April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இரவின் நிழலுக்காக 98 நாட்கள் 72 செட்கள் 4000 தொழிலாளர்கள் – ஆர்.கே.விஜய் முருகன் சாதனை
July 18, 2022

இரவின் நிழலுக்காக 98 நாட்கள் 72 செட்கள் 4000 தொழிலாளர்கள் – ஆர்.கே.விஜய் முருகன் சாதனை

By 0 490 Views

கடந்த வாரம் வெளியாகி இருக்கும் பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள நான் லீனியர் படமான  ‘ இரவின் நிழல்’ படத்தில் மூன்று பேர் முக்கியமாக கவனிக்கப்பட்டார்கள். அதில் முதல்வர் இந்த படத்தை கற்பனை செய்த பார்த்திபன். இரண்டாம் அவர் ஒரே சாட்டில் இந்தப் படத்தை எடுத்து முடித்த சாதனையாளர் ஆர்தர் வில்சன். மூன்றாவது நபர் படத்தில் அற்புதமாக கலை இயக்கத்தை மேற்கொண்ட ஆர் டைரக்டர் ஆர்கே விஜய் முருகன்.

ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானின் பணி படத்தில் சிறப்பாக இருந்தாலும் மேற்படி மூவர்தான் படத்தின் ஜீவனை முடிவு செய்தவர்கள் என்பது தொழில்நுட்பம் அறிந்தவர்களுக்கு புரியும்

படம் பார்த்த திரை உலகப் பிரபலங்கள் அனைவரும் அவரது உழைப்பை அடையாளம் கண்டு பாராட்டுகின்றனர்.

கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகனைச் சந்தித்தோம்.

நீங்கள் எப்போது கலை இயக்குநர் ஆனீர்கள்? சற்றே உங்கள் முன் கதை சொல்ல முடியுமா?

எனக்குச் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள தண்டரை கிராமம்.எனது மாமா சீனிவாசன் பிரபலமான சிற்பி. நிறைய விருதுகள் வாங்கி உள்ளார் .என்னை அவர் தான் வளர்த்தார். எனவே அவரது தாக்கத்தால் எனக்குச் சிறு வயதிலிருந்து ஓவியம், கலை என்று ஆர்வம் வந்துவிட்டது.

என்னை அவர்தான் சினிமாவில் கலை இயக்கம் ஒன்று இருக்கிறது என்று கூறி என்னைச் சினிமாவில் சேர்த்து விட்டார் .நான் 17 வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டேன்.நான் மோகன மகேந்திரன் அவர்களிடம் உதவியாளராக இருந்து சினிமாவுக்கான கலை இயக்கத்தின் தொழில்சார்ந்த பணிகளைக் கற்றுக் கொண்டேன்.

நான் முதலில் பணியாற்றிய படம் சார்லி சாப்ளின்.அதன் பிறகு அரவான், குடைக்குள் மழை, சுறா, பரமசிவம், ஜனா கதை திரைக்கதை வசனம் ஜிகர்தண்டா, இறைவி, விஐபி, மாரி, கோலிசோடா எங்கிட்ட மோதாதே, சத்ரியன் என்று தொடர்ந்து ஐம்பதாவது படமான இரவின் நிழல் வரை பணியாற்றி இருக்கிறேன்.

இரவின் நிழலில் உங்களது கலைஇயக்கம் பலராலும் பாராட்டப்படுகிறது . படத்தில் பாராட்டப்படும் அந்த அரங்க அமைப்புகள் பணி அனுபவங்கள் பற்றி?

இரவின் நிழல் படத்தைப் பொறுத்தவரை அது இரண்டு ஆண்டு காலப் பயணம் என்று சொல்ல வேண்டும். அந்தப் படம் தனக்கான ஆட்களைத் தானே தேடிக் கொண்டது. தானாக அதைத் தேடி வந்த ஆட்களைப் புறந்தள்ளியது என்று தான் சொல்ல வேண்டும்.

இரண்டு ஆண்டு காலம் இயக்குநர் பார்த்திபன் அவர்களுடன் பயணம் செய்து அவர் மனதில் தோன்றிய எண்ணங்களைப் புரிந்து கொண்டு ஏராளமான மாற்றங்களையும் திருத்தங்களையும் மேம்பாடுகளையும் கண்ணெதிரே பார்த்துக் கொண்டு மனதில் ஊறி ஊறி அந்த படத்தோடு ஒன்றி பணியாற்றிய படம் அது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் . நான் பார்த்திபன் சார் அவர்களுடன் 20 ஆண்டுகளாகப் பயணம் செய்கிறேன். அவரது ஐந்து படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய போது கூட முதலில் இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று நான் நினைத்தேன்.

அவர் நினைப்பதெல்லாம் சாத்தியப்படுமா என்று சில சந்தேகங்கள் எனக்கு இருந்தன, அவை கருத்து முரண்பாடுகளாக மாறின. எனவே வெளியேறி விட்டேன்.

