April 26, 2024
  • April 26, 2024
Breaking News
September 15, 2021

துக்ளக் தர்பார் திரை விமர்சனம்

By 0 310 Views

துக்ளக் என்ற மன்னரின் தர்பார் எப்படி குழப்பமாக இருந்ததோ அதைப்போலவே ஒரு குழப்பமான கதையைத் தயார் செய்து அதற்கு ‘துக்ளக் தர்பார்’ என்றே பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள். ரொம்ப தைரியம்தான்..!

அமைதிப்படையில் இரண்டு கை போட்டு, பிறகு அதில் அந்நியனில் ஒரு கை போட்டு, அதில் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் அரைக்கை போட்டு மொத்தமாக மிக்ஸியில் அடித்தால் இந்தப்படத்தின் திரைக்கதை கிடைக்கும்.

ஒரே மனிதனின் சிந்தனையில் இரண்டு விதமான ஆட்கள் வந்து போகிறார்கள். அதுதான் கதையின் மையக்கரு என்பதால் அதற்கு லாஜிக் எல்லாம் கேட்கக் கூடாது. ஒரு தண்ணி பார்ட்டியில் ஒரு பார்ட்டி ஆள், நாயகனான விஜய் சேதுபதி தலையில் பாட்டிலால் அடித்துவிட, அதன் காரணமாக அவர் மூளை இப்படி ஸ்ப்ளிட் ஆகி விட்டது என்று ஒரு கதை விடுகிறார்கள்… அல்லது கதை சொல்கிறார்கள்..!

சிறிய வயதிலேயே தந்தை தாயை இழந்து தங்கையுடன் வாழ்ந்து வரும் அவர், அந்த தங்கையைக் கூட கவனிக்காத அண்ணனாகவே வளர்கிறார். வளர்ந்ததும் அரசியலில் குறுக்கு வழியில் பெரிய ஆளாக ஆக ஆசைப்பட்டு, அந்த ஏரியா அரசியல் தலைவர் பார்த்திபனின் கவனத்தை ‘அமைதிப்படை அமாவாசை’யாகக் கவர்ந்து நினைத்ததைச் சாதித்து அந்த ஏரியா கவுன்சிலர் ஆகிறார். அதில் பார்த்திபனின் சொல்படி ஒரு கார்ப்பரேட்டிடமிருந்து கைமாறும் 50 கோடி ரூபாய் திடீரென காணாமல் போக, அது தொடர்பாக எழும் பிரச்சினைகள்தான் மீதிக் கதை.

எந்தப்படமானாலும் சரி, நல்ல தயாரிப்பாளர் – நல்ல சம்பளம் கிடைத்தால் போதும் என்று விஜய் சேதுபதி படங்களை ஒத்துக்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மைதானோ என்று நினைக்க வைக்கும் படம் இது.

ஏற்கனவே நமக்கு நன்றாகத் தெரிந்த நம்மால் மறக்க இயலாத அமைதிப்படைக் கதை என்று தெரிந்தே ஒத்துக்கொண்டதுடன் அதற்கு நடுவில் அவரே நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படம் போல மண்டையில் அடிபட்டு அடிக்கடி சுயத்தை இழக்கும் கேரக்டரை மீண்டும் நடிப்பதில் அவருக்கும், நமக்கு என்ன சுவாரஸ்யம் ஏற்பட்டு விடும் என்று அவர் நம்பினாரோ தெரியவில்லை.

ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் புதுப்புது ரசிகர்கள் வருவார்கள், அதனால் பத்து வருடத்துக்கு முந்தையக் கதையை மீண்டும் எடுப்பது ரசிகர்களிடம் எடுபடும் என்ற சினிமாக் கோட்பாட்டின்படி இதை ஒத்துக் கொள்ளலாம் என்றாலும், அந்தப்படங்களை அடிநாதமாகக் கொண்டு அதைவிட அற்புதமாக அல்லவா திரைக்கதையை அமைத்திருக்க வேண்டும் இயக்குநர். அந்தப் படங்களில் பாதியைக் கூட தொட முடியாததால் தத்தளிக்கிறது படம்.

