இன்றைய தேதியில் மூன்றாவது கை, கண், காது ஆகிவிட்ட செல்போன்களைத் தவிர்த்து இந்த உலகை நினைத்துப் பாரக்க முடிகிறதா..?
அப்படி ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை… அதற்கான சாத்தியம் இவற்றுடன் இந்த பூமி பல உயிர்களும் வாழ படைக்கப்பட்டிருக்கையில் மனிதன் மட்டுமே அதைச் சொந்தம் கொண்டாட நினைத்துப் பிற உயிர்களை தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அழிக்கும் அவலத்தையும் கலந்து 475 கோடியில் ஷங்கர் படைத்திருக்கும் மாயக்கோட்டைதான் இந்தப்படம்.
தமிழின் உச்ச நட்சத்திரம் ரஜினி, உச்ச இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்… உச்ச இந்தி நட்சத்திரம் அக்ஷய் குமார்… இன்னும் என்னென்ன தொழில்நுட்ப உச்சங்கள் இருக்கின்றனவோ அவற்றைக் கொண்டு உருவாக்கிய சாம்ராஜ்யத்துடன் அந்தக் கோட்டையில் அவரால் வெற்றிக் கொடி ஏற்ற முடிந்திருக்கிறதா… பார்க்கலாம்..!
பறவையினங்கள் மீது பச்சாத்தாபம் கொண்ட பெரியவர் ஒருவர் செல்போன் டவரில் ஏறித் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்த நிகழ்ச்சியாக நகரில் செல்போன்கள் பேசிக்கொண்டிருப்பவர்களின் கையிலிருந்து பறந்து ஆகாய மார்க்கமாகக் காணாமல் போகின்றன. அதில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் போன் உள்ளிட்டு அனைவரின் போனும் அடக்கம்.
தொடர்ந்து செல்போன் வியாபாரி… செல்போன் அதிபர் என்று பலியாகிறார்கள். போலீஸ் கையைப் பிசைய, விஞ்ஞானி வசீகரனான ரஜினி மட்டும் செல்போன்கள் எங்கே எப்படி மாயமாகின எனக்கண்டுபிடித்து அதிலிருந்து மீள கோர்ட் உத்தரவுக்கு உட்பட்டு கழற்றி மியூசியத்தில் வைத்திருக்கும் ரோபோவான ‘சிட்டி’யை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்கிறார்.
ஆரம்பத்தில் அந்த அனுமதியை வழங்க மறுக்கும் மத்திய அமைச்சர், மாநில தொலைத் தொடர்பு அமைச்சரும் செல்போன் வில்லனால் பலியாக, வேறு வழியில்லாமல் அனுமதி தர… என்ன ஆகிறது என்பது கதை.
படம் ஆரம்பமானதில் இருந்து கதைக்குள்ளேயே செல்வதால் தொய்வில்லாமல் முன்பாதி வெகு வேகமாகக் கடக்கிறது. இடைவேளையில்தான் வில்லனாக அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். பின்பாதியில் அவர் யார், அவரது தேவை என்ன… அவரை ‘சிட்டி’யால் அழிக்க முடிந்து ‘சிட்டி’ (ண்ஹகரைக்) காக்க முடிந்ததா என்பது பின்பாதி.
கடந்த ‘எந்திரன்’ படத் தொடர்ச்சியாகவே இதை எடுத்திருக்கிறார் ஷங்கர். முன்னதில் வில்லனான ‘டேனி டென்சோங்பா’ அதில் இறந்து விட்டதால் அவர் மகனாக ‘சுதன்ஷு பாண்டே’ இதில் கொஞ்சம் வில்லத்தனம் காட்டுகிறார். ரஜினியின் முதல் பட காதலி ஐஸ்வர்யா ராய் இதில் மனைவியாக… ஆனால் வெளிநாட்டில் வசிக்கிறாராம். போனில் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்.
இதில் ரஜினிக்கு ஜோடி வேண்டுமே என்று எந்திர லோகத்து சுந்தரி ‘நிலா’ என்ற ஹியூமனாய்ட் ரோபோவாக எமி ஜாக்ஸன் இதில் வருகிறார். ஆக, இந்தப்படத்தில் மனித அழகிகள் எவருமில்லை.
