March 1, 2024
  • March 1, 2024
Breaking News
June 11, 2023

விமானம் திரைப்பட விமர்சனம்

By 0 272 Views

“இந்தப் படத்தை பார்க்க வர்ற நீங்க அழுகலேன்னா அடுத்தது இந்த வழிதான்…” என்று ஒரு மூட்டை வெங்காயத்துடன் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுத ஆரம்பித்திருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் சிவ பிரசாத் யனாலா.

இயலாதவர்களின் வாழ்க்கையில் கூட நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் ஒரு  படைப்பின் நோக்கமாக இருக்க முடியும். மாறாக, இயல்பான வாழ்க்கையைச் சொல்லும் கலைப் படங்கள் வேறு வகை. அதில் இயல்பைத் தவிர எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால் இதைப் போன்ற செயற்கையான ‘நெஞ்சை நக்கும்’ படங்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை.

மாற்றுத் திறனாளியாக ஒரு கால் சூம்பிப் போய் இருக்கிறார் சமுத்திரக்கனி. மனைவியை இழந்த நிலையில் ஒரே மகன் மாஸ்டர் துருவனை அன்பு பாராட்டி வளர்த்து வருகிறார்.

அவர்கள் வசிக்கும் குப்பத்தில் இருக்கும் ஒரு கட்டணக் கழிப்பறையை நிர்வகித்து வருகிறார் அவர். அந்தக் குப்பத்துக்குப் பக்கத்திலேயே ஒரு விமான ஓடுதளம் இருக்க அங்கு விமானங்களைப் பார்க்கும் கனியின் மகனுக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்கிற ஆசை வருகிறது.

மகனின் ஆசையை அந்த ‘அன்றாடங் கழுவி’ (அன்றாடங் காய்ச்சிகள் எதைக் காய்ச்சுவார்களோ..? ஆனால் இதில் கனி அன்றாடம் அந்தக் கழிப்பறையை கழுவி சுத்தமாக வைத்திருக்கிறார்) ஏழை அப்பாவால் தீர்க்க முடிந்ததா என்பதுதான் கதை. அது மட்டும் கதை அல்ல. இன்னொரு கதையும் இருப்பதாகத் தெரிகிறது. அது பின்னால்.

ஒரு குப்பம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என்கிற இயல்புத் தன்மை கொஞ்சமாவது வேண்டாமா..? பத்தே பத்து வீடுகள் இருக்கும் (எண்ணிப் பார்த்தால் அதைவிடக் குறைவாகக் கூட இருக்கலாம்…) அந்தக் குப்பத்தில் கட்டணக் கழிப்பறை எல்லாம் சாத்தியமே இல்லை.

கடைக்கு அருகில் இருக்கும் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு ஒரு செருப்பை செப்பனிட்டால் ஐந்து ரூபாய் கிடைக்கிறது என்கிறார் இயக்குனர். அவர் எப்படி ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ கொடுத்து கழிப்பறையைப் பயன்படுத்துவார்..? 

இதில் வசூலாகும் பைசாக்களுக்கு சமுத்திரக்கனி வயிற்றைக் கழுவ மட்டுமல்ல, அந்தக் கழிப்பறையைக் கழுவக் கூட பினாயில் வாங்க முடியாது.

சரி… அதை விடுங்கள். குப்பத்தில் இன்னொரு முக்கியமான நபர் ஆட்டோ ஓட்டுநர். அவர் ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பாதித்து அதில் பெட்ரோலுக்கும், தனக்கும் ஊற்றியது போக மீதி இருந்தால் குடும்பத்துக்குக் கஞ்சி ஊற்றுவாராம்.

இன்னொரு கேரக்டர் பாலியல் தொழிலாளி சொப்பன சுந்தரி.  அந்த குப்பத்தினரின் வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அவரிடம் ஒருவர் போக வேண்டும் என்றால் ஒரு தடவைக்கு ஆயிரம் ரூபாயாம். 

அந்த ஐந்து ரூபாய் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு… இடுப்பும் மடிப்புமாக வளைய வரும் சொப்பன சுந்தரியிடம் போக வேண்டும் என்று ஒரு ‘ எய்ம்’ இருக்க, அதற்காக ஆயிரம் ரூபாய் சேர்க்கப் படாதபாடு படுகிறார்.

