April 12, 2024
  • April 12, 2024
Breaking News
March 28, 2024

வெப்பம் குளிர் மழை திரைப்படம் விமர்சனம்

By 0 70 Views

பூமி நீர் வெப்பத்தால் மேகமாகிறது. பின் அது குளிர்ந்து மழையாகிறது. இந்த இயற்கையின் தத்துவத்தை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ஒரு உணர்வுமயமான கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து.

பொதுவாகவே ஒரு படத்தின் தயாரிப்பாளரைதான் அந்தப் படத்தின் ஹீரோ எனலாம். காரணம் தயாரிப்பாளர் இல்லை என்றால் அந்தப் படமே இல்லை.

ஆனால், இந்தப் படத்தில் தயாரிப்பாளர் திரவ் , உண்மையிலேயே படத்துக்கு ஹீரோவாகவும் ஆகி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாடல்களை எழுதி, படத்தை எடிட் செய்து, ஒலிக்கலவையில் பங்கெடுத்து… என்று படத்தின் பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் அவரது முயற்சியை ஒரு பூங்கொத்து கொடுத்துப் பாராட்டலாம்.

கதையும் எல்லோராலும் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடியதுதான். திருமணத்தின் தொடர்ந்த நிகழ்வாக பிள்ளைப் பேறு அமைகிறது. திருமணம் ஆன பெண் உரிய காலத்தில் கருத் தரிக்கவில்லை என்றால் அது சமுதாயத்தின் பார்வையில் ஒரு பெரும் குறையாகக் கருதப்படுகிறது. இதுதான் படத்தின் ‘கரு’வும்.

நகரங்களில் குழந்தைப்பேறு இல்லை என்றால் ஆண் பெண் இருவரில் யாரோ ஒருவருக்குக் குறை இருக்கிறது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், கிராமங்களில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றால் அவளிடம் மட்டுமே குறை இருப்பதாகக் கருதி ஆணுக்கு வேறு இடத்தில் மணமுடிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அப்படி, கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திரவ்வுக்கு இஸ்மத் பானுவை திருமணம் செய்து வைக்கிறார்கள். தம்பதிகள் சந்தோஷமாக உறவு வைத்துக் கொண்டிருந்தாலும் குழந்தை பிறப்பு நடக்கவே இல்லை என்பதில் திரவ்வின் தாய் ரமாவுக்கு பெரும் குறை ஏற்பட, தன் மூத்த பெண்ணின் மகளையே திரவ்வுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

இதற்கிடையில் அம்மாவுக்குத் தெரியாமல் நகரத்துக்கு வந்து தம்பதியர் பரிசோதனைகள் மேற்கொள்ள, தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை உணர்வு மயமாக மட்டுமல்லாமல் உணர்ச்சி மயமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

எந்த ஹீரோவும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் வேடம் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர் திரவ்வே இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரை விட எந்த ஹீரோவும் இந்தப் பாத்திரத்தைப் புரிந்து கொண்டு இத்தனை அற்புதமாக நடித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.

பார்வைக்கு அப்படியே ஒரு கிராமத்தானாகத் தெரிபவர் அந்த கிராமத்து மனிதனின் வெள்ளந்தித்தனம், கோபம், நகைச்சுவை, காதல், அன்பு எல்லாவற்றையும் அச்சு அசலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

குழந்தை இல்லாத குறையை ஊரே குற்றமாகப் பார்க்க ஒவ்வொரு நொடியும் அந்த வேதனையை அனுபவிப்பவர் முதல் முறையாக மனைவி கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்ததும் ஆனந்த அதிர்ச்சியில் வெடித்து அழும் அழுகை உலகத்தரம். 

வம்புக்கிழுப்பவனை வைத்து செய்வதில் ஆகட்டும், அவனிடம் அடி வாங்கிக்கொண்டு மன்னிப்பதில் ஆகட்டும், இடிபோன்ற செய்தி கேட்டு தன் ஆண்மையை நொந்து ஆண்குறியில் குத்திக்கொண்டு அழுவதாகட்டும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் திரவ். 

குழந்தை ‘பெத்துக் கொள்ள’ வழி இல்லாத அவரை ‘ பெத்த ‘ பெருமாள் ஆக்கி இருப்பது இனிய முரண். அவர் இனி ஹீரோவாகவே பயணிக்கலாம்.

