காதலின் வலிமை எத்தகையது என்பதை வீரம் செறிந்து விவேகம் பொதிந்து சொல்வதுதான் விடா முயற்சியின் கதை.
எத்தகைய இடர் வந்தாலும் காதலித்த பெண்ணைக் கைவிடாமல் இருப்பதுதான் ஒரு ஆணுக்கு அழகு என்பதைத் தாண்டி காதலித்த பெண் தன்னைக் கை விட்டு விட்டுப் போனாலும் அவளைக் காப்பது ஆணின் மாண்பு என்பதை இந்தப் படத்தின் மூலம் சொல்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.
அலட்டிக் கொள்ளாமல் வரும் கதைகளே அஜித்தின் ஸ்டைல் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு ஒரு லைனைப் பிடித்திருக்கிறார் அவர்.
முக்கிய பாத்திரங்கள் ஐந்தே ஐந்துதான். அதில் ‘தல’யாய பாத்திரத்தில் வருகிறார் அஜித்.
அஜர்பைஜானில் பெரிய வேலையில் நிறைய சம்பளம் வாங்கி பெருத்த பேங்க் பேலன்ஸைக் கையில் வைத்திருக்கும் அஜித், தன்னை விட்டு பிரிய விரும்பும் தன் காதல் மனைவி திரிஷாவை அவர் விருப்பப்படியே அவரது பெற்றோரிடம் கொண்டு சேர்க்க காரில் பயணப்படுகிறார்.
ஆளரவம் இல்லாமல் பாலைவனத்தின் வழியே நெடுஞ்சாலையில் பயணப்படும் காரில் தன் காதல் மனைவியுடன் கடைசிப் பயணம் மேற்கொள்ள விரும்பிய அவர் பயணம் என்ன ஆனது என்பதுதான் அந்த லைன்.
அவர் வழியில் ஆரவ், தன் முரட்டு நண்பர்களுடனும், ஆக்ஷன் கிங் அர்ஜுன் தன் மனைவி ரெஜினாவுடனும் அவருக்கு அறிமுகம் ஆகிறார்கள – அவர்களது செயல்களின் விளைவுகள்தான் மொத்தப் படமும்.
அஜித்துக்கென்று ஆர்ப்பாட்டமான ஓப்பனிங்கோ, அவர் வீரர், தீரர் என்பதற்கான சான்றுகளோ இல்லாமல் இருப்பதே இந்தப் படத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
அவரும் தன் ஸ்டைலில் குறைவாக பெப்பர் தூவப்பட்ட சால்ட் முடியலங்காரத்துடன் வருகிறார். அடுத்த கெட்டப்பில் இளமையாக… குறைவாக சால்ட் கலந்த பெப்பர் கெட்டப்புடன் வருவது உற்சாகமளிக்கிறது. அந்த கெட்டப்பில் மட்டுமே அவரை மலர்ந்த முகத்துடன் புன்னகையில் பார்க்க முடிகிறது.
மற்றபடி சீரியஸ் வேடம் என்பது அவருக்கு சாக்லெட் சாப்பிடுவதைப் போல. கூடவே அவரைக் கண்ணீரும் விட வைத்திருக்கிறார் இயக்குநர். கிளைமாக்ஸ் காதலில் நம்மை கண்கலங்க வைத்துவடுகிறார் ஏகே.
திரிஷாவுக்கும் அந்த காலகட்டத்தை நியாயப்படுத்துவது போல் இரண்டு கெட்டப்புகள் இருந்தாலும் இரண்டுக்கும் நமக்கு வித்தியாசம் தெரியவில்லை. அஜித்தை விட்டு அவர் ஏன் பிரிய நினைக்கிறார் என்பதற்கு சரியான காரணம் இல்லாமல் இருப்பதுடன், முதல் காட்சியிலேயே அஜித்தை வெறுத்து அவர் பிரிய நினைப்பது பலவீனமாகவே இருக்கிறது.
எத்தனையோ படங்களில் தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் எதிர்த்துப் போராடி நம் நாட்டைக் காத்த ஆக்சன் கிங் அர்ஜுனை இதில் அநியாயத்துக்கு வில்லனாக ஆக்கி இருக்கிறார்கள். அவர் கூழாக நசுங்கிச் சாவதை எல்லாம் நம்மால் பார்க்க முடியவில்லை.
ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகும் ஆரவ்வும் போகப்போக ஒரு அடியாள் போல் ஆகிவிடுவதும் அவர் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது.
அஜித்தின் பலமும் இமேஜும் தெரியாமல் அவர் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறதோ என்று நமக்குத் தோன்றுகிறது. ஆரவ், அவரை பூமர் என்று கூப்பிடுவதையும், அஜித்தை விட 10 வயது பெரியவரான அர்ஜுன் அவரை “ஐயா… பார்த்து நடங்க…” என்றெல்லாம் நக்கல் அடிப்பதையும் நம்மால் ரசிக்க முடியவில்லை.
ரெஜினாவுக்கும் வில்லி வேடம் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவரும் சேர்ந்து அஜித்தை பார்த்து “இவனை போட்டு தள்ளு…” என்று அர்ஜுனிடம் சொல்வது ஆனாலும் ஓவர்.
அர்ஜுனுக்கு ஒரு இமேஜ் இருப்பதால் அவரை நம்பி திரிஷாவை அஜித் அனுப்பி வைப்பது நம்பகமாக இருக்கிறது. ஆனால் அர்ஜுனே அஜித்தை இதுவரை பார்த்ததே இல்லை என்று நம்பிக்கை துரோகம் செய்யும்போது அஜித்தை விட நாம்தான் ஷாக் ஆகிறோம்.
படத்தின் அழுத்தமான காட்சி அது ஒன்றுதான். மற்றபடி எல்லாமே சினிமா முலாம் பூசிய காட்சிகள்தான்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு. கிடைத்த அந்நிய லொகேஷனில் புகுந்து விளையாடுகிறார். அனிருத்தும் தன் பின்னணி இசையில் ஓரளவுக்கு படத்தை ஒப்பேற்றி இருக்கிறார்.
லாஜிக்குகளைப் பற்றிக் கவலையே படாமல் திரைக்கதை அமைத்திருப்பது கமர்சியல் சினிமாவில் ஒன்றும் குற்றமில்லைதான். ஆனால், அஜித்தின் பலத்தையும் அவர் மீதான எதிர்பார்ப்பையும் அறிந்து அது படைக்கப்பட்டிருந்தால் ரொம்பவே ரசித்திருக்கலாம்.
விடா முயற்சி – பிரிவினைத் தவிர்க்கும்..!
– வேணுஜி