரசிக்கத் தகுந்தவையாக இருந்திருக்கின்றன. இந்தப் படத்தில் அதைச் சரியாக பயன்படுத்தி நடிகர்களிடம் அற்புதமான நடிப்பை வாங்கியிருக்கும் ரவி முருகையா பெரிய நடிகர்களின் தேதி கிடைத்தால் இன்னும் பெரிய படங்களாக செய்து உயரத்துக்கு வருவார்.
ரவி முருகையா… நல்லா வருவய்யா..!
இந்தப் படத்தின் திரைக்கதையின் வளமே இதுவரை நாம் பார்த்த படங்களில் சாயல் இல்லாமலும் அடுத்து இதுதான் நடக்கும் என்று எதிர்பார்த்தால் அது இல்லாமல் இன்னொன்றாக நடப்பதுவும் ஆகும்.
முக்கியமாக இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்ற அளவில் பாத்திரங்களில் ஒருவராக எந்த ஹீரோயிசமும் எதிர்பார்க்காமல் நடித்திருக்கும் விதார்த்தின் அர்ப்பணிப்பு பாராட்ட வேண்டிய விஷயம்.
இன்னும் கேட்டால் அவரது அறிமுகக் காட்சியில் ஒரு குளோசப் கூட அவருக்கு வைக்கப்படவில்லை.
ரசிகர்கள் கொடுக்கும் காசுகளுக்கு பாதகம் இல்லாத இந்த…
ஆயிரம் பொற்காசுகள் – காமெடிப் புதையல்..!
– வேணுஜி