September 16, 2024
  • September 16, 2024
Breaking News
August 15, 2024

தங்கலான் திரைப்பட விமர்சனம்

By 0 147 Views

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்க இந்தப் படத்தின் முதல் பார்வையே மிரட்டியது. அந்த வகையில் தங்கலான் தரத்தை சற்றே உரசிப் பார்ப்போம்.

19ஆம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வட ஆற்காடு மாவட்டப் பகுதியில் நடக்கிறது கதை.

அந்தப் பகுதியில் தங்கம் கிடைக்கும் என்று ஒருவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் அந்தத் தங்கத்தைக் கண்டுபிடித்துக் கைப்பற்ற நினைத்த வெள்ளைக்காரர் ஒருவர் அங்கிருக்கும் பண்ணையில் வேலை செய்பவர்களை அரசாங்க அச்சுறுத்தலைக் காட்டி அழைத்துச் செல்கிறார்.

இந்நிலையில் அந்த மலைப்பகுதியில் ஒரு சூனியக்காரியின் கட்டுப்பாட்டில் தங்கம் இருந்ததாகவும், அதைப் பெற போராடிய தன் தாத்தா என்ன ஆனார் என்பதையும் கதையின் நாயகன் தங்கலான் தெரிந்து வைத்திருக்கிறான் என்கிற ஒரு ஃபிளாஷ்பேக்கும் சொல்லப்படுகிறது.

அந்த ‘மந்திரவாத எதார்த்த’ நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தூக்கத்தில் மிரண்டு எழும் அந்தத் தங்கலானின் வழிகாட்டுதலின்படியே தங்கத்தைத் தேடி புறப்படுகிறது வெள்ளைக்காரர் தலைமையிலான குழு.

தங்கலானாக சீயான் விக்ரம் – தங்க முலம் பூசி மின்னிக் கொண்டிருக்கும் நடிகர்களின் மத்தியில்அ அசல் 916 தங்கம்.

அவ்வப்போது வணிகரீதியான படங்களில் நடித்து வந்தாலும் இப்படி நடிப்புக்குச் சவால் தரும் வேடங்கள் கிடைத்தால் ஊனையும், உயிரையும் உருக்கித்  தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார் விக்ரம்.

அப்படி ஒரு அசுர நடிப்பு வேள்வி அவருடையது. எப்பேர்பட்ட நிறமும், உடல்வாகும் கொண்ட அவர் இப்படி ஒரு பழங்குடியாகவே மாறி இருப்பது ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். “இங்கே சாவுக்குத் துணிஞ்சவனுக்குதான்  வாழ்க்கை..!” என்று அவர் பேசும் வசனம்தான் படத்தின் உயிர் நாடி என்றாலும் அதில் எந்தவிதமான ஹீரோயிஸமும் துருத்திக் கொள்ளாமல் ஒரு பழங்குடியாகவே நின்று பாசாங்கில்லாமல் அதைப் பேசியிருப்பது விக்ரமின் தனிச்சிறப்பு.

அதிலும் தமிழ்ச் சினிமாவில் கமலுக்குப் பின் கோவணம் கட்டிக்கொண்டு நடிப்பதெல்லாம் வேறு முதல் நிலை ஹீரோகளுக்கு சாத்தியமே இல்லை. 

அவருக்கு அடுத்த இடத்தில் பசுபதியின் நடிப்பைச் சொல்ல வேண்டும். குறிப்பிடத்தக்க வேடம் இல்லை என்றாலும் ஒடுக்கப்பட்ட தங்களை எப்படியாவது உயர்த்திக்கொள்ள முயலும் நோக்கில் ராமானுஜர் வழியில் நாமம் தரித்து பெருமாளை வணங்கும் ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருக்கும் அவர் அந்தக் காரணத்தாலேயே அங்கங்கே நகைச்சுவைக்கும் பயன்பட்டு இருக்கிறார். 

இரண்டு இடங்களில் நாயகன் உயிரைக் காப்பதில் அவரது பாத்திரத்தை முக்கியத்துவம் கொண்டதாகச் செய்திருக்கிறார் இயக்குனர். 

தங்கலானின் மனைவியாக வரும் பார்வதியின் நடிப்பையும் பார்த்தாக வேண்டும். கனமான பாத்திரம் என்பதாலோ என்னவோ அவரும் நிறைய ‘வெயிட் ‘ போட்டு இருக்கிறார். தன் அத்தனைப் பிடிவாதமும் கணவனின் சாகசப் பேச்சின் முன்பு மங்கி விடுவதில் ஒரு சாமான்ய மனைவியாகவே மலர்ந்திருக்கிறார் பூ பார்வதி.

முதல் முதலாக ரவிக்கை அணிந்து கொண்டு, “அப்படியே தூக்கிப் புடிச்ச மாதிரி இருக்கு..!” என்று மகிழும் அவரது அனுபவம், அந்த வேடத்தைத் தூக்கிப் பிடித்து நிறுத்துகிறது.

