இந்தியாவின் பிரமாண்ட படமாக, பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான படம்.
அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா..? பார்க்கலாம்..!
அம்புலிமாமா கதை அளவுக்கு மிக மெல்லிய லைன். காணாமல் போன தன் கணவன் நினைவாகவே வாழ்ந்து வரும் ஞாபக மறதிப் பாட்டிக்காக தன் தாத்தாவைத் தேடிப் போகும் பேரனின் கதை.
அந்தத் தாத்தா யார்..? அவர் ஏன் காணாமல் போனார்..? பாட்டி கண்ணில் படாமல் ஏன் தலைமறைவாக இருக்கிறார்..? தாத்தாவை பேரன் கண்டுபிடித்தாரா என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக மூன்று மணிநேரத்துக்கும் அதிகமாகப் ‘ படம் காட்டு’ கிறார் இயக்குநர் மாருதி.
அந்த தாத்தா சஞ்சய் தத். பாட்டி ஜரீனா வகாப். பேரன் யாரென்று சொல்லத் தேவையில்லை. நம்ம பிரபாஸ்தான்.
பாட்டி வளர்த்த பிள்ளை என்பதைத் தவிர வேறெந்த குறிப்பும் இல்லை பிரபாஸ் பாத்திர வார்ப்பில்.
ஆனால், வருகிற காட்சிகளில் எல்லாம் மாஸ் காட்டுகிறார். சண்டைகளில் அடி என்றால் இடி இறக்குகிறார். பல்சர் பைக்கில் வருபவர்களை அப்படி அப்படியே கைகளில் அழுக்கு படாமல் பைக்குடன் தூக்கி அடிக்கிறார். அடிப்பதைத் தவிர அங்கங்கே நடித்தும் இருக்கிறார்.
கதாநாயகிகளைப் பார்க்கும்போது “இவர்கள்தான் ஹீரோயின்ஸ்..!” என்று அடையாளம் கண்டுபிடித்து அந்தக் கணமே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
ஒன்றுக்கு மூன்று நாயகிகள். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் தவிர எக்ஸ்ட்ரா பிட்டிங்கில் ரித்தி குமார் வேறு இருக்கிறார்.
பிரபாஸ் கரெக்ட் பண்ணுவதை தவிர நாயகிகளுக்கென்று தனியாக எந்த வேலையும் இல்லை. ஆனால், மாளவிகா மட்டும் கிளாமரில் தனியாக அடையாளம் தெரிகிறார்.
பிரபாஸின் தாத்தாவாக வரும் சஞ்சய் தத், கொடூர வில்லனாக வருகிறார். ஆனால் அவரது நியாயம், தான் ஏழையாக இருப்பதால் எப்படியும் பணம் சேர்ந்து விட வேண்டும் என்பதுதான்.
அதற்காக உயிரைக் கொடுத்து மாந்திரீகம் எல்லாம் கற்றுக் கொள்பவர் உயிரைக் கொடுத்து ஏதாவது உழைத்திருக்கலாம். அப்படி கற்றுக்கொண்ட மாந்திரீகத்தை வைத்து நிதி அகர்வாலிடம் பணம் பறிப்பதற்கு பதிலாக சம்பவம் நடக்கும் வங்கி கேஷியரிடம் அதை பயன்படுத்து இருந்தால் பல லட்சங்கள் அடித்து இருக்க முடியும்.
அதேபோல் ஜமீன்தாரினியின் அத்தனை சொத்துக்களையும் மாந்திரீகத்தை வைத்து அபகரித்து, அதை சாகும் வரை பயன்படுத்தாமலும் செத்த பின்பு ஆவியாக வந்து பூதம் காத்த பொக்கிஷமாக அவற்றை வைத்திருப்பதும் எதற்காக என்றே தெரியவில்லை.
ஞாபக மறதி பாட்டி ஜரினா வகாப் நிறைவாக செய்திருக்கிறார். அவரது இளைய பருவத்தில் வரும் நம்ம அம்மு அபிராமிக்கு அடித்த ஜாக்பாட் இந்த வேடம்.
இப்படி அம்மு அபிராமி, விடிவி கணேஷ் ரேஞ்சில் எல்லா மொழியிலிருந்தும் நடிகர்கள் நடித்திருப்பதால் இது பான் இந்திய படம் ஆகியிருக்கிறது.
நம்ம சமுத்திரகனியும் உள்ளே இருக்கிறார். அவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது போல் அறிமுகமாகி கடைசியில் பொசுக்கென்று காணாமல் போகிறார்.
ஜமீன் மாளிகை என்று ஒரு பிரம்மாண்ட செட் போட்டு முக்கால்வாசி படத்தையும் அதற்குள்ளேயே எடுத்திருக்கிறார்கள். செட் போட்ட கலை இயக்குனருக்கு ஒரு செட் வைரமோதிரம் போடலாம்.
அந்த ஒரு செட்டுக்கு பயன்படுத்திய செலவில் பல இடங்களுக்கும் பயணப்பட்டு படம் பிடித்து இருந்தால் இன்னும் பிரம்மாண்டம் கிடைத்திருக்கும்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு படு நேர்த்தி. எஸ். தமனின் இசையில் திரையரங்கில் இடி முழக்கம் கேட்கிறது.
நம்ப முடியாத கதையை நம்ப வைப்பதுதான் சினிமா. அந்த வகையில் இந்த மாயாஜால படத்துக்கு இயக்குனர் மாருதி கொஞ்சம் நம்பகமும் சேர்த்து இருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும்.
தி ராஜா சாப் – பூதம் காத்த புதையல்..!
– வேணுஜி