நடிகை மேக்னா ராஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா திடீரென்று மரணமடைந்து விட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தாவர் மேக்னா ராஜ். தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார்.
நீண்ட நாட்களாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து வந்தார். 2018-ம் ஆண்டு மே 2-ம் தேதி சிரஞ்சீவி சர்ஜா – மேக்னா ராஜ் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்துக்குப் பிறகும் மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.
நேற்று (ஜூன் 6) சிரஞ்சீவி சர்ஜாவுக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக ஜெயநகரில் உள்ள சாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு 39 வயது தான் ஆகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகன் தான் சிரஞ்சீவி சர்ஜா என்பது நினைவு கூரத்தக்கது. இவர் நாயகனாக 22 படங்களில் நடித்துள்ளார்.
இவரது தொண்டை சளி கரோனா மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2009-ல் ‘வாயுபுத்திரா’ படம் மூலம் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார் சிரஞ்சீவி சர்ஜா. கடைசி படம் ‘ஷிவார்ஜுனா’ ஆகும். இந்தப் படம் லாக்டவுன் அமலாவதற்கு சில நாட்கள் முன்புதான் திரைக்கு வந்தது.
தற்போது 4 படங்களில் நாயகனாக நடித்து வரும் நிலையில், அர்ஜுன் சர்ஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.