December 2, 2024
  • December 2, 2024
Breaking News
April 17, 2024

வல்லவன் வகுத்ததடா திரைப்பட விமர்சனம்

By 0 504 Views

தலைப்பைப் பார்த்தால், வல்லான் வகுத்ததே நீதி என்ற அளவில் வஞ்சகர் கைகளில்தான் உலகம் இருக்கிறது என்கிற எதிர்மறை சிந்தனை கொண்ட கதை போல் தோன்றும். 

ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உள்ளத்தில் நல்ல உள்ளத்திற்கு எப்போதும் தாழ்வில்லை என்கிற நல்ல கருத்தைத்தான் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் விநாயக் துரை.

இந்தப் படத்தின் ஆச்சரியமான விஷயம் இதில் ஹீரோ என்றோ ஹீரோயின் என்றோ யாருமே கிடையாது என்பதுதான். இந்த சமுதாயத்தில் நாம் காணக்கூடிய வகையில் ஐந்து விதமான கதாபாத்திரங்கள் வருகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பணத் தேவையோ அல்லது பண ஆசையோ இருக்கிறது. இதற்குள் நல்லதும் கெட்டதும் எப்படி பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்பதை சுவாரசியமாக சொல்ல முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர். 

அனன்யா மணியின் காதலில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரது அழகிலும், அல்வா பேச்சிலும் சொக்கிப் போன அவரது காதலன் அவருக்குப் பிடித்த நகையை வாங்கிக் கொடுக்கிறார். இழந்த அவர்களது நிலத்தை மீட்டுக் கொடுக்கிறார். அங்கிருந்து கட் பண்ணினால்தான் தெரிகிறது அத்தனையும் பணத்தாசை கொண்ட அனன்யா நடத்திய நாடகம் என்பது. 

இன்னொரு பக்கம் இன்ஸ்பெக்டர் நீதிமணி (என்ன பொருத்தமான பெயர்..?) என்கிற பாத்திரத்தில் வரும் ராஜேஷ் பாலச்சந்திரன், தன் கையில் சிக்கும் கேஸ்கள் எல்லாரிடமும் அபரிமிதமாக பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஸ்டேஷனில் இருக்கும் காவலரே இவர் அடிக்கும் கொள்ளையைப் பார்த்து சாபம் விடுகிற அளவில் பணத்தாசையுடன் திரிகிறார். 

மூன்றாவது இழையில் டாக்ஸி ஓட்டிப் பிழைப்பு நடத்தும் சுவாதி மீனாட்சி அந்த வேலையும் போய்விட, அதே நேரம் காதல் திருமணம் செய்து கொண்டு ஓடிப்போன சகோதரி கர்ப்பிணியாக திரும்பி வர, காவலாளி வேலை செய்யும் அப்பாவுடன் எப்படிக் குடும்பத்தை நடத்துவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார். 

தேஜ் சரண்ராஜும், ரெஜின் ரோசும் திருட்டு நண்பர்கள். கார்த் திருட்டு, வழிப்பறி என்று பலவகையிலும் அடுத்தவரின் பணத்தை அபேஸ் பண்ணி வருகிறார்கள். 

ஐந்தாவது பகுதியில் வரும் விக்ரம் ஆதித்யா பெரிய செல்வந்தர். பணத் தேவை உள்ளவர்களுக்கு எல்லாம் அவசரத்துக்குப் பண உதவி செய்து அதைத் திருப்பித் தரவில்லை என்றால் அவர்களின் உடல் உறுப்புகளைக் கழற்றி விற்றுக் காசு பார்த்து வருகிறார். 

இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஹைப்பர் லிங்க் தொடர்பு இருக்கிறது. அது எங்கே போய் எப்படி பரவி, எப்படி யூ டர்ன் அடித்து, எப்படி நேர்கோட்டுக்கு வந்து… எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் சவால். 

அனன்யாவின் அழகுக்கு முன்னால் யாருமே ஏமாந்து விடுவார்கள் என்பது உண்மைதான். ஆண்களின் சபலத்தை முதலீடாக்கி அவர் அத்தனை பணத்தை அடிப்பதெல்லாம் சரிதான். ஆனால் அப்படிப் பணம் சம்பாதிப்பதற்கு தகுந்த காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், அந்த மலை முழுங்கி மாதவியான அந்தப் பாத்திரத்தில் அனன்யா அப்பட்டமாகப் பொருந்தி இருக்கிறார்.

ஆனால் படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுபவர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரன்தான். வஞ்சகத்துடன் அவர் சிரிக்கும் அந்த ஹைனா சிரிப்பு அமர்க்களம்ணா.

ஆனால், ஒரு இன்ஸ்பெக்டராக இருப்பதால் அவரது  நியாயமான ஆசைகளையும் தேவைகளையும் லோன் போட்டே பூர்த்தி செய்து கொண்டிருக்க முடியும்.

மனித ஸ்பேர் பார்ட்டுகளைக் கழற்றி விருக்கும் லோக்கல் தாதாவிடம் அடிபணிந்து செல்லும் அளவுக்கு அவருக்கு இருக்கும் பணத் தேவை புரியவில்லை. 

