படத்தின் தலைப்பபே கதையைச் சொல்லிவிடும். சாதிப்பிரச்சினைதான் கதையின் அடிநாதம். அதிலும் ஆணவக் கொலையை முன்னிறுத்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சுகுமார் அழகர்சாமி.
படத்தின் தொடக்கத்தில் நான்கு ஜோடி காதல் கதைகளுக்கான சான்றுகள் காட்டப்படுகின்றன. அந்த கதைகள் என்ன ஆயின… எப்படி முடிந்தன என்பதுதான் படத்தின் கதை.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து வரும் ஆணவக் கொலைகள் பற்றி ஆன்லைன் மூலம் அறிந்த அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டே, இந்தியா வந்து அவற்றைப் பற்றிய ஆவணப்படம் தயாரித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறார். அவரது அனுபவம் எப்படி இருந்தது என்பது முழுப் படமாக சொல்லப்பட்டிருக்கிறது.
அவருக்கு உதவும் ஆட்டோ டிரைவர் வேடத்தில் வருகிறார் நாயகன் ராமகிருஷ்ணன். இயல்பான நடிப்பால் கவரும் அவரை அவ்வப்போது வந்து சந்தித்து விட்டுப் போகும் நபர் அவரது அப்பாவா என்ற கேள்வி நமக்கு எழ, அதற்குப் படத்தின் இறுதியில் விடை இருக்கிறது.
தான் யார் என்பதை ராமகிருஷ்ணன் பிளாஷ்பேக்காக சொல்லும் காட்சிகள் அதிரவைக்கின்றன. அதில் ராமகிருஷ்ணனின் அப்பாவாகவும் அவரே நடித்திருப்பதில் இரட்டை வேடம் ஏற்றிருக்கிறார் அவர். ராமகிருஷ்ணன் அம்மாவாக நடித்திருக்கும் நடிகையின் நடிப்பும் பலே.
தந்தை வேடத்தில் முரட்டுத்தனமான ஆசாமியாகவும் மகன் வேடத்தில் சமூக சிந்தனை கொண்டவராக அமைதியான வேடத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.
இந்தியா வந்து ஆவணப்படம் எடுக்கும் அமெரிக்க பெண்மணியாக தயாரிப்பாளர் சிந்தியா லெளர் டேவே நடித்திருக்கிறார் இப்படிப்பட்ட துணிச்சலான படத்தை தயாரித்து இருப்பதுடன் அதில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருப்பதும் அவரது துணிவை காட்டுகிறது. அதற்காகவே ஒரு பாராட்டு பொக்கே கொடுக்கலாம்.
இவர்களுடன் பிக்பாஸ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, முத்து, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமாமகேஸ்வரி, ஏ.பி.ரத்னவேல் உள்ளிட்டோரும் நடித்து தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள்.
இவர்களில் பாசமுள்ள அண்ணனாக வந்து தங்கையைப் பறிகொடுத்து கொலையாளியாகவும் அடையாளம் காணப்படும் வேதத்தில் நடித்திருக்கும் முத்து, ஒரு அறிமுக நடிகர் என்பதே தெரியவில்லை. இனிவரும் பாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்தால் அவர் ஒரு சிறந்த குணசித்திர நடிகராக வலம் வர முடியும்.
தீபன் சக்கரவர்த்தியின் இசையில் உமாதேவியின் பாடல்கள் கவனிக்கும்படி ஒலித்திருக்கின்றன. பிரவீணா எஸ்- சின் ஒளிப்பதிவு கதையை உணர்வுடன் கடத்த பெரும் அளவு உதவி இருக்கிறது.
ஆனால் இப்படிப்பட்ட படங்கள் எடுத்தால் மட்டும் சாதி வெறியர்கள் திருந்தி விடுவார்களா என்பது தெரியவில்லை. இந்தக் கதையிலேயே கூட திருந்தும் ஒரு பெண்ணின் தந்தையை அவரது மனைவியே காரில் வைத்து காதல் ஜோடியோடு கொளுத்தி விடுகிறார்.
இருந்தாலும் சமூக நல்லிணக்கம் ஏற்பட இப்படிப்பட்ட கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
அந்த வகையில் இந்த படம் சீரிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறது.
வர்ணாஸ்ரமம் – மாற்றத்துக்கான வித்து..!