ஏகப்பட்ட கொலைகளில் ஆரம்பிக்கிறது படம். அந்தக் கொலைகளைச் செய்தது யார் என்கிற கேள்வியை எழுப்பும் சத்யராஜின் குரலே படத்தை வழி நடத்திச் செல்கிறது. அவர்தான் படத்துக்குள் சேகுவேரா என்று அறிக.
ஒரு புதுமுகமாக படத்தில் நடிப்பதே ஆகப்பெரிய விஷயம். எனில் அந்தப் படத்தை இயக்கி நடிப்பது அதைவிடப் பெரிய விஷயம் என்று இருக்க, அந்த இரு பெரும் சுமைகளையும் தாங்கி நடித்து இயக்கியிருக்கிறார் ஏ.டி. அலெக்ஸ்.
தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்று மேலே வந்து விட்டால் தங்கள் உயர்த்தப்பட்ட வாழ்க்கைக்கு ஆபத்து என்பதைப் புரிந்து வைத்திருக்கும் ஆதிக்க சக்திகள் அவர்களை எப்போதும் மேலே வர விடுவதில்லை.
அப்படி நாயகன் அலெக்ஸ் போராடி படித்து பள்ளி இறுதி வரை வந்தும் அதற்கு மேல் அவரால் படிக்க குடும்ப சூழல் இடம் தரவில்லை. அதனால் வேலைக்குப் போகிறார்.
நலிந்த பிரிவினர் வாழும் அந்தப் பகுதியில் புரட்சியாளராக நாஞ்சில் சம்பத் இருக்க, கல்வியை பாதியில் நிறுத்திய அலெக்சை மேற்கொண்டு படிக்கச் சொல்கிறார். அப்படிப் படிப்பதன் மூலம் அடுத்த வாரிசையும் கல்வி கற்கத் தூண்ட முடியும் என்பது அவரது அறிவுரை.
அறிவுரை நன்றாக இருந்தாலும் அதற்கான உதவிகள் வேண்டுமே..? அதைச் செய்து அவரை கல்லூரியில் சேர்க்க உதவுகிறார் கல்லூரிப் பேராசிரியராக வரும் சத்யராஜ்.
ஒரு கட்டத்தில் அலெக்ஸ் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகவே சத்யராஜ் கல்லூரியை விட்டு வெளியேற நேர்கிறது.
ஆனாலும், கல்லூரியில் உடன் படிக்கும் சக மாணவர்கள் மூலமாக மட்டுமன்றி சில பேராசியர்கள் மூலமாகவும் சாதிய வன்முறைக்கு ஆளாகும் அலெக்ஸ், தன் கல்வியைத் தொடர முடிந்ததா என்பதே மீதி கதை.
நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அலெக்ஸ், கட்டுடல் கொண்டிருப்பதோடு கச்சிதமாகவும் நடித்திருக்கிறார்.
நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமுடையவர் போலிருக்கிறது. இடைவேளைக்கு நெப்போலியன் எழுச்சி என்று டைட்டில் போட்டுக் கவனம் கவர்கிறார்.
இப்படி ஒரு புரட்சிப் படத்துக்கு சில நாட்கள் தேதிகள் ஒதுக்கி நடித்திருக்கும் சத்யராஜின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. அவரது பங்களிப்பில் இந்தப் படம் கவனம் பெறுவது உண்மை.
கலியபெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தவர் கவனம் ஈர்க்கிறார்.
கூல் சுரேஷ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் வந்து போனாலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் சாம் அலன், இசையமைப்பாளர் பி.எஸ்.அஸ்வின், படத்தொகுப்பாளர் கெளதம் ஆகியோர் தங்களால் ஆனதைச் செய்து இருக்கிறார்கள்
தன் கண்களில் பட்ட துன்பங்கள் அனைத்தையும் கதையாக எழுதி இருக்கும் அலெக்ஸ், அதைத் திரைக்கதைப் படுத்துவதில் தடுமாறி பிரச்சாரமாகவே படம் முழுவதையும் தந்திருப்பதுதான் குறையாக இருக்கிறது.
”எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது, கல்வி மூலமாகவே வெல்ல முடியும்”, என்று சத்யராஜ் அறிவுறுத்தியும் அதற்காகவே அவர் வேலையை விட்டு வெளியேறியும் கூட அதைக் கருத்தில் கொள்ளாமல் அலெக்ஸ் ஆதிக்க சக்தி மாணவர்களுடன் கைகலப்பில் இறங்குவது தவறான முடிவாகவே படுகிறது,
கடைசியில் கொலைகாரர் என்ற பட்டத்துடன் அவர் வாழ்க்கை முடிவதில் சமுதாயத்துக்கு என்ன படிப்பினை இருக்கிறது..? இத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருந்தவர் கல்லூரித் தேர்வு முடித்துவிட்டு வெளியில் வந்தாவது புரட்சியைத் தொடங்கியிருக்கலாம்.
படம் முழுவதும் படு சீரியஸாக போய்க்கொண்டிருப்பதால் நகைச்சுவை நடிகர்கள் இடையில் வந்து போனாலும் நம்மால் சிரிக்க முடியவில்லை.
தோழர் சேகுவேரா – முனைப்பான முயற்சி தோழர்..!