இங்கிலாந்தின் கடல் பகுதியில் ஹோலி தீவில் நடக்கிற கதை. அந்த தீவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் அடைபட்டு கிடக்கிறார்கள். காரணம் ஐரோப்பாவின் பிரதான பகுதியில் ரேஜ் என்ற வகை வைரஸ் தாக்குண்டு ஜாம்பிகள் ஆனவர்கள் சுற்றித் திரிகிறார்கள்.
அவர்கள் கடித்தால் அவ்வளவுதான் – கடிபட்டவர்களும் ஜாம்பிகள் ஆக வேண்டியதுதான். ஹோலி தீவில் வசிக்கும் ஸ்பைக் என்ற பதின் பருவ சிறுவனை சுற்றிதான் நடக்கிறது கதை. அந்த வேடத்தை ஏற்றிருப்பது. அல்ஃபி வில்லியம்ஸ்.
அவனது தந்தையாக வரும் ஆரோன் டெய்லர் – ஜான்சன், ஜாம்பிகளை எப்படி வேட்டையாடுவது என்பதை கற்றுக் கொடுப்பதற்காக ஆபத்தான பிரதான பகுதிக்கு அவனை அழைத்துச் செல்கிறார்.
வில் அம்பு இவைதான் அவர்களுடைய ஆயுதங்கள். அந்த பகுதிக்கு செல்ல வேண்டுமானால் கடல் வழியேதான் பயணப்பட வேண்டும். தீவையும் பிரதான பகுதியையும் இணைப்பது கடலுக்குள் இயற்கையாக உருவாகும் ஒரு பாலம்.
ஆறு மணி நேரம் மட்டுமே அந்த பாலத்தில், நடக்கும் அளவிற்கு தண்ணீர் வற்றி இருக்கும் மற்ற நேரங்களில் கடல் மூடிவிடும்.
இந்த பதற்றம் நிறைந்த பயணத்தில் இருவரும் எப்படி ஆபத்துகளை எதிர் கொள்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க, அல்ஃபி வில்லியம்ஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஜோடி கோமர் கொடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
பிரதான பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க விரும்பும் அல்ஃபி வில்லியம்ஸ் அப்பாவுக்கும், தன் ஊருக்கும் தெரியாமல் அதற்கான முயற்சிகள் எடுக்க அவன் சந்திக்கும் அனுபவங்கள் விசித்திரமாக இருக்கின்றன.
அல்ஃபி வில்லியம்ஸ் அபாரமாக நடித்து நம்மை கவர்கிறான். அவனுடைய தாய்ப் பாசம் உருக வைக்கிறது. அவனது அம்மாவாக நடித்திருக்கும் ஜோடி கோமரின் நடிப்பும் அற்புதம்.
அவர்கள் பயணத்தில் இடையே சந்திக்கும் ஒரு ஜாம்பி பெண், பிரசவ வலியில் துடிக்க அவளுக்கு பிரசவம் பார்க்கும் ஜோடி கோமரின் தாயுள்ளம் நெகிழ வைக்கிறது.
ஆரோன் டெய்லர் – ஜான்சனின் நடிப்பிலும் குறை இல்லை. இறுதிக் காட்சியில் மகனை நினைத்து கண்ணீர் உகுக்கும் அவரது தந்தை உள்ளமும் ரசிக்க வைக்கிறது.
சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் கதையில் இடையில் ஒரு மின்னல் போல் வந்து ரசிக்க வைக்கும் ஜாக் ஓ கானல், பொசுக்கென்று ஜாம்பிகளால் இறப்பதை நாம் நம்புவதற்கு கொஞ்ச நேரம் ஆகிறது.
மருத்துவராக வரும் ரேல்ஃப் ஃபின்னஸின் அனுபவ நடிப்பு கவருகிறது. இறந்து போனவர்களின் மண்டை ஓடுகளால் அவர் உருவாக்கி வைத்திருக்கும் நினைவுத்தூண் பதற வைக்கிறது.
படத்தை இயக்கியவர் இந்தியாவில் நன்கு அறிமுகமாக இருக்கும் ‘ டேனி பாயில் ‘ ( அதே ஸ்லம் டாக் மில்லினர் இயக்குனர்தான்…) என்பதாலும் இந்த வரிசையில் வரும் மூன்றாவது படம் என்பதாலும் இதற்கான எதிர்பார்ப்பு இங்கே எகிறி இருக்கிறது.
படத்தின் முடிவில் ஒரு தற்காப்புக் குழுவுடன் அல்ஃபி வில்லியம்ஸ் இணைய அடுத்த பாகமும் விரைவில் வந்துவிடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
28 YEARS LATER – வினோத அனுபவம்..!
– வேணுஜி