September 20, 2024
  • September 20, 2024
Breaking News
May 5, 2023

விரூபாக்ஷா திரைப்பட விமர்சனம்

By 0 344 Views

தெலுங்கில் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த இந்தப் படம் அதே சூட்டோடு, அதே டைட்டிலுடன் தமிழுக்கு வந்திருக்கிறது.

கானகம் சூழ்ந்த ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அந்த கிராமத்தில் தொடர்ந்து குழந்தைகள் இருந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்துக்கு புதிதாக வந்து குடியேறிய வெங்கடாசலபதி என்கிற நபர் செய்யும் மாந்திரீக வேலைகள்தான் இப்படி குழந்தைகள் இறப்பதற்கு காரணம் என்று புரிந்து கொள்ளும் ஊர் மக்கள் அவரையும் கை, கால் விளங்காத அவரது மனைவியையும் கட்டிப் போட்டு உயிரோடு எரித்து விடுகிறார்கள்.

இப்படியான ஒரு பதட்டத்துடன் தொடங்குகிறது படம்.

எரியும் தருவாயில் வெங்கடாஜலபதியின் மனைவி இந்த கிராமத்தில் உள்ள அனைவரையும் அழிப்பேன் என்று சபதம் ஏற்று உயிர் விடுகிறார். இது நடந்து 12 வருடம் கழித்து அந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட நாயகன் சாய் தரம் தேஜா தன் அம்மாவுடன் அங்கு வருகிறார்.

 

ஊருக்குள் வரும்போதே ஒரு காக்கை அவரது காரில் அடிபட்டு செத்து விழ துர்சகுனமாக அந்த வருகை அமைந்து இன்னும் நம் பதட்டத்தை கூட்டுகிறது.

வந்த இடத்தில் ஊர் தலைவரின் மகள் சம்யுக்தாவை பார்த்து காதல் கொள்கிறார் சாய் தரம் தேஜா. ஆனால் அவரது காதல் வலைக்குள் விழாமலேயே தப்பித்துக் கொண்டிருக்கும் சம்யுக்தாவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவது வாடிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் திருவிழாவில் வைத்து கோயிலுக்குள் ஒருவர் இறந்து போக அந்த ஊர் வழக்கப்படியே முன்னோர் எழுதி வைத்த குறிப்புகளை படித்த பூசாரி அந்த கிராமத்துக்கு ஒரு காப்பு கட்டுகிறார். அதன்படி அந்த கிராமத்திலிருந்து யாரும் வெளியேறவோ, யாரும் உள்ளே வரவோ கூடாது.

இந்த இக்கட்டான சூழலில் சம்யுக்தாவின் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண் ஒரு வாலிபனை விரும்ப அவர்கள் இருவரும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். ரயில் பிடிக்க காத்திருக்கும் நேரத்தில் அந்த ரயில் மோதி அந்த இளைஞன் செத்துப் போக… அதனைத் தொடர்ந்து பித்து பிடித்தது போல் செல்லும் அந்த பணிப்பெண் ஒரு தேன் கூட்டில் மோதி அந்த தேனீக்கள் கொட்டி உயிர் துறக்க , அவளைப் பார்த்த ஒரு பால்காரர் தற்கொலை செய்து கொள்ள,  அவர் பிணத்தை பார்த்த சாய் தரும் தேஜாவின் சித்தியும் தற்கொலை செய்து கொள்கிறார்.

இப்படி அடுத்தடுத்த கொலைகள் நம்மை உலுக்கிப் போட இதெல்லாம் எதனால் நடக்கிறது என்று கிராமத்தினர் குழம்பும் போது அந்த ஊரின் வெட்டியான் அந்த ஊருக்குள் தீய சக்தி புகுந்து விட்டதாகவும் இனி கிராமத்து மக்கள் ஒவ்வொருவராக மடிவார்கள் என்றும் சொல்ல, கிராமத்தினரின் உயிரைக் காக்க உறுதி எடுக்கும் சாய் தரம் என்ன செய்தார் என்பது மீதி கதை.

சிரஞ்சீவி குடும்பத்து இளைஞனான சாய் தரம் தேஜாவுக்கு சிரஞ்சீவியின் சாயல் இருக்கவே செய்கிறது. ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கும் சாய் தரம், சண்டைக் காட்சிகளை அனாயசமாக ஆக்சன் காட்டியிருக்கிறார். சம்யுக்தாவுடனான காதல் காட்சிகளிலும் ஓகே.

ஆனால் கதைப்படி அவரை விட முக்கியமான பாத்திரம் சம்யுக்தாவுக்கு. அந்த சிறிய கரிய விழிகளை காதலில் பயமுறுத்துவதற்கும் அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார் சம்யுக்தா. இளமையிலும் அழகிலும் அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.

கிராமத் தலைவருக்கு எதிராகவே செயல்படும் குணம் கொண்ட ஒரு வில்லன் போன்ற பாத்திரம் சுனிலுக்கு. ஆனால் படத்தின் வில்லன் வேறாக இருக்க அவர் ஒரு கட்டத்தில் அடங்கி விடுகிறார்.

சம்யுக்தாவின் பின்னணி தெரியவரும் போது நாம் திகைத்துப் போகிறோம். அதேபோல் ஆரம்பத்தில் உயிரோடு எரிக்கப்படும் வெங்கடாஜலபதி உண்மையில் குற்றம் அற்றவர் என்று தெரியும்போது நெகிழ்ந்தும் போகிறோம்.

கிராமத்தில் விழும் ஒவ்வொரு கொலைகளும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. லாஜிக் இல்லாத கதைதான் என்றாலும் அடுத்தடுத்து இடம் பெறும் சம்பவங்கள் நமக்குள் இருக்கும் பாமர ரசிகனைத் தட்டி எழுப்புகிறது.

நமக்கு அப்படி என்றால் காமராஜர் ரசிகர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்..?

ஷாம்தத் ஷைனுதீனின் ஒளிப்பதிவு அபாரம். வண்ணங்களிலும் சரி கோணங்களிலும் சரி நம்மை திகில் அடைய வைப்பதில் இவருக்கு பெரும்பங்கு இருக்கிறது. அதேபோல பி.அஜனிஷ் லோக்நாத் இசையும் மிரள வைக்கிறது. பாடலுக்கான இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சுகுமாரின் திரைக்கதைதான் கண்ணுக்கு தெரியாத ஹீரோ எனலாம். அந்தக் கதையை இன்னும் மெருகேற்றி தன் இயக்கத்தில் முதல் படத்திலேயே முத்திரை படித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு.

விரூபாக்ஷா – நவீன சந்திரமுகி..!