July 18, 2024
  • July 18, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கொரோனா தடுப்பில் கிருமி நாசினி தெளிக்கும் நிஜ ஹீரோ விமல்
April 1, 2020

கொரோனா தடுப்பில் கிருமி நாசினி தெளிக்கும் நிஜ ஹீரோ விமல்

By 0 538 Views

ஹீரோ விமல், நேற்று தனது சொந்த ஊரில் கொரோனா தடுப்பு பணியில் தன்னுடைய கிராமத்து இளைஞர்களுடன் களத்தில் இறங்கினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பைச் சேர்ந்த விமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றதோ, அதே போல் தோளில் ஒரு எந்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.

நிஜவாழ்வில் தன் கிராமத்தில் கொரோனா களப்பணியில் நடிகர் விமல் இறங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவரிடம் பேசியபோது…

“ நான் ஷூட்டிங் இருக்குறப்ப மட்டும்தான் சென்னைக்கு வருவேன். மத்த நேரத்துல கிராமத்துல அம்மா, அப்பா, மனைவிகூட இருக்கிறதுதான் வழக்கம். அந்த வகையிலே மணப்பாறை பக்கத்துல இருக்கற என் கிராமத்துக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு.

இங்க ஊரடங்கு உத்தரவை எல்லாரும் கடைப்பிடிக்குறாங்க. முதல்ல மக்களுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்ப கொஞ்சம் பரவாயில்ல. ஆனா, ஊரடங்கு அறிவிச்ச கொஞ்ச நாளைக்கு பசங்க யாரும் அடங்கல. கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாம இருந்தாங்க.

`அடப் போப்பா கொரானாவாம்.. நமக்கெல்லாம் வராது பா… நம்ம ஊருக்கு எப்படிப்பா வரும்’னு அலட்சியமா பெரியவங்கள்ல இருந்து சின்னவங்க வரைக்கும் இப்படிதான் சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க.

இப்ப ஓரளவு தெளிஞ்சிட்டாங்க. மதுரை, கும்பகோணம் பக்கத்துல கொரோனாவால நடந்த பாதிப்பைப் பார்த்துவிட்டு, `கொரோனா நம்மளை நெருங்கிக்கிட்டிருக்கு’னு உணர ஆரம்பிச்சிருக்காங்க.

வெளியே பைக் எடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டிருந்தவங்களை போலீஸ் எச்சரித்து அனுப்பி வெச்சாங்க. உண்மை நிலவரத்தைச் சொன்னதுக்குப் பிறகு, கொஞ்சம் பரவாயில்ல. இப்போதைக்கு, மளிகை சாமான்கள் வாங்க மட்டும் வெளியே வந்துகிட்டு இருக்காங்க.

அரசு அறிவிப்பின்படி காலையில கடை திறந்துட்டா மதியம் 2:30 மணிக்கு மூடிட்டு வீட்டுக்குப் போயிடுறாங்க. கட்சி, சாதினு எந்தப் பாகுபாடும் பார்க்காமல் ரூல்ஸ ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்காங்க.”

மக்களுக்காக அரசாங்கம் நிறைய உதவிகள் பண்ணிக்கிட்டு வர்றாங்க. முடிஞ்சளவு என்னால செய்ய முடியுற காரியங்களைப் பண்ணிக்கிட்டு வர்றேன். எங்க ஊரோட பஞ்சாயத்து 18 பட்டியைச் சேர்ந்தது.

பஞ்சாயத்துல இருந்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுறாங்க. நானும் சில இளைஞர்களும் சேர்ந்து தெருத் தெருவா போய் கிருமிநாசினி தெளிச்சிக்கிட்டு வர்றோம். டெட்டால், லைசால், பினாயில் எல்லாமே பயன்படுத்துறோம்.

இதுக்கிடையிலே, என்னோட ஒய்ஃப் டாக்டர். ஓ மந்தூர் அரசு மருத்துவமனையில் வேலைபார்த்துகிட்டு இருக்காங்க. இப்ப 8 மாசம் கர்ப்பிணி. இதோட அரசு மருத்துவமனையில பாதிக்கப்பட்டவங்களுக்கு சிகிச்சை கொடுத்துக்கிட்டு இருந்தாங்க.

நிறை மாசம் நெருங்கிகிட்டு இருந்தனால மருத்துவமனை சார்பாக அவங்களுக்கு விடுமுறை கொடுத்திருக்காங்க. போன வாரம் வரைக்கும் வேலையிலதான் இருந்தாங்க. இந்த நேரத்திலயும் நிறை மாசத்தோட வேலைபார்க்குறதைப் பார்த்துவிட்டு நிறைய டாக்டர்கள் எழுந்து நின்னு கைதட்டினாங்க. என் மனைவி ரொம்ப சின்சியரான நபர். இதுவே எனக்குப் பெரிய சந்தோஷமா இருந்தது.

இதுக்கிடையிலே வீட்டுக்குக்கூட யாராவது சொந்தக்காரங்க பார்க்க வந்தா, `இந்த நேரத்துல யாரும் பார்க்க வேண்டாம். நம்ம ஊர்லதான் இருக்கோம். எல்லா சரியானதுக்குப் பிறகு, பார்த்துக்கலாம்’னு முடிஞ்சளவுக்கு தவிர்த்துகிட்டு வர்றேன்.

அதே மாதிரி வீட்டுலதானே இருக்கோம்னு அலட்சியமா சிலர் இருக்காங்க. அப்படி இல்லாம சுத்தமா இருந்தாலே போதும். அதே மாதிரி, ஒருமுறை பலசரக்கு கடைக்குப் போயிட்டு வர்றப்பவே ஒரு வாரதுக்குத் தேவையான பொருள்களை வாங்கிட்டா நல்லது.

விதவிதமா தினமும் சாப்பிடணும்னுகூட அவசியமில்லை. மூணு கூட்டு வெச்சு சாப்பிடமா ஒரே கூட்டு வெச்சிக்கிட்டா ரொம்ப நல்லது. காய்கறிகளும் நிறைய நாள் வரும். இந்த மாதிரியான சில விஷயங்கள்ல அனுசரிச்சு போகலாம்.

சினிமா துறையைச் சேர்ந்த என்னோட நண்பர்கள்கிட்ட தொடர்ந்து பேசிக்கிட்டிருக்கேன். சற்குணம் சொந்த ஊருக்கு வந்திருக்கார். சூரி சென்னையிலதான் இருக்கார். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனும் சென்னையில இருக்கார். முடிஞ்சளவுக்கு போன்ல பேசிக்கிட்டு வர்றேன்…” என்கிறார் விமல்.

சல்யூட் விமல்..!