‘சிட்டி’ 2.ஓ வெர்ஷன் ரோபோவை ரஜினி உருவாக்குவதெல்லாம் பெரிய அதிசயமேயில்லை. எழுபதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ரஜினியை படத்தில் இளைஞனாக்கிக் காட்டியிருக்கிறார் பாருங்கள் ஷங்கர்… அதுதான் ஜால வித்தை. அந்த ஒப்பனைக்குப் பொருத்தமாக ரஜினியும் கொஞ்சம் கூட அயற்சி தோன்றாமல் அத்தனை உற்சாகம், துள்ளலுடன் நடித்திருப்பதும் ஒரு உலக அதிசயம்தான்.
அதிலும், வில்லன் ஆக்கப்படும் ‘ரெட் சிப்’ பொருத்தப்பட்ட கெட்ட ‘சிட்டி’யும், கூடவே வரும் ஒரு ‘குட்டி சிட்டி’யும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க முடிகிற ரகம்.
அவருக்கு நிகரான ஒரு பாத்திரம் அக்ஷய் குமாருக்கு. உண்மையை உடைத்துச் சொன்னால் இதில் ரஜினியை விட அக்ஷய் குமாரின் கேரக்டர்தான் அதிகம் கவர்கிறது. நியாயப்படி பார்த்தால் அவர் வில்லனே இல்லை. இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது என்று மன்றாடும் அவர் குரல் எவர் காதிலும் விழவில்லை என்பது கொடுமையான சோகம். அதனாலேயே அவரை ‘சிட்டி’ சம்ஹாரம் செய்யும்போது நம்மால் மகிழ முடியவில்லை. ரஜினி தவறு செய்துவிட்டதாகவே உறுத்துகிறது.
அதை ஷங்கரும் புரிந்துகொண்டுதான் எந்த தமிழ்ப்படத்திலும் வராத அதிசயமாக வில்லனுக்குப் பாஸிட்டிவ்வான பாடல் எல்லாம் வைத்திருக்கிறார். அந்தப் ‘புள்ளினங்காள்…’ பாடலில் மடிந்து போன பறவையினங்களுக்காக மட்டுமில்லாமல் அதை எழுதிய நா.முத்துக்குமாருக்காகவும் நாம் கண்ணீர் சிந்த வேண்டியிருக்கிறது. ‘கிளாஸிக் டச்’ மெலடி அது.
ஏற்கனவே நம் கலாச்சார அழகுடன் ஒத்துப் போகாமலிருக்கும் எமி ஜாக்ஸனை ஒரு எந்திரமாகவும் ஆக்கிவிட்டதால் நம் ரசனையிலிருந்து ரொம்பவும் விலகியே நிற்கிறார் எமி. ரஜினிக்கும், எமிக்குமான காதல் டூயட்டைக் கூட கடைசியில் வைத்திருக்கிறார் ஷங்கர்.
ஷங்கர் படத்தில் வழக்கமாக இருக்கும் அழகியலும், நகைச்சுவையும் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்.
எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும் தமிழக அமைச்சர்கள் படிப்பறிவில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள் போல… அவர்களது பி.ஏக்களும் அப்படியே. அறிவியல், அரசியல், வர்த்தகம், அமானுஷ்யம் எல்லாம் கலந்து சொல்லப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் எழுத்தாளர் சுஜாதா இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. அனுபவம், அறிவு இணைந்த அவரது இடம் தமிழ் சினிமாவில் நிரப்பப்படாமலேயே இருக்கிறது. அது ஷங்கரைப் போன்ற பிரமாண்ட இயக்குநர்களுக்கு பெருத்த இழப்பு.
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய. ஆனால், அதில் ஹாலிவுட்டைத் தொட இன்னும் செலவு செய்யவேண்டும் போலிருக்கிறது. ஆனால், 3டி காட்சிகள் அதி அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை பிரமாண்டப் படத்துக்கான நீரவ் ஷாவின் 3டி மெனக்கெடல் அதில் அதிகம் என்பது சொல்லாமலேயே புரிகிறது.
வழக்கமாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 5 பாடல்களாவது கொடுப்பார் ஷங்கர். இதில் அதுவும் மிஸ்ஸிங். ஆனால், கிடைத்த 2 பாடல்களில் தன் திறமையைக் காட்டியிருக்கும் அவர் பின்னணி இசையில் ஹாலிவுட்டுக்கு ஈடாக மிரட்டியிருக்கிறார். மிகப்பெரிய முயற்சியான இந்தப் படத்தில் தொழில்நுட்பக் கலைஞரக்ளின் உழைப்பும் பாராட்ட வைத்திருக்கிறது.
2 பாயிண்ட் ஓ – பார்க்க வேண்டிய படம்… புரிந்து கொள்ள வேண்டிய செய்தி..!
– வேணுஜி