May 1, 2024
  • May 1, 2024
Breaking News
July 18, 2022

வாரியர் திரைப்பட விமர்சனம்

By 0 573 Views

எந்த ஆக்ஷன் படத்திலும் இதுவரை நாயகர்கள் என்ன தொழிலை ஏற்றிருந்தார்களோ, அதே தொழிலுடன்தான் வில்லனை எதிர் கொண்டிருநதார்கள். ஆனால், இந்தப் படத்தில் மட்டும்தான் வில்லனை எதிர் கொள்ளவென்று தன் கல்வி, தொழில் எல்லாவரையும் மாற்றிக் கொள்கிறார் நாயகன். இந்த விஷயத்திலேயே இது பிற ஆக்ஷன் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டது என்று உணர்த்துகிறார் இயக்குனர் லிங்குசாமி.

டாக்டர் படிப்பை முடித்துவிட்டு ஹவுஸ் சர்ஜனாக பிராக்டிஸ் செய்யவென்று அம்மா நதியாவுடன் மதுரை வருகிறார் நாயகன் ராம் (பொத்தினேனி). மதுரை அரசு மருத்துவமனையில் அவர் பணியில் சேரும் முன்னரே நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன்வர, சீனியர் டாக்டர் ஜெயப் பிரகாஷின் கருணைப் பார்வையில் விழுகிறார்.

அந்த நேரம் மதுரை குரு என்ற தாதாவின் கைப்பிடியில் இருக்கிறது. அவரது கையாள்கள் அடித்துப் போடும் ஒரு ஆளை இவர் காப்பாற்றப் போக, அவர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். வெறுப்பு நெருப்பாகும் நேரத்தில் குருவின் ஆட்கள் இவரை அடித்து, துவைத்துப் போட்டுவிட்டு போகிறார்கள். அப்போதுதான் ராமுக்கு புரிகிறது, வெறும் ஆற்றலும் கோபமும் மட்டுமே எதிரிகளை அழிக்கும் ஆயுதம் அல்ல என்பது. அதை எடுத்து அவர் மேற்கொள்ளும் ‘பவர் ‘ முயற்சிகள் இதுவரை சினிமாவில் பார்க்காத உத்தி.

ராம் பொத்தினேனியை பார்த்தவுடன் அவர் ரன் படத்து மாதவனை ஞாபகப்படுத்துகிறார். என்ன ஒன்று, மாதவனுக்கு மழித்த முகமாக இருந்தது. இவர் கொஞ்சம் மீசையும் தாடியும் வைத்திருக்கிறார். காதலிக்கும் போது கனிவான பார்வையும், மோதலின் போது முரட்டுப் பார்வையுமாக ராமுக்கு இரண்டு முகங்களுக்கும் வித்யாசம் காட்டத் தெரிகிறது. ஆட்டம் பாட்டிலும் சரி, அடிதடியில் துவம்சம் செய்யும் போதும் சரி, தெலுங்கு ஹீரோவான ராமுக்கு தமிழிலும் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பது புரிகிறது.

அப்சரஸ் போன்ற ஆர்ஜே வாக வந்து நம் அடி மனதில் ‘விசில் ‘ அடித்து விட்டுப் போகிறார் கீர்த்தி ஷெட்டி. அந்த அழகுக்கு அவர் ஏன் வி ஜே ஆகாமல் ஆர்ஜே ஆனார் என்பது புரியவில்லை. கல் கட்டிய புடலங்காய் கணக்காக கவனமாக வார்த்தெடுத்த உடம்பு கீர்த்தி செட்டிக்கு. வயதும் வாளி ப்பைக் கூட்ட காட்சிக்கு காட்சி ‘வாவ் ‘ சொல்ல வைக்கிறார்.

ராம் – கீர்த்தி ஷெட்டி கெமிஸ்ட்ரி பிசிக்கலாகவும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

தொடங்கிய படத்தில் தவிர பெரும்பாலும் ஹீரோவாகவே வலம் வந்த ஆதிக்கு இதில் முரட்டு வில்லன் வேடம். ஒரு ஹீரோவுக்கு வில்லன் வேடமா என்று நினைத்த லிங்குசாமியே அவர் ஏன் அப்படி ஆனார் என்பதற்கான பிளாஷ்பேக்கில் அவர் மீதான நம் பரிதாபத்தை ஏற்படுத்தும் காட்சிகளை வைத்திருக்கிறார். 