அவருக்குக் கொஞ்சமும் சளைக்காமல் நடிப்பில் ஈடு கொடுத்து இருக்கிறார் நாயகி இஸ்மத் பானு. குழந்தை இல்லாத குறையை வைத்து மாமியார் தன்னை நோகடித்துக் கொண்டிருப்பதில் ஆரம்பத்தில் எகிறுவதும், பின்னர் நிலைமையை புரிந்து கணவனை வேறு திருமணத்திற்கு தயார் செய்வதுமாக  சராசரி கிராமத்து பெண்ணாக வரும் இஸ்மத், தன் தாயின் மரணச் செய்தி கேட்ட வினாடியில் இருந்து சுற்றி இருப்பவர்கள் அத்தனை பேரும் அழுது அரற்ற, ஒரு சொட்டுக் கண்ணீர் விடாமல் அத்தனை பேரும் அகன்று தனிமை கிடைக்கும்போது வெடித்து அழுவது உணர்ச்சி மயம்.

அதேபோன்று கணவனின் மனமும் நோகக்கூடாது தங்கள் குறையும் தீர வேண்டும் என்று அவர் எடுத்த முடிவில் குற்ற உணர்ச்சியிலேயே வாழும் தன்மையையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவர்கள் இருவரையும் உண்மையான கணவன் மனைவியாகவே நாம் நினைப்பது இந்தப் படைப்பின் ஆகப்பெரிய வெற்றி. 

படுக்கை அறையில் ஆபாசம் தொடாத இருவரின் அன்னியோன்யம் ஆச்சரியப்படுத்துகிறது.

திரவ்வின் அம்மாவாக வரும் ரமாவும் நடிப்பில் பிய்த்து உதறி இருக்கிறார் ஆனால் பியூட்டி பார்லரில் ஃபேஷியல் செய்தது போன்ற அவரது முகமும், பாத்திரத்திற்கு ஒவ்வாத புத்தாடைகளும் கொஞ்சம் அந்நியப்படுத்துகிறது.

மருமகளை கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பவர் சரியான நேரத்தில்  மருமகளின் பிரச்சனையை உணர்ந்து கொள்ளும் இடத்தில் ஒரு தாயாக ஜொலிக்கிறார்.

குறிப்பிடத் தகுந்த இன்னொரு பாத்திரம் எம். எஸ். பாஸ்கர். ஒரு காலை கோணிக் கோணி நடந்து, கையில் கம்பும், வாயில் வம்புமாகத்  திரியும் பாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திருக்கிறார்.

இவர்களுடன் பரிவட்ட மரியாதை கேட்டு திரவ்வை வம்புக்கு இழுப்பவர், ரமாவின் மூத்த மகளாக வருபவர், அவருக்கு மகளாக வருபவர், திரவ் இஸ்மத் தம்பதியின் குழந்தையாக வரும் மாஸ்டர் கார்த்திகேயன் அனைவருமே அந்த கிராமத்து மனிதர்களாக மாறிப் போய் நம் கண்ணில் ஒரு குடும்பமாகவே தெரிகிறார்கள்.

வழக்கமான சினிமாவின் க்ளிஷே, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஃபார்முலா காட்சிகள் இவை எவற்றையும் நம்பாமல் இயல்பாகச் சொன்னாலே படத்தை உணர்ந்து கொள்ள முடியும் என்று நினைத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பாராட்டுகள்.

ஆனால் அப்படிச் செய்யும்போது காட்சிகள் மிகவும் நீளமானதாகவும், நம் பொறுமையை சோதிப்பதாகவும் சில இடங்களில் அமைந்து விடுகிறது. அந்தக் குறையைத் தவிர்த்து இருக்கலாம்.

அதிலும் கிளைமாக்ஸில் திரவ்வும் இஸ்மத்தும் நின்று கொண்டே அழுது உணர்ச்சிவசப்பட்டு… தன்னிலை உணர்ந்து சிரித்து நிறைவு பெறும் காட்சி ரொம்பவும் நீளம். அது கலைத்தன்மையுடன் இருப்பதாக இயக்குனர் நினைத்திருக்கலாம். அதே நேரத்தில் பார்வையாளனின் தவிப்பையும் ஒரு இயக்குனர் புரிந்து கொள்ள வேண்டும்.

இயல்பான இந்தக் கதையில் டெக்னிக்கலாக வரும் மருத்துவ சமாச்சாரங்களை இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லி இருந்தால் எளிய ரசிகர்களால் அதைப் புரிந்து கொண்டிருக்க முடியும்.

இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘அந்த ‘ முக்கியமான விஷயம் சட்டப்படியும் சரியா என்று தெரியவில்லை.

ப்ரீத்தி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு ஒரு வாழ்வை நம் கண் முன்னால் கடத்தியிருக்கிறது. சங்கர் ரங்கராஜனின் இசையும் தேவையான இடங்களில் மட்டுமே பயன்பட்டுக் கதையை உணர வைத்து இருக்கிறது.

ரிவார்டுக்கு சற்று தள்ளியும், அவார்டுக்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கிறது கலைத்தன்மையுடன் கூடிய இந்தப் படம்.

வெப்பம் குளிர் மழை – தெளிவு திருத்திய பிழை..!

– வேணுஜி