April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் – விஷ்ணு விஷால்
March 22, 2021

ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் – விஷ்ணு விஷால்

By 0 417 Views

நடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது…

சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் ‘காடன்’ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ வெளியாகவிருக்கிறது. ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். ‘ஜீவி’ படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறேன். 

இந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். திருமண தேதி இன்னும் தீர்மானிக்கவில்லை. முடிவான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். 

‘ராட்சசன்’ படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இருந்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கும், சூரிக்கும் இடையிலான பிரச்சினை குறித்து…?

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து விரிவாக பதிலளிக்க இயலாது. இருப்பினும் எனக்கோ என்னுடைய தந்தைக்கோ சூரியின் நிலம் தொடர்பான பண பரிவர்த்தனை விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் உண்மை. இந்த விவகாரத்தில் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தந்தையின் காலில் விழுந்து வணங்கி, ‘நீங்கள் தான் என்னுடைய கடவுள்’ என்று சொன்ன ஒருவர், தற்போது என் மீதும், என்னுடைய தந்தை மீதும் புகார் அளித்திருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தந்தையை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் சூரியின் புகாரின் காரணமாக அவர் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விட்டார். இதை ஒரு மகனாக பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.

உங்களது திருமணம் குறித்து..?

அவர்கள் பெயர் ஜுவாலா குட்டா. பேட்மிட்டன் வீராங்கனை. தற்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறார். திருமண தேதி முடிவானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.

எனக்கு காதல் மீது நம்பிக்கை போய்விட்டது. நான்காண்டு காதல், ஏழு ஆண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். நான் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டிருந்த பொழுது அவர்கள் என்னுடைய உணர்வை மதித்தார்கள். அவர்கள் அடிப்படையில் விளையாட்டு வீராங்கனை என்பதால், அவர்களின் நேர்மறையான அணுகுமுறை என்னை கவர்ந்தது.

அவர்கள் ஹைதராபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவி நிர்வகித்து வருகிறார்கள். எனக்கு அவர்கள் ஆதரவாக இருந்ததைப் போல், நானும் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆதரவாக இருக்க விரும்புகிறேன். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்டப்போது, அதனை திரைப்படமாக தயாரிக்கலாமா..! என்று கேட்டேன்.

அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருக்கிறதா? எனக் கேட்டார். இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் அவர்களுடைய சுயசரிதையை திரைப்படமாகத் தயாரிக்க விரும்புகிறேன்.

உங்கள் மீது நீங்கள் குடியிருக்கும் வீட்டின் அக்கம்பக்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்களே.. அதுகுறித்து..?

புகார் என் மீதல்ல. என்னுடைய வீட்டின் உரிமையாளர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பிறகு புகார் கொடுத்தவரிடம் நான் தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டேன். அதன் பிறகு அவரும் நானும் இன்றுவரை இயல்பாக பேசிக் கொண்டிருக்கிறோம்.

அன்று இரவு என்னுடைய அறையில் நான் பணியாற்றும் படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பிறந்தநாள் என்பதால், அவருக்கு பார்ட்டி கொடுத்தோம். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்கூட்டியே 6 பேர் மட்டுமே கலந்துகொண்ட பார்ட்டி அது. இதை போலீஸிடமும் தெரிவித்து விட்டோம்.

அவர்களும் விசாரித்துவிட்டு, புகார் கொடுத்தவரிடம் விளக்கம் கொடுத்து விட்டு சென்று விட்டனர். நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால், புகார் கொடுத்தவர் ஏதேனும் வேறு வழியில் பழி வாங்கி விடுவாரோ என்ற அச்சம் அவருள் இருந்தது. அந்த அச்சத்தை அவரிடமிருந்து களைந்தேன். தற்போது நட்பு பாராட்டி வருகிறார். 

ஒரு தந்தையாக என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் என் தந்தை. எனக்காக பலரின் காலில் விழுந்ததும் எனக்குத் தெரியும். தற்போது எனக்கு நடந்தவற்றை நினைத்துப் பார்க்கும் பொழுது நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

 ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கதாநாயகன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என கமர்சியல் படங்களை தயாரித்தேன். இதில் வெற்றியும் கிடைத்தது. தோல்வியும் கிடைத்தது. அதன் பிறகு ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதுபோன்ற உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதையை நாமே தயாரிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் தற்போது ‘எஃப் ஐ ஆர்’, ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறேன.

“உங்களை போன்ற நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

நான் ‘ராட்சசன்’ படத்தில் நடிக்கும் பொழுது 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்துக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் மற்றொரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன்.

‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒன்பது படங்களிலிருந்து நான் நீக்கப்பட்டேன். ராட்சசன் படப்பிடிப்பின் போதுதான் என்னுடைய மனைவி விவாகரத்து கோருகிறார். இருந்தாலும் 25 நாட்கள் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன். 

காடன் அனுபவம்?

எல்லா எமோஷன்களையும் கொண்ட இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். யானையுடன் பணியாற்றியது மறக்க முடியாத சம்பவம். இயக்குநர் பிரபுசாலமனுடன் பணியாற்றியதும் மறக்க முடியாதவை தான். அவருடைய ஸ்டைலே தனி..!”