1940 களில் தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் கம்யூனிசத்தை தழைக்கச் செய்த முன்னோடியான பி.கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை சிற்சில சினிமாவுக்கான கற்பனைகளுடன் தந்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த இந்தியாவும் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது இங்கிருக்கும் ஜமீன்கள் ஏழைத் தொழிலாளிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காத கிருஷ்ணப் பிள்ளை, பாட்டாளிகளின் விடுதலைக்காக போராடுவதுதான் இந்தப் படம்.
இந்திய விடுதலைக்கு முன் நடந்த இந்தப் போராட்டக் கதையை அதன் ஒரே நேரடி சாட்சியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் 96 வயதான புரட்சி பாடகி பி.கே.மேதினி சொல்ல படம் திரையில் விரிகிறது.
தற்காலத்தில் துவங்கும் கதையில் நடிகர் பரத் கம்யூனிசவாதியாக வருவதோடு ஏழை பணக்காரர் மற்றும் சாதிய பாகுபாடு இல்லாமல் எல்லோருக்காகவும் உழைத்து வர, பக்கத்து ஊரில் நடந்த சாதிய வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு போய் கம்யூனிச பாதைக்கு அவர்களை இட்டுச் செல்லம் முயற்சியாக மேற்படி பி.கே.மேதினி அவர்களிடம் அழைத்துப் போகிறார்.
அப்போதுதான் கிருஷ்ணப்பிள்ளையின் கதை காட்சிகளின் வாயிலாக நமக்கு சொல்லப்படுகிறது.
கிருஷ்ணப் பிள்ளையாக வரும் சமுத்திரக்கனி அந்தப் பாத்திரத்தைப் புரிந்து கொண்டு மிடுக்கான உடல் மொழி, துடிப்பான பார்வை என்று அப்படியே வாழ்ந்திருக்கிறார். பயம் என்பது என்னவென்றே அவருக்குத் தெரியாது என்பதை அவரைப் பார்க்கும்போது நம்மால் நம்ப முடிகிறது.
கடவுள் சேவகம் செய்யும் குடும்பத்தில் பிறந்து புரட்சி பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் வளர்ந்து கிருஷ்ணபிள்ளையின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு குடும்பத்தை துறந்து அவரை மணம் முடித்து காதல் மனைவியாகும் வேடத்தில் சுரபி லக்ஷ்மி சரியாகப் பொருந்துகிறார்.
பரத்துக்கும் சொல்லிக் கொள்ளத் தக்க வேடம் என்றாலும் நிஜமான கிருஷ்ணப் பிள்ளையின் சரித்திரத்தில் இவரது பாத்திரம் கற்பனையாக சேர்க்கப்பட்டதாக தோன்றுகிறது. அத்துடன் கம்யூனிசவாதியாக வரும் அவர் வைத்துக் கொண்டிருக்கும் தொங்கு மீசையும் குங்குமப்பொட்டும் என்ன அடையாளம் என்பது புரியவில்லை.
இவர்களுடன் இன்ன பிற வேடங்களில் நடித்திருக்கும் ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, அதர்ஷ், ஆய்ஷ்விகா உள்ளிட்டோர் பாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
கவியரசுவின் ஒளிப்பதிவும் கூட கம்யூனிச சிந்தனையை கடத்தும் உணர்ச்சியிலேயே அமைந்திருக்கிறது.
எதற்கு இத்தனை இசையமைப்பாளர்கள் என்று புரியாவிட்டாலும் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நெருடல் இல்லாமல் ஒலிக்கிறது.
இத்தனை உணர்வுபூர்வமான வரலாற்றை இந்த தலைமுறைக்கு கடத்தியே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் எழுத்தில் உருவான திரைக்கதை வியர்வையும் கண்ணீருமாக வழிந்து ஓடுகிறது.
எந்தத் தொழிலாளிக்கு கல்யாணம் ஆனாலும் முதல் இரவை அவர் அனுபவிக்க முடியாது முதலாளிதான் அனுபவிப்பார்… என்பதும் அவர் எப்போது கூப்பிட்டாலும் யாருடைய மனைவியாக இருந்தாலும் அவரது கட்டிலுக்கு வந்தாக வேண்டும் என்பதும் பதை பதைக்க வைக்கிறது.
அப்படி ஜமீனுக்கு பிறந்த குழந்தைகள் ஏராளமாக அந்த ஊரில் தொழிலாளிகளின் ஏழைப் பிள்ளைகளாக வாழ்ந்து வருவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
கலையின் நோக்கமே மக்களை சந்திக்க வைப்பதுதான். அதிலும் கடந்த கால வரலாற்றை தெரிந்து கொண்டு அரசியல் ரீதியாக சிந்திக்கும் போது சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
அதை முன்னெடுத்து இருக்கும் இந்தப் படத்தில் பங்களித்த அனைவருக்கும் வீர வணக்கம்..!
– வேணுஜி