சமூகம் சார்ந்தும், சமூகத்தின் தேவை சார்ந்தும் எடுக்கப்படும் படங்கள்தான் உண்மையில் மக்களுக்கான படங்கள் எனலாம். அப்படி சமீப காலமாக தமிழ்ப்பட உலகில் சமூகம் சார்ந்த படங்களைத் தரும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதிகரித்து வருவதாகவே கொள்ளலாம். அத்ற்கு மக்களும் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் இது போன்ற முயற்சிகள் தொடரும்.
இந்தப்பட இயக்குநர் விஜயகுமாரும் அப்படி மக்களுக்கான படங்களைத் தரும் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார். கடந்த உறியடி முதல் படத்திலேயே அப்படி நம்பிக்கையை ஏற்படுத்தியவரை இனம் கண்டு இந்த இரண்டாவது பகுதியை நடிகர் சூர்யா தயாரித்திருப்பதிலிருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம்.
போபால் விஷ வாயுக் கசிவு மரணங்கள் தந்த பாடம் நமக்கு இருந்தும் இங்கு ஸ்டெர்லைட் என்ற ஆலையைச் சீரமைக்க அரசு முன்வரவில்லை. அதை மூட மக்கள் போராடி பல இன்னுயிர்களைத் தந்து அதைச் சாதித்தார்கள்.
மேற்படி போபால் சம்பவம் இந்தத் தமிழக மண்ணில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு உதாரணப்படமே இந்த உறியடி 2.
நாயகனாகவும் விஜயகுமாரே நடித்திருக்கிறார். வேலையில்லா பொறியாளராக வரும் அவருக்கும், அவரது இரண்டு நண்பர்களுக்கும் அவர்கள் வசிக்கும் கிராமத்துக்கருகில் இயங்கிவரும் பூச்சிக்கொலி மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றில் வேலை கிடைக்கிறது. சின்ன சம்பளம் என்றாலும் மூவருக்கும் வேலை என்பதால் ஒத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் சேரும்போதே அங்கு தயாராகும் வேதிப்பொருள்கள் எத்தனை ஆபத்தனாவை என்றும், அது தொடர்பான விபத்து ஏற்பட்டால் அது தொழிலாளர்களை மட்டுமல்லாமல் ஆலையின் புகைபோக்கி மூலமாக வெளியேறும் நச்சு வாயுவால் அந்த கிராமமே அழியும் சூழலும் சொல்லப்படுகிறது.
லாபத்தில் இயங்காத தொழிற்சாலை என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு செலவு செய்ய அதன் முதலாளி மறுத்துவிடுகிறார். அத்துடன் உள்ளூர் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கையில் போட்டுக்கொண்டு அடுத்து ஒரு தாமிரம் தயாரிக்கும் (ஸ்டெர்லைட் போன்றே) தொழிற்சாலை ஒன்றையும் திறக்கும் திட்டத்திலிருக்கிறார்.
இதற்கிடையில் தொழிற்சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு முதலில் ஒரு தொழிலாளி மரணமடைகிறார். அதன் வீரியம் புரியாமல் அனைவருமே விட்டுவிடுகிறார்கள். அடுத்த விபத்தில் விஜயகுமாரின் நண்பர் உயிரிழக்க, சுதாரிக்கும் விஜயகுமார் தொழிற்சாலையில் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறார்.
அதனால் ஒரு பக்கம் தொழிற்சாலை முதலாளியின் கோபத்துக்கும், இன்னொரு பக்கம் அவரால் ஆதாயமடைந்த அரசியல்வாதிகளின் எரிச்சலுக்கும் ஆளாகிறார். அடுத்து தொழிற்சாலையில் பெருவிபத்து ஒன்று ஏற்பட்டு விஷவாயு ஊருக்குள் பரவி நூற்றுக்கணக்கான பேரைப் பலிவாங்குகிறது. அடுத்து என்ன என்பது மீதிப்படம்.
இயல்பான ஹீரோவாக வரும் விஜயகுமார் கதாசியராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் நிறைய நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறார்.
தெருவில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் அவரை “இங்கே வாடா…” என்று ரோந்துக்கு வந்த போலீஸ் அழைக்க, “எதுக்குடா..?”என்று அதே வேகத்தில் பதில் கொடுக்கிறாரே… மொத்த தியேட்டரும் கைத்தட்டுகிறது. தேர்தலில் நிற்க அவர் முடிவெடுத்துப் பேசும் வசனங்களும் அப்படியே. தன் பெற்றோர் இறந்ததைக் காண நேர்கையில் அவரது நடிப்பு அபாரம்.