ஒரு கட்டத்தில் அவர் இப்படி சினிமாவில் புதிதாக முயற்சி செய்ய நினைக்கும்போது அப்படி நினைப்பதை சாத்தியப்படுத்திப் பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது. இந்த முயற்சி பங்கெடுத்தால் என்ன என்று தோன்றி மீண்டும் வந்து இணைந்து விட்டேன்.அப்படிப் பணியாற்றிய படம் தான் இந்தப் படம்.

இந்தப் படத்திற்காக எத்தனை செட்கள் போடப்பட்டன?

இந்த படத்திற்காக 98 நாட்கள் ஒத்திகை,படப்பிடிப்பு என்று நடந்தது.

23 நாள் முழுமையான படப்பிடிப்பு நடந்தது. 72 இடங்களில் 59 செட்கள் போடப்பட்டன.செட்டின் பின்னிணைப்பாக போடப்பட்ட செட்களையும் சேர்த்தால் 72 செட்கள் வரும்.

இதற்காக நாங்கள் இடம் தேடிப் போன போது கேளம்பாக்கம் அருகே ஒரு இடத்தைக் கண்டுபிடித்தோம். அது 60 முதல் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம். 

ஒரே ஷாட்டில் எடுக்கும் படம் என்பதற்காக உங்களது முயற்சி எப்படி இருந்தது?

வழக்கம்போல சுதந்திரமாக அரங்கமைப்புகள் என்றால் புகுந்து விளையாடி விடுவோம். ஆனால் இது ஒரே ஷாட் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரும் படமாக எடுக்கக்கூடிய திட்டம் என்கிற போது அனைவரையும் ஒரு பதற்றமும் நிதானமும் கட்டுப்பாடும் நிர்பந்தமும் தொற்றிக் கொண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.யார் பிழை செய்தாலும் முழு படமும் முதலிலிருந்து தொடங்க வேண்டும் என்பதால் அனைவருக்கும் நிர்ப்பந்தம் உண்டு. அதே சமயத்தில் நிதானத்தையும் இழக்கக்கூடாது.

அதற்கேற்றபடி தான் இந்த செட்களைப் போட வேண்டும். கேமரா முதல் காட்சி ஒளிப்பதிவு செய்ய ஆரம்பித்ததில் இருந்து இறுதிக்காட்சி முடியும் வரை தங்கு தடையின்றி அந்தக் கேமரா பயணம் செய்யுமாறு கேமராவின் பயணத்துக்கு ஏற்றபடி அமைக்க வேண்டும். அதில் பல்வேறு வகையான பின்புலங்களையும் நிகழ்விடங்களையும் 1970, 1980, 2000, 2010, 2020 என்று பல்வேறு கால கட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்த அரங்குகள் இருக்க வேண்டும் என்பது பெரிய சவால்தான்.

நான் போட்ட இந்த செட்கள் நகரும்படியாகவும் திறந்து மூடும் படியாகவும் படப்பிடிப்புக்கு ஏற்ற வரையில் வடிவமைப்பது தான் பெரிய சவால் .முன்னே நகர்ந்து வளைந்து ஏறக்குறைய வட்டமாக சுற்றி வரும் நிலையில் இந்த அரங்குகளின் அமைப்பு வேலைகளைச் செய்தோம்.அந்த செட்களை அமைப்பதற்கு இடங்களைக் கண்டறிந்து அடையாளம் இடுவதற்கே 18 நாட்கள் எடுத்துக்கொண்டோம்.

இதைப் போட்டு முடிக்க சுமார் 4000 தொழிலாளர்களின் உழைப்பு நாட்கள் தேவைப்பட்டது.

படப்பிடிப்பு நடக்கும்போது எனக்கு உதவியாக சுமார் 30 உதவியாளர்கள் இருக்க வேண்டும். அவ்வளவு பேருக்கும் ஊதியம் கொடுப்பதும் பெரிய சவாலாக இருந்தது. எனவே கவின் கலைக் கல்லூரி மாணவர்களை உதவியாளர்களாக வைத்துக் கொண்டேன்.

ஒருமுறை செட் போட்டுவிட்டு எப்போது வேண்டுமானாலும் அதில் படப்பிடிப்பு நடத்தலாம் என்கிற நிலை இதற்கு உதவாது .ஒவ்வொரு நாளும் புதிதாக அதில் வேலை இருக்கும்.

உதாரணமாக ஒரு புல்வெளி போல் படத்தில் காட்சி வரும் அந்தப் புல்வெளிக்கான புல் பத்தைகளை வெளியில் இருந்து கொண்டு வந்து மாலை 4 மணிக்கு அமைப்போம். 6 மணிக்கு வேலை முடிந்ததும் 8 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கும் .மறுநாள் அது வாடி விடும் என்பதால் புதிதாக அது மாதிரி புல்வெளி பதியன்களைக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.