சுவாதி மீனாட்சியை அறிமுகப்படுத்தும் போதே அவரது நல்ல உள்ளத்தைக் காட்டி விடுகிறார் இயக்குனர். ஐந்து ரூபாய் ஆனாலும் அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவது, சீருடை இல்லாத பள்ளி மாணவனுக்கு தன் சொற்ப வருமானத்தில் சீருடை வாங்கி தருவது என்று அவரது தும்பைப் பூ உள்ளத்துக்கு எந்தத் துன்பமும் வந்து விடக்கூடாது என்று நமக்கு பதட்டமாகவே இருக்கிறது. 

மனித ஸ்பேர் பார்ட்களை அடமானமாக வைத்துக் கொண்டு பணம் கொடுக்கும் இப்படிப்பட்ட பைனான்சியர்களும் உலகத்தில் இருக்கிறார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. “நான் பணத்தைத் திருப்பி தரா விட்டால் என்னுடைய உறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்..!” என்று எழுதி வாங்கிக்கொண்டு பணம் தருகிறார்.

அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் – கோர்ட்டுக்கா போக முடியும்..? அப்படி ஸ்பேர் பார்ட்டுகளை எடுப்பதற்காகவே கூடவே ஆயுதங்களுடன் ஒரு அல்லக்கையும் சுற்றிக் கொண்டிருப்பது அநியாயத்துக்கு டிராமாவாக இருக்கிறது. ஆனால், அசப்பில் பிரசாந்த் போலிருக்கும் விக்ரம் ஆதித்யாவின் நடிப்பு ஓகே தான். 

தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோசின் நட்பும், அவர்கள் செய்யும் தப்பும் ஓகே. ஆனால், லாபத்துக்காக நண்பனையே ரெஜின் ரோஸ் போட்டுத் தள்ளத் துணிவார் என்பதை நம்புவதற்கு இல்லை. என்னதான் கொள்ளைக்காரர்களாக இருந்தாலும் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு நேர்மை (?) வேண்டாமா..?

கார்த்திக்கின் ஒளிப்பதிவும், சகிஷ்னா சேவியரின் இசையும் படத்துக்கு நியாயம் சேர்த்திருக்கின்றன.

இயக்குனர் விநாயக் துரையே படத்தின் தயாரிப்பாளராகவும் இருப்பதால் படத்தின் பட்ஜெட் எப்படி இருந்திருக்கும் என்று நமக்கு புரிகிறது. ஆனால் அந்த பட்ஜெட்டின் குறை தெரியாதவாறு இதனை ஒரு நியாயமான படமாகத் தந்திருப்பதில் ஒட்டுமொத்த டீமும் நேர்மையாக உழைத்து இருக்கிறது. 

ஆனால் இது போன்ற படங்களை ‘ டார்க் காமெடி’ ஜேனரில் எடுத்தால் மட்டுமே ரசிக்க வைக்கும். இதில் முன் பாதி முழுவதும் சோக இழையுடனேயே திரைக்கதை நகர்வதால் படத்தில் ஒன்றுவது கடினமாக இருக்கிறது.

படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுக்கும் பணத் தேவை இருந்தாலும் அவர்கள் கையில் பணம் வரும்போது அதை எந்தவிதமான பத்திரமோ பாதுகாப்போ இல்லாமல் அசால்டாக கையாள்வது நம்பும்படியாக இல்லை. 

கத்தை கத்தையாகப் பணத்தை கையில் மேசையில் வைத்துக்கொண்டு டீக்கடையில்  பேசிக் கொண்டிருக்கிறார்கள். தப்பித்து ஓடும் அவசரத்தில் இருக்கும் ரெஜின் ரோஸ் முதலில் பணத்தை பேக் செய்வதை விட்டுவிட்டு சட்டை பேண்ட் எல்லாம் பேக் செய்து எடுத்து வைத்துவிட்டு அதற்கு பிறகு சிதறி இருக்கும் பணத்தை வந்து அள்ளிக் கொண்டிருக்கிறார் இது போன்ற நம்ப முடியாத லாஜிக்குகள் படம் முழுவதும் விரைவிக் கிடைக்கின்றன. 

கெட்டவர்களுக்கு கெட்டது தான் நடக்கும் நல்லவர்களுக்கு எப்படியாவது நல்லது நடக்கும் என்பதெல்லாம் கேட்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுவே ஒரு நம்ப முடியாத கதை போல் ஆகிவிடுகிறது.

லாஜிக் விஷயங்களைச் சரி செய்திருந்தால் இன்னொரு சூது கவ்வும் போலவோ விமர்சகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஜீவி படம் போலவோ இந்தப் படம் வந்திருக்கும். 

இருந்தாலும் ஒரு முறை பார்ப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்த புதியவர்களின் இந்த முயற்சியை வரவேற்கலாம். 

வல்லவன் வகுத்ததடா – உள்ளத்தில் நல்ல உள்ளம்..!

– வேணுஜி