சூனியக்காரியாக வரும் மாளவிகா மோகனன் போடும் காட்டுக் கத்தலில் அந்தப் பிராந்தியமே கலகலத்துப் போவது மிரட்டல். ஆனால் கதை நாயகியை விட இந்தக் கானக மோகினி அழகாகத் தெரிவது அநியாயம். ஆகக் கடைசியில் மாளவிகாவுக்கும் ஒரு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது வேறு விஷயம்.

விக்ரம் – பார்வதியின் குழந்தைகள், மற்றும் உடன் வரும் பாத்திரங்கள் அனைவருமே அத்தனை இயல்பாகப் பாத்திரங்களில் பொருந்திப் போயிருக்கிறார்கள் என்றால் அது இயக்குனரின் திறமை மட்டுமே. 

பல பீரியட் படங்களில் வெள்ளைக்காரர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இத்தனை இயல்பான ஒரு வெள்ளைக்காரரைப் பார்த்ததில்லை – டேனியல், பக்கா பிரிட்டிஷ் சரக்கு.

படத்தில் வரும் பாத்திரங்களின்… குறிப்பாக சீயானின் நடிப்பாகட்டும், பா.ரஞ்சித்தின் இயக்கமாகட்டும் அனைத்துமே அதிகபட்ச இந்தியத் தரம். ஆஸ்கரைத் தொடக்கூடிய உயரம்தான். 

ஆனால்… படத்தின் எல்லாத்தரமும் இப்படியே இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல நேர்வதுதான் வேதனை தருகிறது.

படத்தில் கையாளப்பட்டிருக்கும் கதை அறிவுக்குப் பொருந்தாதது. தங்கலானின் தாத்தா கதையாகச் சொல்லப்படுவது ‘கேள்வி ஞானமாக’ இருப்பதால் அதில் மாயாஜாலம், சூனியம் எல்லாம் கலந்திருப்பதை ஏற்க முடியும். ஆனால், தற்காலக் கதையிலும் அதே அமானுஷ்யங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதும் பூதம் காத்த புதையலாக தங்கம் அங்கே விளைந்திருப்பதும், அது யாருக்கும் பயன்படாமல் போவதும் அம்புலி மாமா கதையாகவே இருக்கிறது. 

அத்துடன் இயல்புக்கும், வணிகத் தேவைக்குமான சமன்பாட்டில் தொக்கி நிற்கிறது திரைக்கதை. 

அங்கங்கே தமிழ்ப் படம் பார்க்கிறோம் என்கிற உணர்வே எழாமல் ஹாலிவுட் தரத்தில் செல்லும் படம்… அடுத்தடுத்த காட்சிகளில் இறங்கி மிகவும் தேய்ந்த சிந்தனைக்குள் முடங்கி விடுகிறது. 

அப்படியேதான் ஒலித்து இருக்கிறது ஜிவி பிரகாஷின் இசையும். சில காட்சிகளில் அற்புதம். சில காட்சிகளில் அற்பப் பதம். 

ஒளிப்பதிவுக்கு ஈடாக கிராபிக்ஸ் கலைஞர்களால் பணியாற்ற முடியவில்லை என்பது முக்கிய பலவீனம். படத்தில் வரும் பாம்புகளும், ஒரு கருஞ்சிறுத்தையும் மலிவான உத்திகளில் மல்லாந்து விடுகிறது.

படத்தின் கதையை மாயா பஜார் போல எடுத்துவிட்டுக் கடைசியில் கோலார் தங்க வயலில் இப்படித்தான் ஒடுக்கப்பட்டோர் பாடுபட்டார்கள் என்று நிஜ புகைப்பட ஆல்பத்தை எல்லாம் காட்டுவதில் எந்தவிதமான ஈர்ப்பும் நமக்கு ஏற்படவில்லை.

ஒரு அரிய முயற்சியும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும் தவறான கதைத் தேர்வால் தள்ளாடிப் போனது கவலையளிக்கிறது. 

காலக் கட்டம், நிலப்பரப்பு இவற்றை ஒட்டி கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பு ‘லைவ்’ ஆக இருந்தாலும் பல இடங்களில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவே இல்லை. 

படம் என்ன சொல்ல வருகிறது..? ஓரிடத்தில் புத்தர் (?) தோன்றி ‘ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்கிறார் – மெசேஜ் அதுதானா..?

ஆக, தங்கக் கோப்பை தொட்டுவிடும் தூரத்தில் தட்டிப் போனாலும் நிகரற்ற உழைப்பில் சினிமா சரித்திரத்தில் மறக்க முடியாத இடம் பிடிப்பான் இந்தத் தங்கலான். 

படம் ஏற்படுத்தப் போகும் விவாதங்களும், பெறப் போகும் விருதுகளும் சத்தியமான சாத்தியம்  என்பதையும் மறுப்பதற்கு இல்லை..!

– வேணுஜி