April 20, 2024
  • April 20, 2024
Breaking News
February 2, 2023

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்பட விமர்சனம்

By 0 426 Views

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்டு வந்தாலும், நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் இருந்து போதிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கம் பெரும்பாலும் ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவது பரிதாபத்திற்குரிய விஷயம்.

அந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு ஒரு சவுக்கடி கொடுத்த காரணத்தினாலேயே மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன் ‘ வெற்றி பெற்றது.

அங்கே சமைத்த அந்த உண(ர்)வு நீர்த்துப் போகாமல் அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

மூலத்தின் சுவை குறையாமல் இருக்க அதன் தலைப்பை கூட மாற்றத் தோன்றாமல் அப்படியே கொடுத்திருப்பதும் சிறப்பு.

வழி வழியாக ஆண்கள் வெளியே வேலைக்கு செல்வதும் பெண்கள் வீட்டின் சமையல் அறைக்குள்ளேயே முடங்கி விடுவதுமாகவே பழகிவிட்ட ஒரு குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட்டு வருகிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

புகுந்த வீடு வந்த சில நாட்களிலேயே அந்தக் குடும்பத்தில் நிலவி வரும் ஆணாதிக்க மனோபாவம் அவரைச் சுட ஆரம்பிக்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு காலை முதல் இரவு வரை வாய்க்கு ருசியாக வக்கணையாக சமைத்து போடுவதற்கும், இரவில் கணவனின் தாபத்தை இறக்கி வைப்பதற்கு மட்டுமே என்று ஆகிப் போகும் சூழலில் ஐஸ்வர்யா ராஜேஷின் நிலை என்ன ஆனது… அவர் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் கதை.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என்றே கதைகள் அமைவது சிறப்பு. இந்தப் படத்தை பொறுத்தவரை இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்று இருந்த கதை நாயகி பாத்திரங்களை தாண்டிய ஒரு படைப்பு என்று சொல்லலாம்.

அதைப் புரிந்து கொண்டு ஐஸ்வர்யாவும் ஆகச்சிறப்பாக அந்த பாத்திரத்தைத் தாங்கி இருக்கிறார். இதுவரையில் நடித்திறாத வகையில் ஐஸ்வர்யா ஏற்றிருக்கும் பாத்திரம், அவரது நடிப்பைப் பொறுத்த அளவில் ஒரு ‘அட்சய பாத்திரமா’கவே அமைந்திருக்கிறது.

பெண் பார்க்க வந்த இடத்தில் “சமையலில் விருப்பம் உண்டா..?” என்று நாயகன் ராகுல் ரவீந்திரன் கேட்க மிகுந்த சந்தோஷத்துடன், “நான் நல்லாவே சமைப்பேன்..!” என்று உவகை பொங்க ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்லும்போது அவர் தன்னை ஒரு பொறிக்குள் சிக்க வைத்துக் கொள்கிறார் என்பது அவருக்கு மட்டும் அல்ல – நமக்கும் புரியவில்லை.

அதேபோல் வீட்டில் டைனிங் டேபிளில் குப்பைகளைப் போட்டு விட்டுப் போகும் வழக்கம் உள்ள கணவன், ஹோட்டலில் நாகரீகமாக அதை எடுத்து வைக்கும் போது இயல்பாக, “வெளியேவாவது உங்களுக்கு டேபிள் மேனர்ஸ் தெரிகிறதே என்று கேட்கப் போய் அதுவே பூதாகரமாக வெடிக்கும் என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை.

அந்த இடங்களில் எல்லாம் வெகு அழகாக செய்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், படுக்கையில் வைத்து அதற்கு மன்னிப்பு கேட்கச் சொல்லி கணவன் கேட்டு அந்த மன்னிப்பை வாங்கிக் கொண்டு புன்னகை செய்ய, அதுவும் கூட அப்போதைய கட்டில் சுகத்துகான உடன்பாடுதான் என்று புரிந்து கொள்ளாமல் பதிலுக்கு சிரிக்கும் போதும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்த கட்டத்தை தொட்டிருக்கிறார்.

இத்தனை அமைதியும் ஒரு கட்டத்தில் வீணாகப் போய் “முடிஞ்சா உள்ளே வா… என்ன வந்து தொட்டுப் பார்..!” என்று வெடிக்கும் இடத்தில் பெண் சிங்கமாக கர்ஜிக்கிறார். 

