December 26, 2024
  • December 26, 2024
Breaking News
December 24, 2024

விடுதலை பாகம் 2 திரைப்பட விமர்சனம்

By 0 63 Views

விடுதலை படத்தின் முதல் பாகம் தந்த வெற்றியும் வரவேற்பும், இந்த இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. 

கடந்த படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இனிய முரண் என்னவென்றால் அதில் சூரி அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தார் – விஜய் சேதுபதி ஒரு விருந்தினர் வேடத்தில்  வந்திருந்தார். 

ஆனால் இதில் அப்படியே தலைகீழாக ஆகிப் போய் விஜய் சேதுபதியே அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கதையை ஆரம்பித்தவர் சூரி என்பதால் அவரை வைத்துப் படத்தை முடிக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

கடந்த படத்தில் பெரும்பாடு பட்டு தலை மறைவாக இருந்த விஜய் சேதுபதியை, சூரியின் பெரும் முயற்சியால் காவல்துறை கைது செய்தது. அங்கிருந்து தொடங்குகிறது இந்த பாகம்.

கைது செய்யப்பட்ட பெருமாள் வாத்தியாரான விஜய் சேதுபதி, காட்டிலிருக்கும் போலீஸ் முகாமில் டிஎஸ்பி யாக வரும் கௌதம் வாசுதேவ் மேனனாலும், முகாம் அதிகாரியாக வரும் சேத்தனாலும் அடித்து நிர்வாணமாக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்.

பின்னர் விஜய் சேதுபதியை காட்டுக்குள் இருக்கும் வேறொரு முகாமுக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்து சேத்தன்  தலைமையிலான ஒரு போலீஸ் படை விஜய் சேதுபதியை கரடுமுரடான காட்டுப் பாதையில் நடந்தே கூட்டிச் செல்கிறது.

போலீஸ் ஜீப் டிரைவராக பணியாற்றும் சூரியும் இந்தப் படையில் இடம் பெறுகிறார்.

இரவில் காட்டுக்குள் நடந்து போகும்போது, வழி நெடுக தன் வாழ்க்கைக் கதையை போலீசாரிடம் சொல்லிக்கொண்டே போகிறார் விஜய் சேதுபதி. 

போலீசாரின் திட்டப்படி விஜய் சேதுபதி அடுத்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டாரா, அல்லது அவர்களிடமிருந்து தப்பிக்க அவர் முயற்சி எடுத்தாரா, இதில் சூரியின் பங்கு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் மீதிப் பகுதி. 

விஜய் சேதுபதி சொல்லி கொண்டே வரும் கதையில் அவர் ஆரம்பத்தில் அப்பாவியான பள்ளி ஆசிரியராக இருந்து பண்ணையார்கள், பண்ணை அடிமைகளின் மேல் நடத்தும் கொடூர தாக்குதல்களைக் கண்டு கொதிப்படைந்த நிலையில் கம்யூனிஸ்ட் தலைவர் கிஷோரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து பண்ணையார்களுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கிய கதை சொல்லப்படுகிறது. 

அதற்கிடையில் சர்க்கரை ஆலை அதிபரின் மகள் மஞ்சு வாரியரைக் காதலித்துக் கைப்பிடித்து பின்னர் கிஷோருடன் முரண்பட்டு நக்சல்பாரி களின் அழித்தொழிப்பு இயக்கத்தில் ஈடுபட்டது, அதன் பின்னர் அரசின் எதிர் நடவடிக்கைகளால் ‘தமிழக மக்கள் படை’யை தோற்றுவித்து அரசுக்குத் தங்கள் பலத்தைக் காட்ட ரயிலுக்கு வெடிகுண்டு வைத்ததையும், அதில் உண்மையில் நடந்தது என்ன என்பதையும் விவரிக்கிறார் விஜய் சேதுபதி.

இதில் திரை ஆளுமையை முழுக்க விஜய் சேதுபதியே பிடித்துக் கொண்டதால் அவர் பாத்திரத்தை ஒட்டியே கதை செல்கிறது பெருமாள் வாத்தியார் என்கிற பாத்திரத்தில் அச்சில் வார்த்தது போல் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்தப் பாத்திரத்தில் நடிக்க அவரைத் தவிர வேறு எந்த முதல் நிலை நடிகரும் ஒத்துக் கொள்வது கடினம். அந்த ‘கெத்து’க்கு பாராட்டுகள்..!

பெருமாள் வாத்தியார் வாழ்க்கை அனுபவத்தில் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு மனநிலைக்கு மாறும்போதும் அந்தந்த உணர்ச்சிகளை அவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி. அவருடைய நடிப்புப் பயணத்தில் இந்தப் படம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இதில் சூரிக்கு அதிக முக்கியத்துவம் இல்லாதது போல் தோன்றினாலும், அவரே இந்தப் படத்தின் கதையை முடித்து வைக்கும் அளவில் கவனம் பெறுகிறார்.

