கங்குவா திரைப்பட விமர்சனம்
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவை ஒரு பான் இந்திய ஸ்டாராக ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் கே.இ.ஞானவேல் ராஜாவும் சிறுத்தை சிவாவும் சேர்ந்து மிரட்டி இருக்கும் படம்.
1070 இல் ஆரம்பிக்கும் கதை 2024 இல் வந்து இப்போதைக்கு முற்றுப்பெறுகிறது. அது எப்படி என்பதை இரு வேறு காலகட்ட சுவாரஸ்யத்துடன் திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவா.
தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் சூர்யா ஒரு பிளேபாயாகவும், காவல்துறை நேரடியாக பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து கொடுக்கும் Bounty hunter ஆகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட அதே டூட்டியில் அவருக்கு ஏட்டிக்குப் போட்டியாக வருகிறார் திஷா பதானி.
இவர்கள் இருவருக்கும் முறையே அல்லக் கைகளாக யோகி பாபுவும், ரெடின்ஸ் கிங்ஸ்லியும் வருகிறார்கள். இவர்கள் செய்யும் அலப்பறைக்கு இடையில் ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சி முகாமில் இருந்து தப்பிய சிறுவன் ஒருவன் குறுக்கிட அந்தச் சிறுவன் மீது சூர்யாவுக்கு ஒரு இனம் புரியாது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதைக் கண்டுபிடிக்கும் வேளையில் கடந்த வரலாற்றுக் காலத்தில் நடந்த சம்பவங்கள் அவரது நினைவுக்கு வருகின்றன. அதன் முடிவு என்ன என்பது மீதிக்கதை.
ஆனால் அது முடியவில்லை. இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்பது உலகறிந்த விஷயம்தான்.
பிளேபாய், ஆக்ஷன் ஹீரோ, பாசக்கார மனிதன் என்று எல்லா வித ரசிகர்களையும் கவர பலமுகம் காட்டி படம் முழுவதும் உணர்ச்சிமயம் காட்டியிருக்கிறார் சூர்யா.
அதுவும் 1070 காலகட்டத்தில் ஒரு பழங்குடிகளின் இனத் தலைவரின் மகனாக தங்கள் இனத்தை அழிக்க வந்த கருங்காலி நட்டியை தண்டிக்கும்போது காட்டும் கண்டிப்பில் ஆகட்டும், அதன் விளைவாக நட்டியின் மகன் அனாதையாக, அவனை அக்கணமே தந்தையாகத் தத்தெடுத்துக் கொள்ளும் பாசத்தில் ஆகட்டும், அத்தனைப் பாசத்தைக் கொட்டி வளர்த்தும், அவனே ஒரு கட்டத்தில் தன்னைக் கொல்ல முயலும் போது கண்களில் காட்டும் பரிவு கலந்த ஏமாற்றத்தில் ஆகட்டும், அந்தச் சிறுவனுக்காக தன் இனத்தைத் துறந்து காட்டுக்குள் தனிமைப்பட்டுப் போவதிலாகட்டும்… நடிகர் திலகத்தின் மிச்சமாக நடிப்பைக் கொட்டி இருக்கிறார் சூர்யா.
அவர் மட்டும் அல்லாமல் எல்லா பாத்திரங்களும் படம் நெடுக போடும் காட்டுக் கத்தலை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம்.
ஆயிரம் வருடங்கள் பயணப்படும் இத்தனை நீளமான படத்தில் அவருக்கு ஒரு சரியான ஜோடி இல்லாமல் இருப்பது குறைதான். தற்காலத்தில் நடக்கும் கதையில் மட்டும் திஷா பதானி ஒரு ஆறுதலாக கொஞ்ச நேரம் வந்து போகிறார்.
படம் நெடுக சூர்யாவே ஆக்கிரமித்திருப்பதில் வில்லனாக வந்திருக்கும் பாபி தியோலின் நடிப்புக்குப் பெரிய பங்கு இல்லை.
நட்டி, போஸ் வெங்கட், பிரேம் உள்ளிட்ட எல்லோருக்கும் நெகடிவ் வேடங்கள்தான். அவர்களில் கருணாஸ் மட்டும் பாசிட்டிவாக வருகிறார்.
கே எஸ் ரவிக்குமார், கோவை சரளா இருவரும் வழக்கமாகப் பேசும் கோவைத் தமிழை மாற்றி கோவா தமிழ் பேச வைத்திருப்பது ரசிக்கும்படி இல்லை.
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி இருவராலும் நம்மைச் சிரிக்க வைக்க முடியவில்லை.
படத்தின் மிகப்பெரிய பலம் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான்.
வெற்றியின் ஒளிப்பதிவு உச்சம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தேவைக்கு அதிகம் என்கிற நிலையில் கலை இயக்கம், அனிமேஷன் உள்ளிட்ட நுட்பங்கள் தமிழுக்கு உச்சபட்சம்….
அதிலும் முழுமையான முதல் இந்திய 3டி படமாக வந்திருப்பது அனைத்து இந்திய ரசிகர்களையும் ஈர்க்கும்.
கடைசி கடைசியாக கார்த்தியும் உள்ளே வந்து அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறார்.
சத்தத்தை மட்டும் குறைத்திருந்தால் சவுண்டான படமாக இருந்திருக்கும்.
கங்குவா – தொழில்நுட்ப மிரட்டல்..!
Read More