இந்த தலைப்புக்கும் இவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கும் என்று யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது.
மண்டையில் முடி இல்லாதவர்களை சொட்டை என்று கொச்சையாக கூறுவோம். அந்த சொட்டையைப் பற்றிய கதைதான் இது.
வசதியான வீட்டு பையன்தான் என்றாலும் நாயகன் நிஷாந்த் ரூஷோவுக்கு இந்த வழுக்கை தலை பிரச்சனை, தலையாய பிரச்சனையாகி விடுகிறது. இந்த காரணத்தினால் எந்த பெண்ணும் இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.
இவரது அப்பாவும் சிறு வயதிலேயே வழுக்கை விழுந்தவர். இவர்கள் இருவருக்கும் சேர்த்து அம்மா கழுதைப் பால், மாட்டுச் சாணி மாஸ்க் என்று கொடூர வைத்தியங்கள் செய்து பார்த்தும் எந்தப் பலனும் இல்லை. போதாக்குறைக்கு அவ்வப்போது அசிரீரி போல எதிர்த்த (!) வீட்டு பாட்டி வேறு இவரைக் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில் அந்தப் பாட்டியின் பேத்தி வர்ஷிணி நிஷாந்தை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள, சந்தோஷத்தில் இருக்கும் நிஷாந்த் திருமணத்தன்று அதிகாலையில் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
அது ஏன் என்பது ஒரு சஸ்பென்ஸ். அதற்குப் பின் ஒரு தகிடுதித்த வேலை செய்து ஷாலினியை மணம் முடிக்க இருக்கும் நேரத்தில் அதுவும் நின்று போக அவர் யாரை திருமணம் செய்து கொண்டார் அவரது சொட்டை பிரச்சனை முடிவுக்கு வந்ததா என்பதெல்லாம் பின் பாதிக்கதை.
இப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த நிஷாந்த் ரூஷோவைப் பாராட்டியாக வேண்டும். ஏதோ ஒரு கெட்டப்பில் இப்படி வழுக்கையாக வரலாம் ஆனால் படம் முழுதும் இப்படியே வந்த அவருக்கும் அவரது மேக்கப்புக்கும் ஒரு பொக்கே கொடுக்கலாம்..!
பளிச்சென்று கலர்ஃபுல் நாயகிகளாக வரும் வர்ஷிணி மற்றும் ஷாலினி இருவரும் தேவையை நிறைவு செய்திருக்கிறார்கள்.
இவர்களுடன் ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா, கேபிஒய் யோகி, கேபிஒய் வினோத் என பல காமெடி நடிகர்கள் நிறைய கிச்சுகிச்சு மூட்டினாலும் நமக்கு சிரிப்பு அவ்வப்போது தான் வருகிறது.
ரெஞ்சித் உன்னி இசையில் பாடல்கள் இளமை ததும்ப ரசிக்க வைக்கிறது. நகைச்சுவை காட்சிகளில் பின்னணி இசையும் சேர்ந்து நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறது.
கலர்ஃபுல்லான களம் என்பதால் ஒளிப்பதிவாளர் ரயீஷ் வண்ணமயமாக காட்சிகளை எடுத்திருக்கிறார்.
இயக்குநர் நவீத் எஸ்.ஃபரீத் நிறைய காட்சிகளை நாடக பாணியிலேயே எடுத்திருக்கிறார். அத்துடன் பல காட்சிகள் துண்டு துண்டாக மொட்டை (சொட்டை?) தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போல நகர்கின்றன.
உதாரணத்துக்கு அந்தப் பாட்டி பாத்திரம் எதிர்த்த வீட்டில் இருக்கிறாரா, பக்கத்து வீட்டில் இருக்கிறாரா மாடி போர்ஷனில் குடி இருக்கிறாரா என்றெல்லாம் எந்த விதமான குறிப்பும் இல்லை.
தொலைக்காட்சி காமெடி என்பது வேறு சினிமாவுக்கான காமெடி என்பது வேறு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளை மனதில் வைத்து எடுத்திருப்பது புரிகிறது.
ஆனாலும் வித்தியாசமான பிரச்சனையை எடுத்துக்கொண்டு முடிந்தவரை அதற்கு நியாயம் சேர்த்து இருப்பதை பாராட்டலாம்.
இரண்டாவது பாதியில் இன்றைய இளைய தலைமுறை ரீல்ஸ் – களில் எப்படி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நயமாக சுட்டிக் காட்டி இருப்பதற்கும் பாராட்டுகள்.
சொட்ட சொட்ட நனையுது – விட்டு விட்டு ரசிக்கலாம்..!
– வேணுஜி