தன் வீட்டுக்கு வந்த இடத்தில் சகோதரியிடம் தன்னுடைய தம்பி குடிக்கத் தண்ணீர் கேட்க, “அதை கூட நீ போய் எடுத்துக்க மாட்டியா… போய் எடுத்துக் குடி..!” என்று அதட்டி, ஆணாதிக்கத்தை முளையிலேயே கிள்ளும் இடம் கைத்தட்ட வைக்கிறது. இந்தப் படத்தின் பாத்திரத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் பல விருதுகளை எதிர்பார்க்கலாம்.

மிகச் சில படங்களிலேயே நடித்துள்ள ராகுல் ரவீந்திரனும் இந்த படத்தில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிக்ஸர் அடித்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது. வில்லன் என்றால் அது கொடூரமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று யோகாசனம் புரிந்து கொண்டே மென்மையாக மனைவியை ஆதிக்கம் புரியும் இடங்களில் அமைதியான வில்லனாக ஆச்சரியப்படுத்துகிறார்.

இதுவரை வில்லனாக நாம் பார்த்திருக்கும் போஸ்டர் நந்தகுமாரும் ராகுல் ரவீந்தினின் அப்பாவாக அமைதியாகவே நடித்திருக்கிறார். அவர் பேசுவதும் ஐந்தாறு இடங்களில்தான். ஆனால் ஒவ்வொரு பேச்சுக்குள்ளும் ஒரு வாள் வீச்சு இருக்கிறது.

வீட்டுப் பெண்களின் மூலமே ஆணாதிக்கம் வளர்கிறது என்பதே படத்தில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய செய்தி. அதற்கு அச்சாரமாக வருகிறார்கள் நந்தகுமாரின் மனைவி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா.

சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கலைராணி ஒரு சூனியக் கிழவியாகவே தெரிகிறார்.

யாரும் எதிர்பார்க்காமல் ஒரே ஒரு காட்சியில் வரும் யோகி பாபு சுவாரசியத்தை கூட்டுகிறார்.

பாலசுப்பிரமணிஎம்மின் இன் கேமரா, பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும்தான் உரித்தானது என்பதை இந்தப் படத்தில் உடைத்து இருக்கிறது. அந்த இருட்டு கிச்சனில் கூட ஒளிக் கற்றைகள் சிதற அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார்.

ஜெர்ரி சில்வஸ்டர் வின்சென்ட்டின் இசையும் படத்தின் அளவுக்குள் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து வரும் சமையல் கட்டு காட்சிகள் ஒருவித அலுப்பை தந்தாலும் அதுதான் படத்தின் அடிநாதம். பெண் எப்படி சமையல் கட்டுக்குள்ளேயே தன் வாழ்க்கையை கழிக்கிறாள் என்று சொல்லும் குறியீடு அது.

ஆனாலும் தன் தேவைகள் என்ன என்பதை ஒரு சில இடங்களிலாவது ஐஸ்வர்யா ராய் விவாதித்து தன்னுடைய உரிமைகளைப் பெற்றிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

அதேபோல் பெண்ணின் மனத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் படத்தில் கடவுள் பக்தி கொண்டோரின் மனத்தையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் அல்லவா..?

ஐயப்ப பக்தர்களை ரொம்பவே கிண்டல் அடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி ஒரு பெண்ணின் புரட்சி என்பதை சமையல் அறையில் இருந்தும் தொடங்க முடியும் என்று உணர்த்தி இருக்கும் இந்த படம், ஒரு பெண்ணின் எதிர்ப்பைப் பதிவு செய்வதுடன் முடிந்து விடுகிறது. 

இதனால் எல்லாம் ஆணாதிக்கம் முடிவு பெறுவதில்லை என்றும் ராகுல் ரவீந்திரன் இடம் பெறும் படத்தின் கடைசிக் காட்சி நமக்கு புரிய வைக்கிறது.

ஆக, இந்த கிரேட் இந்தியன் கிச்சன், சுடச் சுட பெண்ணுரிமையை ருசிக்க பந்திக்கு வைக்கிறது..!