படத்துக்குப் பொருத்தம் இல்லாமல் பளிச்சென்று அறிமுகம் ஆகும் மஞ்சு வாரியர் சர்க்கரை ஆலை அதிபரின் மகள் என்பதால் அதற்கு நியாயம் கொள்ளலாம். ஆனால் ஒரு தொழிலாளியின் காதலியாக – மனைவியாக வந்துவிட்ட பிறகு அந்த செழுமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி அவர் போராளியாகவே மாறித் தெரிவது சிறப்பு.

விஜய் சேதுபதிக்கு கம்யூனிஸம் பற்றிய பாடம் எடுத்து அவர் வாழ்க்கையைத் திசை திருப்பும் பாத்திரத்தில் வரும் கம்யூனிஸ்ட் தலைவராக கிஷோர் அற்புதமான பங்காற்றி இருக்கிறார். மரணத்தின் தருவாயில் கூட அசராமல் “இதை இவ்வளவு நாள் எதிர்பார்த்து கொண்டுதான் இருந்தேன்…” என்று தன் மீதான தாக்குதலை துச்சமாக ஏற்றுக் கொள்ளும் போது நெகிழ வைக்கிறார்.

இந்தப் பெரிய நடிகர்களைத் தாண்டி ஒரு சில காட்சிகளில் வந்தாலும் பண்ணை அடிமைத்தனத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தும்  கென் கருணாஸ் தன் அழுத்தமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

டிஎஸ்பி சுனில் மேனனாக வரும் கௌதம் வாசுதேவ் மேனன், முகாம் அதிகாரி ராகவேந்தராக வரும் சேத்தன், சப்-இன்ஸ்பெக்டர் அமுதனாக வரும் தமிழ், மற்றும் அருள்தாஸ், வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட் ஆகிய அனைவருமே அவரவர் பாத்திரங்களில் பொருந்தி நடித்திருப்பதன் பின்னணியில் வெற்றி மாறனின் அசுர உழைப்பு தெரிகிறது.

மட்டுமல்லாமல் பொதுப்பணித்துறை அமைச்சராக வரும் இளவரசு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக வரும் ராஜீவ் மேனன், அருமபுரி மாவட்ட கலெக்டராக வரும் சரவண சுப்பையா, வக்கீலாக வரும் பாலாஜி சக்திவேல், வங்காள நக்சலைட்டாக வரும் அனுராக் காஷ்யப் ஆகிய அனைவரும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள். 

இளையராஜாவின் இசை ராஜாங்கம் படம் நெடுக காடுகளில் எதிரொலிக்கிறது. கடந்த படத்தில் சூப்பர் ஹிட் ஆன “வழி நெடுக காட்டுமல்லி..” பாடலின் டியூனையே திருப்பிப் போட்டு “தினம் தினமும் உன் நினைப்பு…” என்று இன்னொரு பாடலாக உருவாக்கியிருக்கிறார் ராஜா.

கதையை நம் உணர்வுகளுக்குள் கடத்துவதில் காட்சி முக்கிய பங்கு வகிக்க, அந்த வேலையைக் கச்சிதமாக செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

யாராலும் தொட முடியாத – தொட்டுச் சொல்ல விரும்பாத ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை வரலாற்று ஆவணமாகக் கடத்த வேண்டும் என்று நினைத்த வெற்றிமாறனின் முயற்சிக்கு செவ்வணக்கம். 

ஆனால் விஜய் சேதுபதி என்கிற பெரிய நடிகர் உள்ளே இருப்பதால் வணிக ரீதியாகவும் ரசிகர்களைத் திருப்தி படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அங்கங்கே வழக்கமான சினிமாத் தன சிந்தனைகள் மேலோங்கி இருப்பது படத்தின் இயல்புத் தன்மையை பாதிக்கவே செய்கிறது. 

அத்துடன் இது போன்ற கனமான கதையைக் கையில் எடுக்கும் போது அதை இலகுவான சினிமா மொழியில் சொன்னால் மட்டுமே மக்களிடம் சென்று சேரும். அந்தத் திரைமொழியும் கொஞ்சம் இதில் தடுமாறுகிறது. 

ஆனாலும் தத்துவார்த்தமாக வெல்கிறது படம். அதிலும், விஜய் சேதுபதி ஓரிடத்தில், “தத்துவம்தான் தலைவர்களை உருவாக்கும் – தத்துவம் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள்..!” என்று வசனம் பேசும்போது தியேட்டர் கைத்தட்டல்களில் அதிர்கிறது.

அதுதான் படம் சொல்லும் செய்தியும்..!

– வேணுஜி