ஆக… சிறுவன் விமானத்தில் ஏறினானா, செருப்பு தைக்கும் தொழிலாளி அந்தப் பாலியல் தொழிலாளியின் வீட்டில் ஏறி னாரா..? என்பதுதான் கதை என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படியா யோசிப்பீர்கள்..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதையேதான் நான் இந்த இயக்குனரிடம் கேட்கிறேன். தந்தை மகன் அன்பைச் சொல்லும் ஒரு நெகிழ்ச்சியான படத்தில் இப்படியா ஒரு பாழான (பலான..?) மேட்டரையும்… (ஐய்யையோ) விஷயத்தையும் வைப்பீர்கள்..?

இந்நிலையில் கனியின் மகனுக்கு சைனிக் பள்ளியில் சேர்ந்து படிக்க இடம் கிடைக்க, இனி மகனின் வாழ்க்கையில் வசந்தம்தான் என்று மகிழ்ந்து போகிறார் அவர். ஆனால் சுதாரித்த இயக்குனரோ ‘நாம ரொம்பவும் பாசிட்டிவ்வாக கதையை எழுதி விட்டோமோ..?’ என்று பதறிப்போய் அடுத்தடுத்து சமுத்திரக் கனியின் தலையில் இடிகளை இறக்க ஆரம்பிக்கிறார்.

திடீரென்று பள்ளியில் மயங்கி விழும் சிறுவன் துருவனுக்கு லுகீமியா என்கிற ரத்தப் புற்று நோய் இருப்பது தெரிய வர, அவன் இன்னும் இவ்வுலகில் இருக்கப் போவது கொஞ்ச காலமே என்று புரிகிறது.

இப்போதுதான் கனி ஒரு முடிவெடுக்கிறார். மகன் இறப்பதற்குள் அவனை எப்படியாவது விமானத்தில் ஏற்றி விட வேண்டும் என்று. அதற்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.

ஆனால் படைத்தவனே கொடுக்க நினைத்தாலும் நம்ம படைப்பாளி விட்டு விடுவாரா..? 

ரோடு அகலப்படுத்துவதற்காக கனியின் கழிப்பறை இடிக்கப்பட, இருந்த வேலையும் போன துயரத்தில் மரம் அறுக்கும் கடையில் கனி வேலைக்கு போக, அங்கே திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு போலீசில் மாட்டிக்கொள்ள, மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் இன்ஸ்பெக்டர் அவரை இரண்டு நாள் ஊற வைத்து நொங்கு நொங்கு என்று நொங்கெடுக்க… நோயாளி மகனுக்கு சாப்பாடு கூட கொடுக்க இயலாமல் இவர் இங்கே பதறிக் கசிய…

விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக அவர் மகனை விமான நிலைய அதிகாரி அதே போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வந்து ஒப்படைக்க…

ஐயையோ… அழாதீங்க சார்… இதுக்கே அழுதா எப்படி..? 

அங்கே கட் செய்தால் அழ மாட்டாத சமுத்திரகனிக்கு பொருட்காட்சியில் அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் கோமாளி வேடம் கிடைக்க… ‘ சிஞ்சினுக்கா சின்னக்கிளி…’ என்று எல்லோரையும் சிரிக்க வைத்ததில் காண்ட்ராக்டர் மகிழ்ந்து போய் சில ஆயிரங்களை அவர் கையில் திணிக்க, “விடுடா ஆட்டோவை விமான நிலையத்துக்கு…” என்று போகும் வழியில்…

அதேதான்… ஒரு விபத்து. அத்துடன் விபத்தை ஏற்படுத்தியவனே அவர் கையில் இருக்கும் பணத்தைப் பார்த்து அதையும் பிடுங்கிக் கொண்டு போக…

ஏழரை சனியில் இருப்பவனுக்கு அஷ்டமத்தில் குருவும், லக்னத்தில் ராகுவும் சேர்ந்து கொள்ள… சந்திராஷ்டமம் அன்று எமகண்டத்தில் கிளம்பிப் போனது போல் அடுத்தடுத்து பிரச்சினைகள் வரும் கனியை நினைத்தால்… கல்லும் கனிந்து கசங்கி விடும்..!

