October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கண்ணதாசனும், ஏ ஆர் ரஹ்மானும் சொன்ன விஷயம்தான் கதை – வேழம் இயக்குனர் சந்தீப் ஷ்யாம்
June 7, 2022

கண்ணதாசனும், ஏ ஆர் ரஹ்மானும் சொன்ன விஷயம்தான் கதை – வேழம் இயக்குனர் சந்தீப் ஷ்யாம்

By 0 697 Views

Producer Kesevan, Director Sandeep shyam

கே 4 கிரியேஷன்ஸ் சார்பாக கேசவன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் வேழம்.

முப்பது வருடங்களாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் இவர் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று தன் நிறுவனத்துக்கு விளம்பரப் படங்கள் எடுத்த சந்தீப் ஷ்யாமை இயக்குநராக்கி இருக்கும் படம்தான் வேழம்.

அசோக் செல்வன்,ஜனனி, ஐஸ்வர்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள இந்தப் படம் ஜுன் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இறுதிக் கட்ட வேலைகளில் தீவிரமாக இருந்த இயக்குநர் சந்தீப் ஷியாமிடம் படம் பற்றிக் கேட்டபோது,

“மனிதனுக்குள் தெய்வ குணமும், மிருக குணமும் இருக்கும். அதில் தெய்வ குணம் அதிகமானால் நல்லது. மிருக குணம் அதிகமானால் ஆபத்து…” என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னதுதான் இந்தப்படத்தின் கதை. 

ஆஸ்கார் வாங்கியபோது ஏ.ஆர்.ரஹ்மானும் சொன்னார் இல்லையா..? “நமக்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன. நான் அன்பின் பாதையைத் தேர்ந்தெடுத்தேன் …” என்று. அப்படி இல்லாமல் உள்ளுக்குள் இருக்கும் மிருக குணம் அதிகமாகும்போது என்ன ஆகும் என்று சொல்ல வந்திருக்கிறேன்.

என் கூற்றுப்படி நல்லவர்கள், கெட்டவர்கள் என்று தனியாக இல்லை. ஒருவரேதான் நல்லவராகவும், இன்னொரு இடத்தில் தீயவராகவும் இருக்கிறார்…” என்றார்.

படத்தின் தலைப்பு பற்றிக் கேட்டபோது, “யானைக்கு இன்னொரு பெயர் ‘வேழம்’ என்பது தெரிந்திருக்கும். யானைக்கு மதம் பிடித்தால் அதை யாராலும் அடக்க முடியாது. அதே நேரத்தில் யானை அன்பாக இருக்கும்போது மற்ற உயிர்கள் மீது பாசம் வைக்கும்.

இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அதுபோன்ற குணாதிசயத்துடன் இருப்பதால் இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்..!” என்றார்.

விளம்பரப் படங்கள், குறும்படங்கள் இயக்கிவிட்டு முதல் பட இயக்குநராகி இருக்கும் தனக்கு படத்தின் நாயகன் அசோக்செல்வன் அற்புதமான ஒத்துழைப்பைக் கொடுத்ததுடன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதாக சொல்லும் சந்தீப் ஷ்யாம்,. “இதுவரை பார்க்காத ஒரு அசோக் செல்வனை இதில் பார்க்கலாம். உடல்மொழி, தோற்றம் என எல்லா விதத்திலும் புத்தம்புதிதான அசோக் செல்வன் இந்தப்படத்தில் தெரிவார்..!” என்றார்.

“நாயகிகள் ஜனனி, ஐஸ்வர்யா மேனன் ஆகிய இருவருக்குமே தமிழ் தெரியும் என்பதால் கதையை உள்வாங்கி நடித்துள்ளார்கள்…” என்றவர்,

“படத்தின் முக்கிய வேடங்களில் கிட்டி, சங்கிலிமுருகன், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்,கலை இயக்குநர் கிரண், ஷியாம் சுந்தர் ஆகியோரோடு மராத்திய நடிகர் மோகன் அகாஷே முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்…” என்றார்.

சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு ஜானு சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை பிரசாத்தும், சண்டைப்பயிற்சிகளை தினேஷ் சுப்பராயனும், கலை இயக்கத்தை சுகுமாரும் மேற்கொண்டு இருக்கிறார்கள். 

யானையும், வேழமும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் இரண்டு யானைகளும் மோதிக்கொள்ளுமா பார்க்கலாம்.