‘ஆண்டவன் கட்டளை’ கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன எமன் கட்டளை..? யாருக்கு யாரிடம் என்ன நடக்கவேண்டுமோ அதைத்தானே அவரவர்களிடம் கட்டளையிட முடியும்..?
அப்படி படத்தின் நாயகன் அன்பு மயில்சாமி, தன் திரைப்படக் கனவை செயல்படுத்த, ஒரு பெண்ணின் திருமண நகைகளைக் களவாடி அதன் காரணமாக திருமணம் என்று போய் மணமகளும் அவள் தந்தையும் தற்கொலைக்கு முயல்கிறார்கள்.
தான் செய்த தவறை எண்ணி அன்பு மயில்சாமியும் தற்கொலை செய்து கொள்ள, எமலோகம் செல்கிறார் அவர். அங்கே எமன் விசாரணையில் அவர் உண்மையை ஒத்துக் கொள்ள, “மணப்பெண்ணும் அவள் தந்தையும் சாகவில்லை… எனவே நீ சென்று அவள் திருமணத்தை 60 நாள்களில் முடிக்க வேண்டும்..!” என்று (கண்டிஷன்ஸ் அப்ளை கலந்து…) கட்டளை இடுகிறார். அப்படி முடிக்காவிட்டால் தலைவெடுத்து சாவாய் என்று சாபமும் இடுகிறார்.
சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாத காமெடிக் கதைதான் இது. பல முன்னணி நடிகர்களும் இதுவரை தமிழ் சினிமாவில் ஏற்ற எமன் வேடத்தில் இதில் ‘நெல்லை சிவா’ வரும்போதே தெரிகிறது, எம லீலைகள் எப்படி ‘நெல்லை ஸ்டைலில்…’ இருக்கும் என்று.
அத்துடன் 60 நாளில் அந்த டாஸ்க்கை அன்பு முடிப்பதற்கு ஏதுவாக மூன்று ‘ஹெல்ப் லைன்’களை வேறு எமன் அறிவிக்கிறார். அந்த உதவிகள் மிகவும் சுவாரசியமானவை.
நாம் எதிர்பார்த்தபடியே எமனுக்கு வேறு ஏதும் வேலைகள் இல்லாதவாறு அப்போது வந்து அன்புவிடம் திருமண விஷயம் என்னவாயிற்று என்று கேட்டுச் சென்று கொண்டிருக்க…
எமன் கட்டளைப்படி அன்புவால் அந்த திருமணத்தை முடிக்க முடிந்ததா என்பதுதான் கதையின் முடிவு.
நாயகனுக்கு ஏற்ற உடல்வாகு கொண்டிருக்கும் அன்புவுக்கு இயல்பாக நடிக்கும் வருவது நன்று. அவர் குரல் மட்டும் அவ்வப்போது அவரது தந்தை மயில்சாமியை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
நாயகி சந்திரிகா ரேவதியும் அன்புவுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். ஒரு பக்கம் மாப்பிள்ளைகளாக கொண்டு வந்து அன்பு இறக்கி கொண்டிருக்க… அவர்களையெல்லாம் மறுத்து, ‘உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன்…’ என்று அவர் பிடிவாதம் காட்டுவது நாயகியான அவரது ஸ்தானத்தை உறுதி செய்கிறது.
ஆனால் அவரது விருப்பப்படி அன்பு அவரைத் திருமணம் செய்து கொண்டால் எமனின் கண்டிஷன்களில் ஒன்றின்படி அவர் தலை வெடித்து இறப்பார் என்று இருக்க எப்படிக் கதை முடியப் போகிறது என்கிற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
படமே முழு நீளக் காமெடியாக இருக்க அன்புவின் நண்பனாக வரும் அர்ஜுனும் அவர் பங்குக்குத் தன் காமெடிப் பங்களிப்பை செய்திருக்கிறார்.
அன்புவுக்கு மட்டும் தெரிந்த எம ரகசியம் அர்ஜுனனுக்கும் தெரிய வருவதும், ஆனால் அதை வெளியே சொன்னால் அவரது தலை வெடித்து விடும் என்றும் கண்டிஷன் இருக்க, கூடுதல் கலகலப்பு.
இவர்கள் தவிர படத்தில் பாண்டு, ஆர் சுந்தர்ராஜன், டி பி கஜேந்திரன், அனுமோகன், பவர் ஸ்டார் உள்ளிட்ட காமெடியன்கள் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் வந்து போய்க் கொண்டிருப்பது படத்தைத் தேக்கமின்றி எளிதாக நகர்த்திச் செல்கிறது.
வில்லனாக கராத்தே ராஜா அவ்வப்போது வந்து மிரட்டி விட்டு செல்கிறார்.
ஒளிப்பதிவாளரும், படத் தொகுப்பாளரும் தங்கள் பங்கில் குறை வைக்காமல் செய்திருக்கிறார்கள்.
என்.எஸ்.கேவின் இசையில் பாடல்கள் படம் முடிந்தும் கூட நம்மை முணுமுணுக்க வைக்கிறது.
உள்ளதை வைத்துக்கொண்டு குறையின்றி ஒரு நியாயமான காமெடிப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ராஜசேகர்.
எமன் கட்டளை – இயல்பான நகைச்சுவை..!
– வேணுஜி