படத்தில் வரும் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் அவ்வப்போது சேதாரம் ஆகும். உடனே அதைச் சரி செய்ய வேண்டும்.

இப்படி அனைவருமே துடிப்புடன் இருந்து ஒத்துழைத்ததால்தான் இந்தப் படத்தை இவ்வளவு வெற்றிகரமாக எடுக்க முடிந்துள்ளது.

பார்த்திபனுக்கு உங்களுக்கும் உள்ள புரிதல் எப்படி இருந்தது?

நான் அவரிடம் 20 ஆண்டு காலமாகத் தொடர்ந்து நட்புறவில் இருக்கிறேன். இது எப்படி சாத்தியம் அவர் ஒரு சிக்கலான குணச்சித்திரம். புதிதாக யோசிப்பவர். புத்திசாலித்தனமாகவும் ஏன் கிறுக்குத்தனமாகவும் மாறுபட்ட பணத்தில் வசிப்பவர் அவரிடம் எப்படி உன்னால் தொடர்ந்து போக முடிகிறது என்று நண்பர்கள் கேட்பார்கள். ஆனாலும் அவர் சினிமாவிற்காக எதையும் செய்யக் கூடியவர் என்கிற அவருடைய இயல்பைப் புரிந்து கொண்டு நான் பயணம் செய்கிறேன்.

கலை இயக்குநராக இருந்து கொண்டு படத்தில் அவ்வப்போது முகம் காட்டுகிறீர்களே எப்படி?

“என்னை முதலில் நடிகனாக்கியவர் விஜய் மில்டன் தான் .கோலிசோடா படத்தில் ஏற்கெனவே பணியாற்றிய கலை இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்ததால் என்னை உதவிக்கு அழைத்தார் .என்னுடைய அசைவுகளையும் உடல் மொழியையும் பார்த்துக் கொண்டு விட்டு என்னைப் படத்தில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு சாணிக்காயிதம் வரை சில படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடிகர் ஆனது ஒரு விபத்து போலத்தான்.

ஆனால் போகப்போக பலரும் சொன்ன கருத்துக்களை வைத்து என்னை நானே மேம்படுத்திக் கொண்டு ஒரு வளரும் நடிகராக இருந்து வருகிறேன்.

இதுவரை ஏழு படங்கள் நடித்துள்ளேன் .இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறேன்.

நான் எதிர்கொள்ளும் மனிதர்கள் என்னை எங்கோ பார்த்த ஞாபகம் கொண்டு விசாரிக்கிறார்கள்.இப்போதும் நடிக்க அழைப்புகள் வருகின்றன.ஆனால் மனதளவில் எனக்குப் பிடித்தால்தான் அதில் நடிப்பேன்..!”

இரவின் நிழல் படம் சார்ந்த மறக்க முடியாத பாராட்டு எது?

படம் இயக்குநர்களுக்காகத் திரையீடு செய்யப்பட்டபோது 50க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் படத்தைப் பார்த்தார்கள் .பலரும் என்னைப் பாராட்டினார்கள், பெயர் குறிப்பிடாமல் கலை இயக்குநர் என்று பலரும் என்னைப் பற்றிப் பாராட்டிச் சொன்னார்கள். பத்திரிகை விமர்சனங்களிலும் என் பெயர் குறிப்பிடப்பட்டு பாராட்டப்படுவதில் மகிழ்ச்சி.

குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் என்னைப் போனில் அழைத்துப் பாராட்டியது மறக்க முடியாதது.

திரையரங்குகளில் படம் பார்க்கிற போது பலரும் என்னைப் பற்றிப் பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது.குறிப்பாக அந்த காளகஸ்தி கோவில் செட் அப்படியே தத்ரூபமாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள்.கலை இயக்கம் என்பது தனியாகத் தெரியக் கூடாது என்பார்கள். ஆனாலும் இப்போது கால மாற்றத்தால் ரசிகர்கள் சினிமா பற்றி தெரிந்தவர்களாக இருப்பதால் அவர்களால் கண்டுகொள்ள முடிகிறது.இருக்கிறார்கள் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனைப் போலவே இந்தப் படத்தில் கிம்பல் கேமரா ஆபரேட்டராக இருந்த ஆகாஷின் உழைப்பையும் யாரும் மறந்துவிடக்கூடாது..!”

“பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்கள் வேலை செய்ய ஆவல் இருக்கிறதா..?”

“நிச்சயமாக இல்லை குடைக்குள் மழை இரவின் நிழல் போன்ற சவாலான படங்களில் சாதித்துக் காட்டுவதில்தான் என் ஆவல் இருக்கிறது..!”

சிறப்பு… விருதுகளுடன் சந்திப்போம் விஜய் முருகன் சார்..!