மீண்டும் ஒரு காதல் கதை. ஆனால், இதுவரை வந்த இந்திய சினிமாக்களில் பணக்காரர் வீட்டுப் பெண்ணை ஏழை வீட்டுப் பையன் காதலித்தால் என்ன ஆகும்? பெண்ணின் அப்பா அந்தக் காதலைப் பிரித்துவிடுவார்.
அதிலும் அந்தப் பையன் தாழ்த்தப்பட்ட சாதி என்றால்..? அவனைக் கொன்று விடுவார். அதுதானே..?
ஆனால், இந்திய சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலேயே புதிதாக ஒரு கிளைமாக்ஸைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சதாசிவம்.
ஆனால், இந்த புதுமையான முடிவைக் கொண்ட கதையை ரசிக்கும்படி எடுத்திருக்கிறாரா என்பதுதான் கேள்வி.
கஜேஷ் நாகேஷ் நாயகனாக வருகிறார். அப்பா ஆனந்தபாபுவின் சாயலில் இருக்கும்.அவர், அவரைப் போல நடனத் திறமையும் இல்லாமல், தாத்தா நாகேஷைப் போல் நடிக்கவும் முடியாமல் தவிப்பது புரிகிறது.
அவர்களது படங்களைப் பார்த்து இவரும் நடிக்கக் கற்கலாம்.
உருவத்தில் அவருக்கேற்ற அளவெடுத்த ஜோடியாக வருகிறார் ரித்விகா ஸ்ரேயா. அவருக்கும் பெரிய அளவுக்கு நடிக்கும் வேலை இல்லை.
இவர்களின் காதலில் அழுத்தமோ, கஜேஷை ரித்விகா வெறுக்கும் அளவுக்கு அவரது கேரக்டரில் தவறோ இல்லை. அதுவும் அப்படி ஒரு கொடூர கிளைமாக்ஸ் வைக்கும் அளவுக்குப் படத்தில் ஒன்றுமே நடந்து விடவில்லை.
இரண்டாவது பாதியில் அறிமுகமாகும் மொட்டை ராஜேந்திரன்தான் படத்தின் ஹீரோவைப் போல புகுந்து விளையாடுகிறார் – மூன்று ‘ கொழுக் மொழுக்…’ பெண்டாட்டிகளுடன்.
மெயின் லைனை வைத்து அழுத்தமான கதை பின்னத் தெரியாமல் மொட்டை ராஜேந்திரனை வைத்தே இரண்டாவது பாதியை ஒப்பேற்றி இருக்கிறார் இயக்குனர்.
கதாநாயகியிடம் எதிர்பார்க்க முடியாத கவர்ச்சியை மொட்டை ராஜேந்திரன் ஜோடிகளான அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி ‘ காட்டி’ இருக்கிறார்கள்.
பாவா லட்சுமணன் பாவம், ஒரு வார்த்தை வசனம் இல்லை அவருக்கு.
இவர்களுடன் சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
யுவராஜ் பால்ராஜ் ஒளிப்பதிவில் குறையில்லை.
பாடலுக்கு இசையமைத்த அருணகிரியம்,
பின்னணி இசை அமைத்த கார்த்திக் கிருஷ்ணனும் படத்துக்கேற்ற இயன்ற இசையைத் தந்திருக்கிறார்கள்.
தலைப்புக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் டைரக்டர் சார்..?
உருட்டு உருட்டு – படம் எடுத்தவர்கள் மகிழும் படம்..!
– வேணுஜி