September 16, 2024
  • September 16, 2024
Breaking News
August 15, 2024

வேதா திரைப்பட விமர்சனம்

By 0 179 Views

வடமாநில கிராமங்களில் அதிகமாக இருக்கும் சாதிக் கொடுமை பற்றிய கதைக்களம்.

அப்படி ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் தாழ்த்தப்பட்ட பெண்ணாகப் பிறந்து குத்துச்சண்டை வீராங்கனை ஆக ஆசைப்பட்ட நாயகிக்கு என்னவெல்லாம் அழுத்தங்கள் ஆதிக்க சக்திகளிடம் இருந்து வந்தன என்பதையும் அவற்றையெல்லாம் ஒரு ராணுவ வீரரின்  உதவியுடன் எப்படி எதிர்கொண்டு போராடினார் என்பதுதான் கதை.

நாயகனாகியிருக்கும் ஜான் ஆபிரகாம் தனது பாத்திரத்தை இயல்பாக நடித்த கடந்து இருக்கிறார். அவரது முறுக்கேறிய உடலுக்கு ஏற்றவாறு இராணுவ வீரரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அதிக சிரமம் இல்லை. 

படம் ஆரம்பத்ததிலிருந்து சீரியஸ் ஆகவே நடித்துக் கொண்டிருப்பவர் தமன்னாவுடன் ஆன காதல் காட்சிகளில் மட்டும் புன்னகை பூத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் வழக்கம்போல் அதிரி புதிரி. அதிலும் அறிமுகமாகும்போது காஷ்மீரில் டாக்டராக அவர் நடத்தும் ஆபரேஷன் அதகளம்.

ஒரு முன்னணி ஹீரோ படத்தில் இருந்தும் தனது பாத்திரமே டைட்டில் ரோலாக ஆகி இருப்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகி ஷர்வாரி வாக். கல்லூரியில் தண்ணீரைக் கூட  தொட்டு எடுக்க முடியாத சூழலில்… ஆதிக்கத்துடன் கிண்டல் செய்யும் ஆண்களை துச்சமாக அவர் பார்க்கும் ஒரு பார்வை அற்புதம். 

ஒரு ஆர்வமுள்ள குத்துச்சண்டை வீரராக தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ள அவர் துன்பங்களில் சிக்கி அடையும் வேதனைகளை நன்றாகவே நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். அத்தனை வேதனைக்கும் பின் பாதியில் அவர் கொடுக்கும் பதிலடி நன்று.

ஆவலுடன் நாம் எதிர்பார்த்த தமன்னா பாட்டியா ஒரு கேமியோ ரோலில் தோன்றி நம்மை ஆசுவாசப்படுத்துகிறார். அவரிடம் பெறும் பாடல் காதல் ரசம். 

அமைதியான வில்லனாக அபிஷேக் பானர்ஜி. ஆனால் அத்தனை அமைதியும் அடி வயிறு குலுங்கும் மிரட்டல். ஆதிக்க சக்திக்கு அவர் என்றால் ஒடுக்கப்பட்ட நடிப்பில் மிரட்டி இருக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி.

அசிம் அரோரா எழுத்தில் இயக்கியிருக்கும் நிகில் அத்வானி, இந்தி சினிமாவில் அரிதாக தொடக்கூடிய சாதிப்பிரச்சனையைக் கையில் எடுத்திருப்பதைப் பாராட்டலாம். 

ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஒரு  இளம் பெண், குத்துச்சண்டை வீராங்கனை ஆவதற்கு எப்படியெல்லாம் போராட வேண்டி இருக்கிறது என்பதை ரத்தமும் சதையுமாகச் சொன்னாலும், எல்லாமே அடுத்து இதுதான் நடக்கும் என்று யூகிக்கக்கூடிய காட்சிகளாகவே இருப்பது பலவீனம்.

இன்னும் கேட்டால் வில்லன் செய்யப்போவதை எல்லாம் நம்மால் யூகிக்க முடிந்த அளவுக்கு அதே கிராமத்தில் வசிக்கும் மற்ற பாத்திரங்கள் அறியாமல் இருப்பது ஆச்சரியம்தான்.

“இந்த அநியாயங்களை எல்லாம் தட்டி கேட்க ஒருத்தன் வராமல் போய்விடுவான்..?” என்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பேசுவதில் கட் செய்தால் ஹீரோவின் அறிமுகம் நடக்கிறது.

இந்தக் கதை உண்மைச் சம்பவங்களிலிருந்து பெறப்பட்டது என்பதால் எல்லோருக்கும் தெரிந்த திரைக்கதையே போதும் என்று இயக்குனர் முடிவு எடுத்திருப்பார் போலிருக்கிறது.

அமல் மாலிக் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. கார்த்திக் ஷாவின் பின்னணி இசை கதைக்களத்துடன் ஒத்திசைந்துள்ளது, மாஹிர் ஜவேரியின் எடிட்டிங்கில்  கதையின்  வேகம் பார்வையாளர்களின் பொறுமையை சோதிப்பதில் இயக்குனரின் பங்கும் இருப்பதை உணர முடிகிறது. 

வேதா – சாதிக்குப் பிறந்தவள் சாதித்த கதை..!