September 3, 2026
  • September 3, 2026
Breaking News
September 3, 2026

7 ஸ்டார் பாய்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 7 Views

நெல்லைச் சீமையில் நடக்கும் கதை. அங்குள்ள ஆத்தங்கரை என்னும் கிராமம் எந்த அளவுக்கு உலகத்துடன் போட்டி போட்டு முன்னேறி இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கால்பந்து விளையாட்டில் திறமையும் ஆர்வமாக அந்த கிராமமே ஒரு Football Village ஆக இருக்கிறது

இயக்குனர் நிகில் பிரேம்ராஜ் சொல்லும் கதை 2018 உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டும் நேரத்தில் தொடங்குகிறது. 

கிராமத்தில் ஒருவர் விடாமல் கால்பந்து ரசிகராகவோ விமர்சகராகவோ இருக்க, அங்கு வாழும் பொடியன்கள் ஏழு பேர் உணவை கூட மறுத்து கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த எழுவர் கொண்ட அணி தான் செவன் ஸ்டார்ஸ்..!

அதே கிராமத்தை சேர்ந்த இளைஞரான ஆண்டனி வர்கீஸ் சிறுவயதில் இருந்து கால்பந்து கனவுகளுடன் வாழ்ந்தவர்தான். ஆனால், பெரிய மனிதரின் மகளான ஜுமான் அப்து ரஹ்மானைக் காதலித்து அதன் விளைவாக அவரது கோபத்துக்கு ஆளாகி கால்பந்து விளையாட்டில் உயர முடியாமல் போனவர். அதன் காரணமாக வெளியூர் சென்று விட்ட அவர் இப்போது சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

அவரும் அவரது நண்பர்களும் சிறுவர்களின் கால்பந்து ஆர்வத்தை பார்த்து அவர்களுக்கு உதவ முன் வருகின்றனர். 

முறையான கால்பந்துக்கு தகுதி பெறாத அவர்களுக்கு முன்னாள் இந்திய கால்பந்து வீரரான ஐ.எம். விஜயனை அணுகி சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்க நினைக்கின்றனர். ஆரம்பத்தில் மறக்கும் விஜயன் சிறுவர்களின் ஆர்வத்தையும் திறமையும் பார்த்து அதற்கு ஒத்துக் கொள்ள மாவட்ட அளவிலான ஜூனியர் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு அவர்களை தயாராக்குகிறார். 

ஆனாலும் சுற்றி இருக்கும் சமூகம் அவர்களை அவ்வளவு எளிதாக அந்த இடத்துக்கு போக விடவில்லை. இந்த சூழ்நிலையில் 7 ஸ்டார்  அணி களத்தில் நினைத்ததை சாதிக்க முடிந்ததா..? என்கிற திரில்லுடன் ஆண்டனி வர்கீஸ் காதல் என்ன ஆனது என்பதையும் சொல்லும் படம்தான் இது.

நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ் தான் ஒரு ஹீரோ என்பதையெல்லாம் மறந்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதலியின் திருமண ஏற்பாட்டில் அவர்களது வீட்டுக்குள்ளேயே அவர் புகுந்து செய்யும் அதகளம் அமர்க்களம். 

அத்துடன் ஆரம்பத்தில் சிறுவர்களை வம்புக்கு இழுத்து பின்னர் அவர்களது உயர்வுக்கு காரணமாக புதிய பந்து புதிய மைதானம் புதிய பயிற்சியாளர் என்று எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து தருவதில் அனைவரது அன்பையும் பெறுகிறார். 

இதுவரை பல படங்களில் வில்லனாகவே நடித்துவிட்ட ஐ.எம். விஜயனுக்கு கால் பந்து விளையாட்டு வீரராக இன்னும் குறிப்பாக சொல்லப் போவதனால் அவராகவே நடிக்கும் வாய்ப்பு இந்த படத்தில் வாய்த்து இருக்கிறது.

இடைவேளையில் தான் கதைக்குள் வருகிறார் என்றாலும் அதற்குப்பின் அவர் வரும் காட்சிகள் எல்லாம் அதிரி புதிரியாக இருக்கின்றன.

நாயகியாக நடித்திருக்கும் ஜுமான் அப்துல் ரஹ்மான், ஆண்டனி வர்கீசை கவர்ந்தது ஒன்றும் ஆச்சரியம் இலலை. அவர் நம்மையும் கவரவே செய்கிறார்.

இவர்களுடன் ஆண்டனி வர்கீஸ் இன  நண்பர்களாக வரும் லுக்மான் அவரன், பாலு வர்கீஸ் உள்ளிட்டோர் தங்கள் இயல்பான நடிப்பினால் படத்தின் திரைக்கதைக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்

சிறுவன் டேனிஷ் பி.கே வசீகரத்தால் மட்டுமன்றி உடல் மொழி விளையாட்டு திறமையாலும் நம்மை கவர்கிறான். மெஸ்ஸி மீதான அவனது அளப்பரிய மரியாதை தூங்கும் பது கூட  அவனைத் தூங்க விடாமல் செய்வது அசத்தல்.

அந்த சின்னஞ்சிறு டீம் இன் கேப்டனாக வரும் அமல் அறிமுகமாகும் காட்சியிலேயே ஒரு ஹீரோவுக்குரிய பில்டப்புடன் உள்ளே வந்து ஒரு தலைவனுக்கு உரிய தகுதியுடன் நடந்து கொள்வது ரசிக்க வைக்கிறது.

பெரும் படங்களுக்கு இசையமைக்கும் ஜேக்ஸ் பிஜாய் இந்த பட்ஜெட் படத்துக்கும் ஒத்துக்கொண்டு இசையமைத்திருப்பது ஆச்சரியம். ஆனால் இசையில் எந்த சமன்பாடும் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது திறமைக்குச் சான்று.

ஒளிப்பதிவாளர் ஃபைஸ் சித்திக்கின் பங்களிப்பு தன் இந்த படத்தின் ஹைலைட், ஒரு பக்கம் விளையாட்டு போட்டிக்கு என்று ஒளியமைப்பு கோணங்கள் போன்றவற்றில் வேகம் கூட்டுவதோடு இன்னொரு பக்கம் கிராமப்புற காதலையும் அழகியலுடன் கொடுத்திருக்கும் அவரது பணி நன்று.

படத்தை இயக்கி இருக்கும் நிகில் பிரேம்ராஜின் திறமை வியக்க வைக்கிறது. சிறுவர்களுக்கான படமாக இதை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர், அதை நோக்கியே பாங்குடன் கதையை நகர்த்திச் சென்று இருப்பது சிறப்பு. 

அத்துடன் எந்த இடத்திலும் சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக அந்த கிராமத்தை சுற்றி வந்தது போன்ற நேர்த்தியுடன் படத்தை தந்து இருப்பதும் பாராட்டத்தக்கது. அதிலும் அந்த உச்சகட்ட காட்சி தரும் விறுவிறுப்பு நம் நாடியை அதிகம் துடிக்க வைக்கிறது.

ஐயப்பன் சீசனுக்கு பக்தி படங்கள் வருவது போல் உலக கால்பந்தாட்ட நிகழ்வை முன்னிறுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சற்றே காலதாமதமாகி வெளியாகி இருக்கிறது.

என்றாலும் கால்பந்து பிரியர்கள் எந்த காலத்திலும் இந்தப் படத்தை குடும்பத்துடன் ரசித்துக் இயலும்.

7 ஸ்டார்ஸ் – ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்ஸ்..!

– வேணுஜி