காலம் காலமாக பள்ளி ஆண்டு விழாக்களில் இன்றைய சமூகத்தில் காலம் சென்ற பெருந்தலைவர்கள் நேரில் வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் நாடகம் போடுவார்கள்.
கிட்டத்தட்ட அதே கற்பனையில் காலம் சென்ற அறிவியல் அறிஞர் அப்துல் கலாமை நவீன பொழுதில் அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால் நமக்குத் தெரிந்த அப்துல் கலாமாக அல்ல ; பள்ளி இறுதி முடித்த பாலகனாக இதில் கலாம் வருகிறார்.
ராக்கெட் ஓட்டும் கற்பனையில் இருந்தாலும் சூழ்நிலை காரணமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிற நாயகன். இதனால் இயற்பியலில் சாதித்த அறிவியல் அறிஞர் அப்துல் கலாமை தன் முன் மாதிரியாகக் கொண்டு தன் ஆட்டோவில் புகைப்படமாக வைத்திருக்கிறார்.
அவரது அக்காவாக வரும் டிராபிக் போலீஸ் சுனைனா, நமக்கு டல்லடிக்கும்போதெல்லாம் வந்து திரைக்கதை டிராபிக் நகர உற்சாகம் கொடுக்கிறார்.
இந்நிலையில் அவரது ஆட்டோவில் ஒரு நாள் ஒரு பதின் பருவ சிறுவன் ஏறுகிறார். கல்லூரியில் சேர்வதற்காக வந்திருக்கிறேன் என்று அவர் கூற, அதனால் கையில் காசு இல்லை என்றாலும் அவனைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறார்.
அவனுடன் பேசிக் கொண்டு செல்கையில் அவருக்கு ஒரு அறிவியல் ஆச்சரியம் காத்திருக்கிறது. அப்துல் கலாமாக உலகறியப்பட்டவர் அவரது மானவப்பருவத்தில் இயற்பியல் விந்தையில் இசகு பிசகாக இப்போது வந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறார். ஆனால் இந்த சூழ்நிலையில் அவர் எப்படி வந்தார் என்பது பெரிய ஆச்சரியமாக இருக்க.. அதன் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து அவரை மீண்டும் சொந்த ஊருக்கு… அல்ல… சொந்த காலத்துக்கு அனுப்பி வைப்பதுதான் கதை.