September 20, 2024
  • September 20, 2024
Breaking News
August 6, 2023

வெப் திரைப்பட விமர்சனம்

By 0 269 Views

நட்டி நடராஜ் நடிக்க ஒத்துக் கொள்ளும் கதைகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும் என்பது பொதுவான மதிப்பீடு. அப்படி இந்த படத்துக்குள்ளும் ஒரு விஷயம் இருக்கும் என்று எதிர்பார்த்துதான் படத்தைப் பார்க்க ஆரம்பித்தோம்.

இருந்தாலும் அவர் நடித்த சில படங்களில் அந்த விஷயம் கேள்விக்குறியானதும் உண்டு.

இந்தப் படத்தில் அவரை அப்படி நடிக்க ஒத்துக் கொள்ள வைத்த விஷயம் என்ன என்பதைக் கடைசி பாராவில் பார்ப்போம்.

கதைப்படி படத்தின் நாயகியான ஷில்பா மஞ்சுநாத் மகா அராத்து பார்ட்டி. ஐடி துறையில் வேலை செய்யும் அவரும், அவரது தோழிகளும் எந்நேரமும் பார்ட்டியும் பப்புமாக… அதையும் தாண்டி போதை மருந்துகளையும் பயன்படுத்தும் புண்ணியவதிகளாக இருக்கிறார்கள்.

அவர்களின் தோழி ஒருத்திக்கு அலுவலக நண்பர் ஒருவருடன் காதல் திருமணம் நடக்க, திருமணத்திற்குப் பின் வேலைக்கு வரும் அவருக்கு பார்ட்டி வைக்கும் முகமாக பப்புக்கு போகிறார்கள். அங்கே முடிந்த மட்டும் சரக்கு மற்றும் போதை மருந்து எடுத்து விட்டு லந்துடன் காரில் சென்று கொண்டிருக்கையில் யாரோ அவர்களைக் கடத்துகிறார்கள்.

நால்வரும் போதை தெளிந்து கண் விழித்துப் பார்க்கையில், படுக்கையில் கட்டிப் போடப்பட்டு, பாழடைந்த ஒரு கட்டடத்துக்குள் இருப்பது புரிகிறது. அவர்களைக் கடத்தி வைத்திருப்பவர் நட்டி.

அத்துடன் இன்னொரு பெண்ணை உள்ளே அடைத்து வைத்து கோபம் வரும் போதெல்லாம் போய் அடித்து உதைத்து விட்டு வருகிறார். எதற்காக அவர் அப்படியெல்லாம் இவர்களைக் கொடுமைப்படுத்துகிறார் என்பதற்குக் கண்டிப்பாக ஒரு ‘பிளாஷ் பேக்’ இருக்க வேண்டும் இல்லையா..?

அப்படி ஒரு பிளாஷ் பேக் இடைவேளைக்குப் பின் வருகிறது. அந்த விஷயத்தை இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருந்தால் நட்டி செய்யும் இந்த பாதகச் செயல்களுக்கு ஒரு பலன் இருந்திருக்கும் என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, எதிர்பாராத ஒரு திருப்பத்தைக் கொடுத்து படத்தை முடிக்கிறார் இயக்குனர் ஹாரூன்.

அந்த எதிர்பாராத (?) திருப்பத்தில்தான் படத்தின் டைட்டிலுக்கு விளக்கம் நமக்குப் புரிகிறது.

இந்தப் படத்தின் சிறப்பம்சமே ஹீரோ நட்டி ஹீரோவாக இல்லாமல் வில்லனாக வருவதும், நாயகி ஷில்பா மஞ்சுநாத், நாயகியாக இல்லாமல் எதிர்மறை பாத்திரத்தில் வருவதும்தான். இருவரும் ஜோடி போட்டுக் கொள்ளவில்லை… படத்தில் காதல், கடாரங்காய் (எத்தனை நாளைக்கு தான் கத்திரிக்காயை சொல்லிக் கொண்டிருப்பது..?) போன்ற எந்த அம்சங்களும் இல்லை.

போதை எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதைப் புரிய வைக்க முயற்சிடை எடுத்திருப்பதால், இந்தக் கதையை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் போல சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர்.

முரட்டுத்தனமாக வரும் நட்டியின் பாத்திரம் அவருக்கும், நமக்கும் புதிதில்லைதான். அவரது பலம், உக்கிரம் எல்லாம் சரிதான் – ஆனால் அது அவருக்கு இணையான ஆண்களுக்கு நிகராக இல்லாமல் சொத்தையான பெண்களுக்கு எதிராக அமைந்து போவது ஹீரோயிஸத்தைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது.