அவர் கொல்லும் ஒவ்வொரு உயிருக்கும் ஈடான இன்னொரு உயிராக ஒரு மரத்தை நடச் சொல்லி அவரது அம்மா சொல்லிக் கொடுக்க அவர் தோட்டமெங்கும் 500, 1000 மரங்களைக் காட்டினாலும் அவரை ஹீரோவாகவே பார்த்து விட்டதாலோ என்னமோ, அவர் மீது நமக்கு பயமே வரவில்லை.

ராமின் அம்மாவாக நதியா. அவரது கழுத்துப் பகுதியை மட்டும் மூடிவிட்டால் கதாநாயகியாகவே நடிக்கலாம்.

ரன், சண்டைக்கோழி, வேட்டை என்று அதிரி புதிரியான ஆக்ஷன் படங்களை கொடுத்த லிங்குசாமி இந்தப் படத்திலும் அதற்கு குறை வைக்கவில்லை. முரண்டு பிடிக்கும் ராமை வழிக்கு கொண்டு வருவதற்காக கர்ப்பிணியான சகோதரியுடன் காரில் பயணப்படும் ராமை இரண்டு லாரிகள் விரட்டிக் கொண்டு வந்து மலைமுகட்டில் நிறுத்தி எச்சரிக்கும் ஒரு காட்சியே இந்த படம் எப்படிப்பட்ட ஆக்சன் படம் என்பதற்கான லிங்கு முத்திரை.

இதற்கு ஈடான ஒரு ஆக்சன் ப்ளாக் கிளைமாக்ஸில் இல்லாதது குறையாகதான் இருக்கிறது. இந்த 5 ஜி யுகத்தில் வெறும் கைகளால் ஹீரோவும் வில்லனும் சண்டையிட்டுக் கொள்வதை ஏற்க முடியவில்லை.

அதேபோல் கதை நடக்கும் இடம் மதுரை என்கிறார்கள். மதுரைக்கு பக்கத்தில் ஒரு கிராமம் என்றோ ஆந்திராவுக்கு அருகில் ஒரு ஊர் என்றோ இருந்திருந்தால் லாஜிக்காக நமக்கு பல சந்தேகங்கள் கிளம்பி இருக்காது. செட்டில் மதுரையை பார்ப்பதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது.

டிஎஸ்பிஎன் இசை ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டி வைக்கிறது புல்லட் பாடலுக்கு ஒன்ஸ்மோர் கேட்டாலும் இந்த கியூப் யுகத்தில் அதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. 

ஒளிப்பதிவாளர் வண்ணத்தால் நம்மை அடித்து நகர்த்துகிறார். பிரேம் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாய் விரிகிறது.

பிருந்தா சாரதியின் வசனங்கள் படத்துக்கு பெரிய பலம். ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சியில் தன் அம்மாவிடம் ” ஒரு டாக்டரும் அம்மாவும் மட்டுமே உயிரைக் கொடுப்பது எத்தனை சந்தோஷம் என்பதை உணர முடியும்..!” என்று ராம் பேசும் வசனத்திலும், தன்னைக் சொல்ல வந்தவனைப் பார்த்து முரட்டு ஆதி, “நீ என்னைக் குத்தி நான் செத்துட்டா நீ பிழைச்ச… நீ குத்தி நான் பிழைச்சிட்டா நீ செத்த…” என்கிற வசனமும் டாப் கிளாஸ். நடிகராகவும் வந்து மிளிர்கிறார் பிருந்தா சாரதி.

இது ஒரு உண்மைக் கதையில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை படத்தின் கடைசியில் போடுகிறார்கள். ஆனால் அதை முதலிலேயே போட்டுப் படத்தை தொடங்கி இருந்தால் இன்னும் கதைக்குள் நம்மை இணைத்துக் கொண்டு ரசித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. அதேபோல் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவில் கதையை சொல்லாமல் இயல்பான கதை நகஎத்தலில் சொல்லிச் சென்றிருந்தாலும் படம் நம் மனதில் வேரூன்றி இருக்கும்.

இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒரு கமர்சியல் பேக்கேஜாகவே இதனைத் தந்திருக்கிறார் லிங்குசாமி.

வாரியர் – போலீஸ் டாக்டர்..!