புதிய புலாக புறப்பட்டிருக்கும் அவரிடம் தமிழ்ப்பட உலகம் நிறைய எதிர்பார்க்கிறது. அதை அவர்தான் அடுத்து வரும் படங்கள் மூலம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
வழக்கமான சினிமா நாயகியாக இல்லாமல் உண்மையிலேயே நம் அடுத்த வீட்டுப் பெண்ணாக வரும் நாயகி விஸ்மயாவும் ரசிக்க வைக்கிறார். பின்பாதிக் கதை முழுக்க கண்னீரும், ரத்தமுமாக விரியும் களத்தில் முன்பாதிக் கதையில் சொல்லப்படும் விஜயகுமார் – விஸ்மயா காதல் பகுதிகள் ரசமானவை.
விஜயகுமாரின் இரண்டு நண்பர்களும், அவர்களது குடும்ப அங்கத்தினரும் கூட மனத்தில் பதிகிறார்கள். ஆளுங்கட்சி எம்.பி, மலைவாழ் மக்களுக்கான தலைவர் என்று வருபவர்கள் அனைவரும் சினிமாவுக்குப் புதியவர்கள் என்றாலும் நடிப்பில் மிரட்டியிருப்பதற்குக் காரணம் விஜயகுமாரின் வேலை வாங்கும் திறநன்தான்.
முன்பாதி வரை அப்படியே நம் கண்முன் நடக்கும் இயல்பான வாழ்க்கையாகவே காட்சிகள் நகர்கின்றன. அதுவும் இடைவேளைக் காட்சி ஹாலிவுட்டுக்கு நிகரான தரம். பதைபதைத்துப் போகிறோம்.
ஆனால், பின்பாதியில் அளவுக்கு நீளமான கண்னீர்க் காட்சிகளும், வழக்கமான சினிமா க்ளிஷே கிளைமாக்ஸும் படத்தின் நம்பகத் தன்மையைத் தகர்த்தெறிகின்றன. அத்தனை இயல்பாக நகரும் முன்பாதிக் கதையை எழுதியவரா தெலுங்கு ஆக்ஷன் படங்களுக்கு நிகரான இரண்டாம் பாதியை எழுதினார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் சம்பந்தப்பட்டவர்களைக் கடந்த்தி வந்து கொன்றுவிட்டால் ஆயிற்றா..? ஒரு கார்ப்பரேட் முதலாளியை இப்படி மூன்று பேர் திட்டமிட்டுக் கடத்திவிட முடியுமா..? இந்த இருவேறு நிலைகளால் படம் சப்பாத்தி மாவில் சுட்ட தோசையாக எதனுடனும் ஒட்டாமல் நிற்கிறது.
பிரவீண்குமாரின் ஒளிப்பதிவு அப்பாரம். அதேபோல்தான் கோவிந்த் வசந்தாவின் இசையும். ஆனால், அவருக்கும் ஒரு ‘ஸ்பீட் பிரேக்கர்’ வேண்டும் என்பது புரிகிறது. மௌனத்தின் மூலம் மனத்தில் தைக்க வேண்டிய காட்சிகளுக்கு எல்லாம் ஓயாமல் வாசித்து இம்சிக்கிறார். அது இயக்குநர் கையில்தான் இருக்கிறது.
அதேபோல் கால் இழந்தவர்கள் அணியும் செயற்கைக் காலில் விஷப்பொருள் கலந்திருக்கிறது என்று இயக்குநர் சொல்வதும் கொடுமையாக இருக்கிறது. செயற்கைக் கால் வேண்டுவோர் இங்கே ஆயிரக்காணக்கில் இருக்க, அந்தக் காலும் விஷத்தன்மையுள்ளது என்று மக்கள் தவறாகப் புரிந்து கொள்ள பெரிதும் வாய்ப்பிருக்கிறது. பொதுப்பிரச்சினைகளை விஜயகுமார் கவனமாக கையாள வேண்டும்.
கதை, திரைக்கதை எழுதி இயக்கி ஒரு படத்தில் நடித்துத் தயாரிப்பது எத்தனை கடினமான பணி என்பது சினிமா தெரிந்தவர்களுக்குப் புரியும். ஆனால், எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற குழப்பத்தைக் குறைத்துக் கொண்டால் நாளைய சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக விஜயகுமார் உருவெடுப்பார்.
உறியடி 2 – முதல் பாதி ‘ஆகா’ பின்பாதி ‘அடடா..!’
– வேணுஜி