April 22, 2024
  • April 22, 2024
Breaking News
March 13, 2020

வால்டர் திரைப்பட விமர்சனம்

By 0 1414 Views

கும்பகோணத்தில் நடக்கும் கதை. அங்கு காவல் அதிகாரியாக இருக்கும் நாயகன் சிபிராஜ் வசம் குழந்தை காணாமல் போன புகார் ஒன்று வருகிறது. அதை ஆராயும் பொழுதில் அந்தக் குழந்தை கிடைத்துவிடுகிறது. இதேபோல் இன்னொரு கேஸ் என்று வந்து அந்தக் குழந்தையும் கிடைத்து விடுகிறது. எனவே அவர் குழம்பிப் போகிறார்.

இதுபோன்ற கடத்தலில் குழந்தைகள் விற்பனை, உறுப்புகள் திருட்டு, பிச்சை எடுக்க வைப்பது மற்றும் பாலியல் குற்றங்களுக்காகக் கடத்தப்படுவது என்று பல வழக்குகள் இருக்க, குழந்தை காணாமல் போவதும் பிறகு கிடைத்துவிடுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுடன் கிடைத்த குழந்தைகள் மறுநாள் இறந்தும் போகின்றன.

இதனை ஆராயும்போது சிபிராஜ் சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்களும், அதை முறியடிக்க அவர் எப்படி வித்தியாசமான முடிவெடுத்தார் என்பதையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் யு. அன்பு.

காக்கிச்சட்டை நம் ஹீரோக்களுக்கு புது மிடுக்கைத் தந்துவிடும். அதுபோலவே இதில் சிபிராஜும் புதிய முறுக்குடன் தெரிகிறார். அந்த உயரத்துக்கும், உடற்கட்டுக்கும் காக்கி கச்சிதம். காதலில் ரொமான்ஸ் காட்டுவதுதான் அவருக்குக் கொஞ்சம் சிக்கலாகியிருக்கிறது. அதில் திரைக்கதையும் அத்தனை ஒத்துழைக்கவில்லை.

அவரது சிறுவயதுத் தோழிதான் இன்றைய காதலி ஷிரின் காஞ்சன்வாலா என்கிறார்கள். ஆனால், தன் நலம் பேணும் அவர் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சிபிராஜ் எத்தனை பணிச்சுனையுடன் இருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளவே மாட்டாரா..? பாதி வழிக்காதல், பாதியாகவே இருக்கிறது.

கடுமையான சவாலாக இருப்பார் என்று நாம் எதிர்பார்க்கும் சமுத்திரக்கனியின் வேடம் எதிர்பாராத இடத்தில் முடிந்து விடுவது ஷாக். அதைப்போன்றே இடைவேளையில் அறிமுகமாகும் நட்டியின் வேடமும் எதிர்பாராத அதிர்ச்சியும், அழுத்தமும் கொண்டிருக்கிறது. சிபிராஜுக்கு சமுத்திரக்கனி கொடுக்காத எதிர்ப்பை இவர் கொடுப்பார் என்று புரிகிறது. இருந்தாலும் அந்தக் கடைசி நேர ட்விஸ்ட் எதிர்பாராதது.

பவாசெல்லதுரைக்கு முக்கிய வில்லன் வேடம். அவரது உணர்ச்சியில்லாத முகம் சில வேளைகளில் சரியான உணர்வைத் தந்தாலும் பல வேளைகளில் எந்த உணர்வையும் தரவில்லை. ஒரு சுகாதாரத்துறை அமைச்சர் கெட்டவர் என்று ஒரு காவல் அதிகாரி சொல்லிவிட்டால் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை ஊழியர்களே அவருக்கு எதிராகச் செயல்பட முடியுமா தெரியவில்லை.

ராசாமதியின் ஒளிப்பதிவும், தர்மபிரகாஷின் இசையும் இயக்குநர் என்ன கேட்டாரோ அதை அப்படியே தந்திருக்கின்றன. பின்னணி இசை தேவையே இல்லாத பில்டப்புகளை படம் நெடுகக் கொடுத்திருக்கிறது.

படத்தின் முக்கியமான புதுமை மனிதனின் ரத்த வகைகளில் புதிய வகை ரத்தத்தை இயக்குநர் அறிமுகப்படுத்தியிருப்பது. அந்த ‘ரேர் பிளட் குரூப்’ கொண்டவர்களின் சிக்கல் இதுவரை எந்தப்படத்திலும் சொல்லப்படாதது. ஆனாலும், பிறந்த இரண்டு குழந்தைகளின் உடலில் இருந்து பெறப்படும் ரத்தம், வளர்ந்த ஒரு முழுமனிதனின் தேவைக்குப் பயன்பட சாத்தியமேயில்லை.

பின்பாதியில் வேகமெடுக்கும் திரைக்கதை, முன்பாதியிலும் அதே வேகத்துடன் கைகொடுத்திருந்தால் இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும். “என் சாவை நான்தான் முடிவு பண்ணுவேன்னு என் ஜாதகத்திலேயே இருக்கு…” என்று வில்லன் சொல்ல, “உன் ஜாதகத்தை நான் திருத்தி எழுதிட்டேன்…” என்று சொல்லி சிபிராஜ் வழங்கும் தண்டனை வித்தியாசம்.

ஆட்சியாளர்களின் ஏவல் துறையாகத்தான் காவல்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை மாற்ற முடிவெடுத்த அளவில் அதற்கு அந்தக் கிளைமாக்ஸ் பயன்பட்டிருக்கிறது. 

வால்டர் – என் ரத்தத்தின் ரத்தமே..!