அதேபோல் அறிமுகமாகும்போதே அம்மாவின் அழைப்பைக் கூட ஏற்காமல் போதை மருந்தை உள்ளே ஏற்றிக் கொள்ளும் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷில்பாவின் தைரியம் பாராட்டத்தக்கது. வேறு எந்த நாயகியாவது இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொள்வாரா என்பது சந்தேகம்தான்.

ஆனால் அவரது குரல்தான் அங்கங்கே மட்டை போட்டு ரன் எடுக்க விடாமல் தடுக்கிறது. 

அவருடன் தோழிகளாக நடித்திருக்கும் அத்தனை பேரும் படம் முழுவதும் கவர்ச்சி போதை ஏற்றுகிறார்கள். ஆனால் அதுவே போதும் என்ற இயக்குனர் நினைத்து விட்டதுதான் திரைக்கதையின் சுவாரசியத்தைக் குறைக்கிறது.

ஒரே லொகேஷனில் நடக்கும் கதை பட்ஜெட்டுக்கு பக்க பலமாக இருக்கும் என்பது உண்மை. ஆனால் பக்காவான திரைக்கதை இல்லாமல் கதையை நகர்த்துவது கடினமான விஷயம்.

நட்டியிடம் மாட்டிக் கொண்டிருக்கும் நான்கு பெண்களும் போதை அடிமைகள்தானே தவிர  முட்டாள்கள் அல்ல – படித்த பெண்கள்தான். ஒரு பெண்ணை நட்டி அடித்துத் துவைப்பதைக் கண்ணால் காணாமல் போனாலும் அவள் அலறுவதை வைத்து அவர்கள் அப்படி நம்பி இருக்கலாம். ஆனால் சுபப்ரியாவை தூக்கிப் போய் அவர் பாலியல் பலாத்காரம் செய்கிறார் என்று ஷில்பா நம்புவதும், ஏன் சுபப்ரியாவே கூட நம்புவதும் நாம் நம்புவதற்கு இடமாக இல்லை.

அத்துடன் நகரின் போலீஸ் கமிஷனர் யார் என்பது கூட அந்தப் பெண்கள் யாருக்குமே தெரியாதா..? அப்படியே தெரியாமல் போனாலும் ஒரு போலீஸ் கமிஷனரையே நட்டி தூக்கி வந்து கொன்று விட்டார் என்பதை அவர்கள் அத்தனை பேரும் நம்புவது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி என்பதை இப்போது நம்புவதைப் போன்றது.

நடக்க முடியாவராக வரும் நடராஜ் (!),  அதற்காகக் கையில் வைத்திருக்கும் ஊன்றுகோலில் பெண்களை அடிப்பதற்காக ஒரு உருண்டை இரும்பை வெல்ட் செய்து வைத்திருப்பதெல்லாம் சரிதான். ஆனால் அதை ஊன்றி நடந்தால் அவர் வழுக்கி விழுந்து விட மாட்டாரா..? என்ன நொண்டி லாஜிக் இது..?

ஷில்பா மஞ்சுநாத்தின் தோழிகளாக வரும் சுபப்ரியா மலர், அனன்யா மணி, சாஷ்வி பாலாதான் படத்தின் கிளாமர் யு.எஸ்.பி. ஒரு சிறிய பாத்திரத்தில் முரளி வருகிறார்.

மொட்ட ராஜேந்திரன் படத்துடன் ஒட்டாமல் மொட்டையாக வந்து போகிறார்.

கார்த்திக் ராஜாவின் இசை என்பது சொன்னால்தான் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப், இண்டோரிலேயே பெரும்பாலும் படம் பிடிக்க நேர்ந்திருப்பதால் அவுட்டோர் கிடைத்த இடங்களில் எல்லாம் சந்தோஷமாக வேலை பார்த்திருக்கிறார்.

வழக்கமாக நாம் எதிர்பார்க்கும் கதையாக முடிந்திருந்தால் இது கொஞ்சம் பழைய படம் போல் இருக்கும் என்று இயக்குனர் ஹாரூன் நினைத்திருக்கலாம் – ஆனால், அதற்காக இவர் கொடுத்திருக்கும் ட்விஸ்ட், அதைவிடப் பழைய சிஐடி சங்கர் காலத்திற்கு இட்டுச் சென்றுவிட்டது.

சரி… நட்டிக்கு இந்தப் படத்தை ஒத்துக் கொள்ளச் செய்திருக்கும் அம்சம் என்னவாக இருந்திருக்கும்..? படத்தின் கதை ‘பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சந்திரமுகி’ என்று அவருக்கு சொல்லப்பட்டிருக்கலாம். உண்மையும் அதுதான்..!

ஆனால், சொல்லப்பட்டிருக்கும் விதத்தில்…

வெப் – சப்..!