நாயகன் அதர்வா உள்ளிட்ட ஆறு பேர் காவலர்களாக வேலைக்குச் சேர, இரவு ரோந்துக்கு அனுப்பப்படுகிறார்கள் அனைவரும்.
வழியில் சந்தேகத்துக்கு இடமான ஒருவரை அவர்கள் விசாரிக்க முயல… தப்பியோடும் அவரைத் துரத்திச் செல்லும்போது ஒரு ஆளரவமற்ற குடிசைப் பகுதியில் சிக்கிக் கொள்கிறார்களா.
அங்கு அஸ்வின் காக்கமனு தலைமையில் இயக்கும் சதிகார கும்பலொன்று இருக்க, அவர்கள் இந்த ஆறு பேரில் இருவரைக் கொல்ல, மீதி நால்வரும் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.
அந்த முயற்சியில் அந்த சதிகார கும்பலுக்கும் தங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வர, இவர்கள் உயிர் தப்பினார்களா, அங்கு நடக்கவிருந்த சதி முறியடிக்கப் பட்டதா என்பது மீதிக் கதை.
ஹீரோவுக்குரிய பில்டப்புகள் ஏதுமின்றி கதை நாயகனாக மட்டுமே வரும் அதர்வா, அந்தப் பாத்திரத்தை மிகச் சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார். கண்களில் உயிர் பயம் தெரிய, அதே நேரத்தில் தன் நண்பர்களை காப்பாற்றி ஆக வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியையும் வெளிக்காட்டுவது சிறப்பு.
வில்லன் அஸ்வின் கக்கமனுவின் பாத்திரமும், அவர் இரண்டாவது ஹீரோ என்று சொல்லத் தக்க அளவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் அவர் மீது கோபம் வந்தாலும் அந்த ஃப்ளாஷ் பேக் தெரியும் போது அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது.
ஆனால் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர் தனது கிராமத்தில் விவசாயிகளுக்கு நேரும் கொடுமைகளை எதிர்த்து அங்கேயே குரல் கொடுக்காமல் இருப்பதும், யாரோ சில போலீஸ்காரர்கள் தவறாக நடந்து கொண்டதற்காக ஒட்டுமொத்த போலீஸ்காரர்களையும் தண்டிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
நாயகி லாவண்யா திரிபாதிக்கு இன்னும் வேலை கொடுத்திருக்கலாம் அல்லது இந்த சின்ன பாத்திரத்துக்கு வேறு யாரையாவது பயன்படுத்தி இருக்கலாம்.
ஆறு பேரில் ஒருவராக வரும் ஷாரா உயிருக்கு பயந்து ஓடும் போதும் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
இவர்களுடன் செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லஷ்மி பிரியா சந்திரமெளலி, பாரத், ஷர்வா, தாஃபிக் உள்ளிட்ட பிற வேடங்களில் நடித்திருப்பவர்களும் குறை இன்றி செய்து இருக்கிறார்கள்.
இரவைத் திறமையுடன் ஒளிப்பதிவு செய்து இருப்பதில் சக்தி சரவணனின் திறன் தெரிகிறது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை பரபரப்புக்கு பெரிதும் உதவுகிறது. பாடல்களும் சிறப்பு.
மாநகரம் போன்ற ஒரு படத்தைத் தர வேண்டும் என்ற நினைப்பில் இந்தப் படத்தின் திரைக் கதையை எழுதி இயக்கி இருப்பார் போலிருக்கிறது ரவீந்திர மாதவா,
அதில் ஓரளவுக்கு வெற்றியும் அடைந்திருக்கிறார் என்று சொல்லலாம். சின்னச் சின்ன லாஜிக் குறைகள் தவிர்த்து படத்தை ஒரே உணர்வுடன் கொண்டு சென்றிருக்கும் அவரைப் பாராட்டலாம்.
படத்தில் ஒரு Tunnel முக்கியத்துவம் பெறுவதால்…
தணல் படத்தை Tunnel என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் தவறில்லை..!
– வேணுஜி