காலம் மாறியும் கூட கிராமங்களில் சாதியப் போக்கே ஒருவரை நல்லவராகவும், அல்லவராகவும் அடையாளம் காணப்படுகிறது என்பதையும், அனைவரும் நம்பும் நீதிமன்றங்களில் கூட ஆணவப்போக்கால் எளியமனிதர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் துருத்தல் இன்றி அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லியிருக்கும் படம்தான் வாய்தா.
மகிவர்மன்.சி.எஸ். இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் நடிகர்களின் தேர்வே முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
படத்தின் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் புகழ். விசைத்தறித் தொழிலாளியாக வரும் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களுக்கு அவரை நெருக்கமாக்கி விடுகிறது. குறிப்பாக ஆதிக்கசாதி இளைஞர்களுக்கு எதிராக ஆவேசம் கொள்ளுமிடத்தில் அவர் நடிப்பு நன்று. காதல் காட்சியிலும் முதல் படத்திலேயே சிறப்பாகச் செய்திருக்கும் அவர் பெயரைப் போலவே எதிர்காலத்தில் புகழ் பெறுவார் என்று நம்பலாம்.
அவரது தந்தையாக, சலவைத் தொழிலாளி வேடத்தில் நடித்திருக்கும் மு.இராமசாமியின் நடிப்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை. அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கும் அவர் படம் பார்ப்போர் மனதைக் கலங்கடித்து விடுகிறார். அந்தப் பரிதாபமான பார்வையும் நடிப்பும் அவர் எந்தப் பாத்திரத்துக்குள்ளும் தன்னைத் தகவமைத்துக் கொள்வார் என்று உணர வைக்கிறது.
காதல் பிரிவை அனுபவிக்கும் நாயகியாக ஜெசிகா பவுலும் நம்மைக் கலங்க வைக்கிறார். இந்தப்படத்துக்கேற்ற அழகுடன் காதல் காட்சிகளில் இயல்பாகவும் தோன்றுகிறார் ஜெசிகா.
நக்கலைட்ஸ் புகழ் பிரசன்னாவுக்கு சினிமாக் கதவுகள் சிறப்பாகத் திறந்து விட்டாற்போலிருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் இரண்டு படங்களிலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக வந்து தன் நடிப்பைப் பங்களித்திருக்கிரார்.
விசைத்தறிக்கூடங்கள், நீதிமன்றக் காட்சிகள் உட்பட எல்லாக்காட்சிகளையும் அலங்காரம் இல்லாமல் இயல்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சேது முருகவேல் அங்காரகன். சி.லோகேஷ்வரன் இசையில் அமைந்த பாடல்களும் பின்னணி இசையும் பொருத்தமாக ஒலிக்கிறது.
சமுதாயத்தின் காலக் கண்ணாடியாக அமைந்திருக்கும் இது போன்ற படங்கள் வெளிவருவதற்கு எத்தனை பாடு பட வேண்டி இருக்கிறது என்பதே படத்தின் கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.