எந்தப்படத்தில் எந்த வேடத்தில் வந்தாலும் தன் அளவில் ஸ்கோர் செய்துவிடும் விஜய் சேதுபதியை கட்டி மேய்க்கும் அளவுக்கு இயக்குநர் அனுபவமில்லாதவர் என்பதாலோ என்னவோ, எந்தக் கடிவாளமும் இல்லாமல் விஜய் சேதுபதியை நடிக்க விட்டிருக்கிறார். அவரும் கயிற்றை அறுத்துக்கொண்டு கழனிக்குள் புகுந்த காளையாக நடிப்பில் வரம்பில்லாமல் மேய்ந்திருக்கிறார். தனக்குள் ஏதோ மாற்றம் நடப்பதாக அவர் உணரும்போதாகட்டும், அதைக் கன்டுபிடித்து அவர் தனக்குத்தானே கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொள்ளும் போதாகட்டும்… நாமே ‘கட்’ சொல்லி அவரது நடிப்பை நிறுத்தலாம் என்ற அளவுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய பில்லைப்போல் அதிர்ச்சியளிக்கும் அளவில் அளவின்றி நடித்துத் தள்ளியிருக்கிறார்.

அவரே ஸ்பிளிட் ஆகிக் கதாநாயகனாகவும், வில்லனாகவும் மாறிப்போவது எத்தனை பேருக்குக் குழப்பமில்லாமல் புரியும் என்றே தெரியவில்லை. அதுதான் பிரச்சினை என்றால் இவரை முழுமையாக நம்பும் பார்த்திபனிடம் முன்னரே தன் பிரச்சினையைச்சொல்லி அதனைத் தீர்த்திருக்க முடியும். 

பார்த்திபன் தன் பங்குக்கு நடிக்காமல் நடித்து ரசிக்க வைக்கிறார். விஜய் சேதுபதியின் அறிமுக காட்சிகளில் அவரை உற்றுப் பார்த்து அவரைத் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ளும் பாங்கில் கவர்கிறார் பார்த்திபன். அவருக்காக அவரே உருவாக்கிக்கொண்ட வசனங்களில் ‘பஞ்ச்’சமில்லாமல் உரையாடுவதில் அவர் அடையாளம் தெரிகிறது.

பார்த்திபனின் தங்கையாக வரும் மஞ்சிமா மோகனுக்கு ‘உம்’மென்று வருவதைத் தவிர வேறொன்றும் உருப்படியான வேலையில்லை. இதே அளவில் உருண்டு திரண்டு கொண்டிருந்தால் இது போன்ற தங்கை கேரக்டர்கள் கூட எதிர்காலத்தில் சாத்தியமில்லை மஞ்சிமா. பார்த்திபனின் அவசரத்துக்கு ஒரு ஐம்பது லட்ச ரூபாய் புரட்டித்தர உதவுவதைத் தவிர ஹீரோயினாக வரும் ராஷி கண்ணாவுக்கும் பெரிய வேலையில்லை. சேட்டுப் பெண் என்ற அளவில் பொருத்தமாக இருக்கிறார் ராஷி கண்ணா.

விஜய் சேதுபதிக்கு முன்னால் பார்த்திபனின் வலது கையாக இருக்கும் பக்ஸ் பகவதி பெருமாளின் இடது கைக்கு விஜய் சேதுபதி வைக்கும் உலை ரசிக்க வைக்கிறது. அதே ஜோரில் முழுப்படமும் சென்றிருந்தால் இரண்டாவது பாதியில் நம் கொட்டாவிக்கு வேலை இருந்திருக்காது.

பக்ஸின் கண்கள் பெரியதா, விஜய் சேதுபதியின் நண்பனாக வரும் கருணாகரணின் கண்கள் பெரியதா என்று பட்டி மன்றமே வைக்கலாம். இரண்டு பேரும் அதிர்ச்சியில் நன்றாகவே முழிக்கிறார்கள். 

96 படத்தில் சூப்பட் ஹிட் இசைத்த கோவிந்த் வசந்தாவைக் கூடி வந்து இதில் இசைக்க வைத்ததில் பாடல்கள் கோவிந்தா ஆனதோடு சரி. மனோஜ் பரமஹம்சாவின் பரம அம்சமான ஒளிப்பதிவு மட்டுமே ஆறுதல்.  

இரண்டாவது பாதிக் கதையின் தொய்வைக் கடைசிக் காட்சியில் வரும் சத்யராஜின் லொள்ளு நிறைவு செய்யப் பார்க்கிறது. ஆனால், அமைதிப்படை அமாவாசையில் பாதியைக் கூடத் தொட முடியாத விஜய் சேதுபதியின் நடிப்பை சத்யராஜ் புகழ்வதாக வருவது ரொம்பவே ஓவர். அவரே தன்னை அன்டர் எஸ்டிமேட் செய்து கொள்வதை ஏற்க முடியவில்லை.

துக்ளக் தர்பார் – குழம்பிய குட்டையில் ஊறிய பழைய மட்டை..!