September 20, 2024
  • September 20, 2024
Breaking News
April 26, 2023

தமிழரசன் திரைப்பட விமர்சனம்

By 0 195 Views

மருத்துவத்தைக் கையில் வைத்துக் கொண்டு மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனையின் மெடிக்கல் மாஃபியாக்களை இன்னொரு முறை அடையாளம் காட்டி இருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன்.

அப்படி படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியின் மகன் பிரணவ்வுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேர அதற்காக முக்கால் கோடி சிகிச்சை கட்டணமாகவும், அதற்கு முன்பணமாக 25 லட்சம் செலுத்தினால்தான் அறுவை சிகிச்சைக்கான பட்டியலிலேயே இடம் பிடிக்க முடியும் எனவும் தனியார் மருத்துவமனை முரண்டு பிடிக்க, கொதித்து எழுந்த விஜய் ஆண்டனி என்ன செய்தார் – அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஏற்கனவே விஜய் ஆண்டனி ஒரு படத்தில் காவல் துறை அதிகாரியாக வந்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவருக்கு இன்ஸ்பெக்டர் வேடம்தான் என்றாலும் கடமை தாண்டிய தந்தைப் பாசத்தை இதில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு.

அவரால் முடிந்த அளவில் நடித்து ஒப்பேற்றி இருக்கிறார். கடைசியாக மகனின் இதய மாற்று சிகிச்சைக்காகத் தன் இதயத்தை தானம் தர முன் வரும்போது நம் இதயங்களையும் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறார்.

அவரது மனைவியாக வரும் ரம்யா நம்பீசனுக்குப் பெரிய அளவில் வேலை இல்லை. அதனால் ஆரம்ப காட்சிகளில் இரண்டு பாடல்களைக் கொடுத்து அவரை ஆஃப் செய்து விடுகிறார்கள்.

இத்தனை சீரியஸான படத்தில் காமெடி என்ற ஒன்று தேவையே இல்லைதான். இருந்தாலும் அங்கங்கே செருகப்பட்டிருக்கும் காமெடியில் நமக்கு சிரிப்பு வராமல் போவதுதான் வருத்தமே. யோகி பாபு இருந்தும் காமெடி காட்சிகளில் சோகமே மிஞ்சுகிறது.

மலையாள சுரேஷ் கோபி, இந்தியின் சோனு சூட் முதலான பெரிய ஸ்டார்களை அழைத்து வந்தும் அவர்களுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதிலும் நிஜ வாழ்வில் ஒரு ஹீரோவாக நிலைத்து நிற்கும் சோனு சூட்டை தொடர்ந்து வில்லனாகவே பயன்படுத்தி வருவது தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா, கஸ்தூரி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது படத்திற்கு பலம் என்று சொல்ல முடியவில்லை. இத்தனை பெரிய நட்சத்திர பட்டாளம் ஓடிடியில் இந்த படத்தை விற்பதற்கு தகுதி பெறக்கூடும். து

விஜய் ஆண்டனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் பிரணவ் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை அழகான பிரணவ்வை ஒரு நோயாளியாக படுக்கையிலேயே போட்டு வைத்திருப்பது வருத்தமாக இருக்கிறது.

ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகராம் – அப்படியா..?

இசை இளையராஜாவாம் – அப்படியா..?

விஜய் ஆண்டனியை தமிழரசன் என்ற பெயர் வைத்த தமிழ் ஆர்வலராகக் காட்டியிருப்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு இன்ஸ்பெக்டராக இருப்பவர் மருத்துவர் பேசும் ஆங்கிலத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாதவராக இருக்கிறார் என்பதும், தமிழ் ஆர்வலர்கள் தினத்தந்தி தாண்டாதவர்கள் என்பதும் எந்த விதத்தில் நியாயம் இயக்குனரே..?

அதேபோல் படத்தின் அடிநாதம் தமிழரசன் என்கிற தமிழர் ‘லோட்டஸ்’ என்கிற (தாமரை) மருத்துவமனையை எதிர்த்து ஆட்டம் காண வைக்கிறார் என்பதே.

ஆனால் இந்த அரசியலைப் புரிந்து கொண்டு தான் தாமரை சின்னத்துக்காரரான தயாரிப்பாளர் படம் எடுக்க முன் வந்தாரா என்பது புரியவில்லை.

அது போகட்டும் – அது அவர்களுக்கு உள்ளான அரசியல்..!

நம்மைப் பொறுத்தவரை தமிழரசன் – பாசக்காரன்..!