சென்னையில் நடைபெற்ற RRR பட பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியது…
நான் ராஜமெளலி சாரோட மிகப் பெரிய ஃபேன், மகாதீரா படம் பார்த்ததில் இருந்து. அதற்கு பிறகு நான் இ படம் வந்த போது தான் நான் சினிமா உலகிற்குள் வந்தேன். அந்த படம் பார்த்த போது ஒரு ஈயை வைத்து இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியுமா என பயங்கர ஆச்சரியமாக இருந்தது.
இன்னொரு பக்கம், ஒரு ஈயை வைத்தே படம் எடுக்கிறார்கள் என்றால், நம்மை வைத்து கண்டிப்பாக இங்கு படம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இன்னொரு பக்கம் அது பயம்.
அதே சமயம் ஈயை வைத்து எடுத்தாலே நன்றாக இருக்கு, எதற்காக இவர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்து விடுவார்களோ என்ற பயம். அதுக்கு பிறகு அவரின் ஒவ்வொரு படங்களையும் ரசிக்க ஆரம்பித்தேன்.
எல்லோருக்கும் அவரின் பணி பிடிக்கும். என்னை மிகவும் கவர்ந்தது, இவ்வளவு பெரிய படங்களை, சாதனைகளை செய்து விட்டு அமைதியாக இருப்பது மிகவும் கஷ்டம். அதை தவம் போல செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
இங்கு நமக்கெல்லாம் ஒரு படம் ஓடிட்டாலே, ஹிட் கொடுத்துட்டோம்ல என நினைக்கும் போது, உலகம் முழுவதும் ஒரு படத்தை பார்க்க வைத்து விட்டு, அடுத்து என்ன பெரிசா பண்ணலாம்ன்னு யோசிக்கிறது ரொம்ப ஊக்குவிப்பதாக உள்ளது.
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நம்ம கனவை தாண்டியும் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் மிகப் பெரிய இன்ஸ்ப்ரேஷன். உங்களை பார்க்க வேண்டும் என்று தான் ஆவலாக இருந்தேன். இன்று பார்த்து விட்டேன்.
இரண்டு சிங்கங்கள் என்றும் சொல்லலாம், இரண்டு புலிகள் என்றும் சொல்லலாம். இவர்களை தூரத்தில் இருந்து பெரிய திரையில் தான் பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் கடந்த முறை விருது விழாவிற்கு வந்த போது, என்னுடைய படத்தை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்ப்பார்கள் என கூறியது, இன்னும் நிறைய முயற்சி போட வேண்டும் என தோன்றியது. அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து வந்து இவ்வளவு எளிமையாக உள்ளீர்கள்.
இது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்கும் படமாக இருக்க போகிறது. ஆர்ஆர்ஆர் படம் இந்திய சினிமாவின் பெருமையாக உள்ளது. இந்த படம் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். டிரைலரே மிரட்டலாக ஒரு படத்தை பார்ப்பது போல் ஷாட் ஷாட்டாக பார்க்க வைக்கிறது. இன்னும் படம் எப்படி இருக்குமோ என பார்க்க மிக ஆர்வமாக உள்ளேன்.
நான் கண்டிப்பாக முதல் நாள் முதல் ஷோ பார்க்க போறேன். நீங்களும் அனைவரும் கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்கள். கொரோனாவால் சினிமா உலகமும் தியேட்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
2022 ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த படம் வந்து மிகப் பெரிய வசூலை கொடுக்க போகிறது. அதைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை வரப் போகிறது. இந்த படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வந்தால் அதற்கு பிறகு வரும் எங்களின் படங்களும் ஓடும்.