November 29, 2026
  • November 29, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • ஆக்டோபஸ் (Zee5 Original) இணையத் தொடர் விமர்சனம்

ஆக்டோபஸ் (Zee5 Original) இணையத் தொடர் விமர்சனம்

By on November 29, 2026 0 1 Views

சமீபகலமாக திரைப்படங்களிலும் சரி இணைய தொடர்களிலும் சரி கோர்ட் ரூம் டிராமாக்கள் நிறைய வலம் வரத் தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில் ஒரு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கிரைம் திரில்லர் இந்த தொடர்.

அன்பு நகர் என்கிற இடம் தான் கதைக்களமாக அமைகிறது. அங்கு வசிக்கும் குடும்பங்கள் ஒரே குடும்பம் போல பாசத்துடன் பழகி வருகிறார்கள்.

இந்நிலையில் நாயகி அர்ச்சனா ரவிச்சந்திரன் குடியிருக்கும் எதிர் வீட்டில் புதிதாக திருமணமான ஜோடியாக அஸ்வின்குமார் சித்து குமரேசன் கூலி வருகின்றனர். ஆரம்பத்தில் அன்பாக இருப்பது போல் அவர்கள் தோற்றம் அளித்தாலும் ஏதோ பிரச்சனை அவர்களுக்குள் இருப்பது தெரிகிறது. குறிப்பாக அஸ்வின் குமார் சித்துவை கொடுமைப்படுத்துவதாக அர்ச்சனா உணர்கிறார். 

அதைத்தொடர்ந்து அஸ்வின் குமாருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கும் அர்ச்சனா அதை சித்துவிடும் சொல்லவும் செய்கிறார்.

இதற்குப் பின் ஒரு நாள் இரவில் அவர்கள் வீட்டில் சித்து அலறுவதைக் அந்த நகர்வாசிகள் கேட்க நேர்கிறது. அதிலிருந்து அவர் அந்த வீட்டில் இருந்து மாயமாகி விடுகிறார். 

எது அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளும் நகர்வாசிகள் போலீசுக்கு போகிறார்கள். விசாரணையில் தனக்கு திருமணமே ஆகவில்லை என்று மறுக்கிறார் அஸ்வின் குமார். சந்தர்ப்பங்களும் அவருக்கு சாதகமாகவே இருக்கின்றன.

போலீசை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று புரிந்து கொள்ளும் அந்த நகர்வாசிகள் அவர்களே அதன் பின்னணியை துப்பறிய தொடங்குகிறார்கள். அதில் கிடைக்கும் சாட்சியம் ஒன்றின் மூலம் நீதித்துறையை நாட, எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று வெளியே வருகிறது அது என்ன என்பதுதான் இந்த தொடரின் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் குமார், மர்மமான மற்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற சவாலான கதாபாத்திரத்தை மிக சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். குறிப்பாக கண்கள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்துபவர், தனது ஒவ்வொரு அசைவுகள் மூலமாகவும் தனது கதாபாத்திரத்தின் மீதான பிம்பத்தை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அதை தன் வாழ்க்கையோடு பொறுத்தி, அவ்வபோது அதை வெளிக்காட்டும் இடங்களில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். உண்மை தெரிந்தப் பிறகு, தவறான கண்ணோட்டத்தால், தன்னை சுற்றி கட்டமைக்கப்பட்ட தடைகளை உடைத்தெறிய முட்படுவதும், அதற்கு எதிரானவர்களை எதிர்கொள்வதும் என்று முதிர்ச்சியான நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த தொடருக்கும் பெரும் பலமாக பயணித்திருக்கிறார்.

வினோத் கிஷன் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்து பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறார். அவரது காதலியாக நடித்திருக்கும் கலைவாணி பாஸ்கரின் திரை இருப்பு தொடருக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

குடியிருப்பு வாசிகளையே துப்பறிவாளர்களாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கும் கண்ணா.ஆர், சஸ்பென்ஸ் கிரைம் திரில்லரை நாடகத்தன்மையோடு படமாக்கிய விதம், மற்ற சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் தொடர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.

இந்த துப்பறியும் தொடரில் மர்மம் நிறைந்த மனிதர்களின் பின்னணியையும் தன் பின்னணி இசை மூலம் மிக சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி.

ஒரு சாதாரண குடியிருப்பு மக்களே துப்பறியும் நபர்களாக மாறும் விதத்தையும், நீதிமன்றக் காட்சிகளில் வரும் திருப்பங்களையும் மிக சரியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஜெயசந்திர ஹஸ்மி, ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், வினோத் கிஷன் ஆகியோரின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் துப்பறியும் நபர்களாக மாறும் குடியிருப்பு வாசிகளின் இயல்பான நடிப்பு தொடரின் மிகப்பெரிய பலம்.

முதல் இரண்டு அத்தியாயங்கள் மெதுவாக நகர்வதும், சில காட்சிகள் தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டிருப்பதும் தொடரின் பலவீனம். இதை தவிர்த்திருந்தால் தொடர் இன்னும் கூர்மையாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மர்மம் எவ்வாறு சுற்றி வளைக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜெயச்சந்திரா ஹாஷ்மி. அதன் பின்னணியில் இருக்கும் சமூக பிரச்சனையை அழுத்தமாக பேசி மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஆக்டோபஸ் – சுற்றி வளைத்த நீதி..!

– வேணுஜி