April 23, 2024
  • April 23, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ அடல்ட் கன்டென்ட் படமா – இயக்குனர் விளக்கம்
April 30, 2023

சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ அடல்ட் கன்டென்ட் படமா – இயக்குனர் விளக்கம்

By 0 120 Views

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிக்க, கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘டக்கர்’.

இதில் நாயகியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர்  நடித்திருக்கிறார்கள்.

மே 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘டக்கர்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ், படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

“படத்தின் நாயகன் சித்தார்த் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர். நாயகி திவ்யான்ஷா பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஏழையாக இருக்கும் சித்தார்த்துக்கு பெரிய பணக்காரராக வேண்டும் என்று ஆசை. கோடீஸ்வரியாக இருக்கும் திவ்யான்ஷாவுக்கு அதனால் நிறைய சிக்கல்கள். அதிலிருந்து விலக நினைக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் ஒன்றாக பயணிக்க நேரிட, அந்தப் பயணத்தில் என்ன நடந்தது என்பதை லவ் அண்ட் ஆக்‌ஷன் ஜானரில் முழுக்க முழுக்க கமர்ஷியலாக சொல்லியிருக்கிறேன்.” என்றார் கார்த்திக்.

“டக்கர் பட டிரைலரை பார்க்கும்போது இது அடல்ட் கன்டென்ட் படமாக தோன்றுகிறதே?” என்று கார்த்திக் ஜி.கிரிஷிடம் கேட்டபோது, “நாயகியின் கதாபாத்திரத்தை ரொம்ப போல்டானவராக வைத்திருக்கிறேன். இப்படிப்பட்ட பெண்கள் நகரில் சாதாரணமாக நடமாடினாலும், கிராமத்தில் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது.

இப்படி ஒரு பொண்ணு, அப்படி ஒரு பையன், இவர்களுக்கு இடையே காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் திரைக்கதை. டிரைலரில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறது. ஆனால், அதன் பிறகு வரும் காட்சிகள் எல்லாமே அப்படி இருக்காது.

அதனால், இது அடல்டு படம் அல்ல, அனைவரும் பார்க்க கூடிய படம் தான். தணிக்கை அதிகாரிகள் படம் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார்கள். படத்திற்கு யு/ஏ சான்றிதழ்தான் வழங்கியிருக்கிறார்கள். குடும்பத்துடன் பார்த்தால் கூட சிரித்துவிட்டுதான் வருவீர்கள்.” என்றார்.

மேலும் படம் பற்றி அவர் கூறிய போது, “கோபமான இளைஞர் வேடத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். அவரை சுற்றி தவறாக எந்த விஷயம் நடந்தாலும் அதை பார்த்து சட்டென்று கோபமடைந்துவிடுவார். நிஜத்திலும் அவர் அப்படி தான். சமூகத்தில் எதாவது தவறு நடந்தால் அதை எதிர்த்து குரல் கொடுப்பார், இந்த படத்திலும் அதுபோன்ற ஒரு வேடத்தில் தான் நடித்திருக்கிறார்..!” என்றார்.

“காதல் மற்றும் பயணம் தொடர்பாக சில படங்கள் வந்திருந்தாலும், இந்த படத்தில் வெறும் காதல் மற்றும் பயணத்தை மட்டுமே மையப்படுத்தாமல், தத்துவமான விஷயங்கள் நிறைய பேசியிருக்கிறோம். டிரைலரில் கூட ஒரு வசனம் வரும், “பணம் இருந்தால் நிம்மதி போயிடும்” என்று ஹீரோயின் ஹீரோ கிட்ட சொல்வாங்க, ஆனால் ஹீரோ, இதெல்லாம் பணம் இருக்குறவங்க இல்லாதவங்க கிட்ட சொல்றது, என்று சொல்வார். இப்படி படம் முழுவதுமே நிறைய விஷயங்களை அலசி இருக்கிறோம்

இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது, பெரிய அளவில் வரவேற்பும் பெற்றிருக்கிறது. இசைக்காக படம் நிச்சயம் பேசப்படும் என்று நான் நம்புகிறேன். இதில் இருக்கிற அனைத்து பாடல்களும் அனைவரின் பிளே லிஸ்டிலும் இருக்கிறது. 

யோகி பாபு படம் முழுவதும் வருகிறார். அவர் பெரிய டானின் மகனாக வருகிறார். அந்த டானும் யோகி பாபு தான். தனது மகன் பெரிய டானாக வேண்டும் என்பதற்காக அப்பா யோகி பாபு அவரை வில்லனிடம் சேர்த்து விடுகிறார். அதனால் அவர் வில்லனுடன் பயணிப்பது போல் காட்சிகள் இருக்கும்.

முழுமையான பொழுது போக்கு படமாக ‘டக்கர்’ இருக்கும்.” என்றார் கார்த்திக்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா படம் பற்றி கூறுகையில், “இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இயக்குநர் கார்த்திக் என்னிடம் கதை சொல்லும் போதே இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று தான் சொன்னார்.

படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. எனக்கு இந்த படம் ஒரு சவால் நிறைந்ததாக இருந்தது. இந்த படம் தான் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் படமாகவும் இருந்தது..!” என்றார். 

படமும் ‘டக்கரா’க இருக்குமா என்பது மே 26 ஆம் தேதி தெரிந்து விடும்.