May 1, 2024
  • May 1, 2024
Breaking News
April 18, 2024

சிறகன் திரைப்பட விமர்சனம்

By 0 257 Views

பட்ஜெட் பெரிதாக இல்லாமல், பெரிய நட்சத்திரங்களும் இல்லாத படத்தைப் பார்க்க தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்றால் இருக்கும் ஒரே வழி வித்தியாசமான ஸ்கிரிப்ட்டில் படம் எடுப்பது தான். 

அப்படித்தான் இந்தப் பட இயக்குனர் வெங்கடேஸ்வராஜ் நினைத்திருக்கிறார். அந்த நினைப்புக்கு அவருக்குக் கை கொடுத்திருப்பது நான் லீனியர் படத் தொகுப்பில் ஹைப்பர் லிங்க் திரைக்கதை அம்சம் கொண்ட உத்தி.

ஒரு இரவில் ஒரு அரசியல்வாதியும் பயிற்சி வழக்கறிஞரும் கொல்லப்படுகிறார்கள் அதை பார்த்த ஒரே சாட்சியாக இருக்கிறார் வழக்கறிஞராக வரும் கஜராஜ். 

அவர் சொல்லும் வாக்குமூலம் ஒருபுறம் இருக்க, கொலைகளின் பின்னணியை சட்டரீதியாக இன்ஸ்பெக்டராக நடிக்கும் மாலிக்கும், தர்ம ரீதியாக இன்ஸ்பெக்டர் வினோத்தும் துப்பறிய முனைகிறார்கள். அதில் பல திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட நடப்புகள் தெரிய வருகின்றன.

உண்மையில் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி படத்தைக் குழப்பம் இல்லாமல் எடிட் செய்து இயக்கியிருக்கும் வெங்கடேஸ்வராஜைப் பாராட்டியாக வேண்டும். 

ஏதோ ஓரிடத்தில் ஆரம்பிக்கிற கதை எங்கெங்கோ போய் முன்னும் பின்னுமாக நகர்ந்து கடைசியில் ஒரு முடிவுக்கு வரும்போது நமக்குள் எந்தக் குழப்பமும் இல்லை என்பது இந்த பட ஆக்கத்தின் வெற்றி. 

என்ன ஒன்று… இடைவேளையுடன் எழுந்து வந்து விட்டாலும் கதை இதுதான் என்று நமக்குப் புரிய வந்துவிடும். இரண்டாவது பாதி கதை எப்படி நடந்தது என்கிற அளவில் மட்டுமே நகர்கிறது. 

இதுபோன்ற புதிய உத்திகளுடன் வரும் படங்களில் ஹீரோ ஹீரோயின் என்ற வழக்கமான சினிமா க்ளிஷேக்கள் எதுவும் இல்லாமல் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கமும் அவர்களது சம்பளமும் பெருமளவு குறையும்.

சொல்லப்போனால் கொலையை நேரில் பார்த்த சாட்சியான கஜராஜுக்கும் கொல்லப்படுகிற ஜீவா ரவிக்கும்தான் முக்கிய பங்களிப்பே இருக்கிறது. இருவரும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என்பதால் தங்கள் பாத்திரத்தை ஊதித் தள்ளி விடுகிறார்கள்.

முன்பாதி முழுவதும் கோமாவிலும் பின் பாதி ஃப்ளாஷ் பேக்கில் நடமாடியும் தோன்றும் பவுசியா ஹிதயாவின் அழகும், தைரியமும் பாராட்ட வைக்கின்றன. ஒரு ஆசிரியை என்பதற்கான அறிவும் நேர்மையுமாக வரும் பவுசியாவுக்கு நல்லாசிரியர் விருதே கொடுக்கலாம். 

படத்தில் பாதிக்கப்படும் பவுசியாவின் சக ஆசிரியையாக வரும் ஹர்ஷிதா ராமும் கவர்கிறார். ஒரு பக்கம் முறை தவறிய மாணவர்களின் மிரட்டல், இன்னொரு பக்கம் தனக்காக நியாயம் கேட்ட பவுசியா தாக்கப்படுவது என்று நெருக்கடிக்கு உள்ளாகி தன் உயிரையே அவர் விட்டுவிடும் போது நமக்கு நெஞ்சு கனக்கிறது.

ராணுவ வீரராக வரும் அனந்த் நாக், இன்ஸ்பெக்டர் ஆக வரும் வினோத், மாலிக் அனைவரும் பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள். 

பிஞ்சிலே பழுத்த மாணவனாக பாலாஜியைப் பார்த்தாலே நமக்குப் பதறுகிறது. 

பிற பாத்திரங்களை ஏற்றிருக்கும் ரயில் ரவி, பூவேந்தன், ஆனந்த் வெங்கட் உள்ளிட்டோரும் நெருடாமல் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சேட்டை சிக்கந்தருக்கு பட்ஜெட் பக்காவாக அமைந்து விட்டதால் இயல்பான காட்சிகளைத் தவிர வேறு ஏதும் சேட்டை செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கிறது.

ராம் கணேஷ் இசையும் படத்தின் தன்மைக்கேற்ப ஒலிக்கிறது.

இது போன்ற புதிய முயற்சிப் படங்களில் இருக்கும் மிகப்பெரிய குறை, வெகுஜன ரசிகனுக்குப் புரியாத அளவில் தலைப்புகளை வைப்பதுதான். 

சிறகன் என்றால் என்னவென்று கடைசி வரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அது ஒரு வகை பட்டாம்பூச்சியின் பெயராம். இதையெல்லாம் தெரிந்து கொண்டா படத்தைப் பார்க்க வர முடியும்..?

அத்துடன் லாஜிக் விஷயத்திலும் நிறைய சறுக்கி இருக்கிறார் இயக்குனர். குறிப்பாக கணவர் ராணுவ வீரராக இருக்க, அண்ணன் இன்ஸ்பெக்டராக இருக்க அவர்கள் கண் முன்னமேயே ஹர்ஷிதா ராம் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்ள… இருவரும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு அழுது கொண்டே நிற்கிறார்கள். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போய் அவரைக் காப்பாற்றி இருக்க வேண்டாமா?

அதை ஒரு சாமானியன் கூட செய்து விட முடியும். ஆனால், ஒரு ராணுவ வீரரும் காவல் அதிகாரியும் கையைப் பிசைந்து கொண்டு ஒரு தற்கொலையைத் தடுக்க கையாலாகாமல் இருப்பது எந்த விதத்திலும் லாஜிக்குடன் இல்லை.

ஆனாலும் புதிய முயற்சிக்கு ஆதரவாக இந்த படத்தின் திரைக்கதையை பாராட்ட முடியும். 

சிறகன் – தவறும், தண்டனையும்..!