இதற்கிடையே இரண்டு முறை துருவன் சீரியஸ் ஆகி, ஐசியூவில் அட்மிட் ஆக… அவன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நாள் கணக்கு மணிக்கணக்காக சுருங்கி விட்டது என்பதையும் இதனுடன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நிற்க… 

இப்போது அந்தக் குப்பத்து மக்களின் வீடுகளுக்கு பட்டா கொடுக்க அதிகாரிகள் கணக்கெடுக்க, பட்டா வந்துவிட்டால் கனியின் குடிசை வீடு இருக்கும் நிலம் சில லட்சங்களுக்குப் போகும் என்ற நிலையில், இப்போதைக்கு போதும் என்று அதை பத்தாயிரத்துக்கு ஒருவருக்கு விற்றுவிட்டு… அதை எடுத்துக்கொண்டு விமான டிக்கெட் போடப் போனால்…

அன்றைக்கு டிக்கெட்டின் விலை 12,000 என்று தெரிகிறது. வேலை போச்சு… வீடும் போச்சு…என்ற நிலையில் கையில் இருக்கும் ஒரே சொத்தான… கையால் இயக்கும் டிரை சைக்கிளை விற்கப் போனால் அதில் ஆயிரம் மட்டுமே தேறுகிறது.

இந்நிலையில் நம்ம செருப்பு தைக்கும் பார்ட்டி சொப்பன சுந்தரியை ‘உஷார்’ பண்ண, ஒரு ஆயிரம் ரூபாயை ‘உஷார்’ பண்ணி வைக்க, அந்த நேரம் பார்த்து கனி குறுக்கே வந்து அவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்க, “என்கிட்ட பணம் ஏது..” என்று பொய் சொல்லிவிட்டு தன் சொப்பனத்தை பலிக்க வைக்க, சொப்பன சுந்தரி வீட்டுக்குப் போய் அவளிடம் அந்தப் பணத்தைக் கொடுக்கிறார்.

சொப். சுந் அந்தப் பணத்தை ஜாக்கெட்டுக்குள் செருகிக் கொள்ள, செ.தொழிலாளி, பா.தொழிலாளியின் மீது பரவசத்துடன் படர, அந்த நேரம் பார்த்து மேலே விமானம் பறக்க…

அந்த விமான சத்தம் செ.தொழிலாளியின் மனசாட்சியை உலுக்கி விட, சடார் என்று எழுந்த அவர் சொப்பன சுந்தரியின் ஜாக்கெட்டுக்குள் இருக்கும் பணத்தைப் பிடுங்கி கொண்டு ஓட, சொப்பன சுந்தரியோ, “நீ வேலை பார்த்தா என்ன… பாக்காட்டி என்ன..? பணம் என்னுடையது..!” என்று அவரை துரத்திக் கொண்டு ஓட…

கனியின் முன்னால் நிற்கும் செ.தொழிலாளி அந்தப் பணத்தை அவரிடம் கொடுக்கிறார். “திடீரென்று பணம் எப்படி வந்தது…” என்று கனி கேட்க… “சொப்பன சுந்தரியிடம் வாங்கி வந்தேன்…” என்று இவர் பதில் சொல்ல, துரத்திக் கொண்டு ஓடி வந்த சொப்பன சுந்தரியின் காலில் ‘ மடேர்’ என்று நன்றிப் பெருக்கில் விழுகிறார் கனி.

கால் இல்லாத மனுஷனே தன் காலில் விழுந்து விட்டானே என்பதில் ஒரு கணம் திடுக்கிட்டுப் போன சொப்பன சுந்தரி, அந்தக் கணமே அதற்குக் காரணமான செ.தொழிலாளி மீது கரிசனம் கொண்டு தன்னை லைஃப் லாங்  ‘வைத்து’க் கொள்ள உடன்பாடு ஒன்றைப் போட்டு ‘ஸ்பாட் செட்டில்மெண்ட்’ கொடுக்கிறார்.

எந்த பி.வாசு, எஸ்.முத்தையாக்களும் யூகித்துப் பார்க்க முடியாத சென்டிமென்ட் ட்விஸ்ட் அது.

இத்தனை இடிபாபாடுகளுக்குப் பிறகாவது இயக்குனர் வக்கிர நிவர்த்தி அடைந்து அந்தக் குழந்தையை விமானத்தில் ஏற்றி சுற்றிக் காண்பித்தாரா என்றால்…

அந்த மனுஷனை அவர் வைத்திருக்கும் அதே வெங்காய மூட்டைக்குள்ளேயே காற்றுப் புகாமல் கட்டி அதே விமானத்தில் ஏற்றி, கடலுக்கு மேல் விமானம் பறக்கையில் தள்ளி விட்டால் தப்பில்லை.

குலுங்கிக் குலுங்கி நான் சிரித்துப் பார்த்த இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்து உங்களுக்கு அழுகை வந்தால் நீங்கள்தான் இந்தப் பட இயக்குனரின் டார்கெட்… 

விமானம் அவருக்குத் தந்த வெகுமானமும் அது..!

– வேணுஜி