April 29, 2024
  • April 29, 2024
Breaking News
February 19, 2022

வீரபாண்டியபுரம் திரைப்பட விமர்சனம்

By 0 855 Views
‘வன்முறை என்பது இருபுறம் கூரான கத்தி, அது குத்தியவரையும் குத்தும்…’ என்பதை இன்னொரு முறை கத்திக் கத்தி அல்ல குத்திக் குத்தி, வெட்டி வெட்டி சொல்லி இருக்கிறார் சுசீந்திரன்.

 
படத்தில் சொல்லப்படும் வீரபாண்டியபுரம் கிராமத்திற்கும் பக்கத்து கிராமமான நெய்க்காரன் பட்டிக்கும் உள்ளூர பகை இருந்து வர, அதன் காரணமாக மாறி மாறி இரு தலைக்கட்டு குடும்பங்களும் வெட்டிக் கொண்டு சாகின்றன.
 
இந்தப்பக்கம் சரத்தும், அந்தப்பக்கம் ஜெயப்பிரகாஷும் குடும்ப மற்றும் சாதீய உறவுகளுடன் அரிவாள், கத்தி சகிதம் வன்மத்துடன் பகை தீர்த்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் சரத்தின் மகள் மீனாட்சி கோவிந்தராஜனை யாரோ கடத்தியது தெரிய வர அதிர்ச்சி அடைகிறார்கள். விசாரிக்கும்போது மீனாட்சி, ஒரு இளைஞனை காதலிப்பது தெரிய வருகிறது. அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக ஊரைவிட்டு ஓடி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மீனாட்சி காதலிக்கும் இளைஞன் வேறு யாருமல்ல நாயகன் ஜெய்தான்.
 
அந்த காட்சியில்தான் ஜெய் அறிமுகமாகிறார் கோவிலில் வைத்து தாலி கட்டப்போகும் நேரத்தில் உன்னுடைய உறவுகளின் முன்னிலையில்தான் தாலி கட்டுவேன் அவர்களை சமாதானப்படுத்த லாம் என்று ஜெய் அழைக்க தன் குடும்பத்தைப் பற்றி நன்றாக அறிந்த மீனாட்சி அதை மறுக்கிறார். ஆனால் ஜெய் வற்புறுத்தி மீனாட்சியைக் கூட்டிக்கொண்டு சரத்தின் முன்னால் போய் நிற்க அவரை வெட்டி வீசி எறிய சரத்தின் ஆட்கள் வெறி கொண்டு துடிக்கிறார்கள்.
 
அவர்களை சமாதானப்படுத்தும் சரத், ஜெய்க்கும் மீனாட்சிக்கும் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி கூற அதற்குப் பின் என்ன நடந்தது என்பது ரத்தம் தெறிக்கும் மீதி.
 
ஜெய்யை ஒரு அதிரிபுதிரி ஆக்ஷன் ஹீரோவாக்க  சுசீந்திரன் முடிவெடுத்தே இந்தப் படத்தை இயக்கினார் என்று நினைக்கும் அளவில் ஜெய் அரிவாள், வேல்கம்புமாக அதகளம் செய்திருக்கிறார். ஆனாலும் ஒரு பக்கம் பாட்டு பாடிக் கொண்டும் ஓவியம் வரைந்து கொண்டும் ஊருக்கு நல்லது செய்யும் இளைஞனாகவும் அடையாளப் படுகிறார்.
 
அத்துடன் படத்துக்கு இசையும் அவர்தான். அதில் ‘ காடை முட்டை…’ பாடல் தூக்கலாக ஒலிக்கிறது. கேட்கக்கூடிய பாடல்களை ஜெய் இசைத்து இருக்க, பின்னணி இசையை இன்னொரு இசையமைப்பாளர் அமைத்து இருப்பது ஏன் என்று தெரியவில்லை.l பின்னணி இசை சுமார் ரகம்.
 
ஆர்டர் கொடுத்து செய்ததுபோல் அளவாகவும் அழகாகவும் இருக்கும் மீனாட்சி கோவிந்தராஜனுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் போலவே இந்தப்படத்திலும் அதிகம் அலட்டிக்கொள்ளாத வேலை அவருக்கு. ஜெய்யிடம் சீறும் ஒரு காட்சியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபிக்கிறார் மீனாட்சி.
 
சரத், முத்துக்குமார், அர்ஜெய், ஹரிஷ் உத்தமன், அரிவாளை ஏந்துவதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் எல்லா படங்களிலும் அமைதியாக வரும் ஜெயப்பிரகாஷுக்கு இதில் கையில் அரிவாள் கொடுத்திருப்பதுதான் வினோதமாக இருக்கிறது. ஆனாலும் அரிவாளை சுற்றுவதிலும் லாவகமாக செய்திருக்கிறார் ஜேபி.
 
காளி வெங்கட் ஆரம்பத்தில் அமைதியாக வந்து தன் பங்குக்கு ஒரு காட்சியில் குத்துவாள் கொண்டு குத்துகிறார்.
 
பிளாஷ்பேக் நாயகி அகன்ஷா சிங் மின்னலாக சில காட்சிகளில் வந்து மறைகிறார்.
 
ஜெய்யின் திடீர் நண்பனாக வந்து அங்கங்கே சிரிக்க வைக்கும் பால சரவணனுக்கு அதிகமாக வேலை இல்லை.
 
வேல்ராஜின் கேமரா இதைப்போன்ற பல வெட்டு குத்துகளை பார்த்து இருப்பதால் பதட்டமில்லாமல் இயங்கி இருக்கிறது.
 
சுசீந்திரன் படத்தில் இவ்வளவு ரத்தம் இதுவரை தெரித்ததில்லை. அவரது கடந்த படங்களில் வன்முறை இருந்தாலும் அதை மீறிய குடும்ப உறவின் மேன்மைகள் சொல்லப்பட்டிருக்கும். இதில் அது மிஸ்ஸிங். 
 
இந்தப்படம் மூலம் தமிழுக்குக் கிடைத்திருக்கும்  தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவை வரவேற்கலாம்.
 
வழக்கமான ஆக்ஷன் படமாக இருந்தாலும் வழக்கத்தை மீறி ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நேரடிப் பகை இல்லாமல் இருப்பது புதிதாக இருக்கிறது. 
 
வீரபாண்டியபுரம் – வீச்சரிவாள் பிரியர்களுக்கு வெட்டுக்குத்து விருந்து..!
 
– வேணுஜி