April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
August 23, 2018

நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

By 0 913 Views

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’.

பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜாவின் நண்பரும், மரகத நாணயம் புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். மேலும், பெண்கள் கிரிக்கெட் மையமாக வைத்து படம் எடுக்க முன்வந்த சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது…

Sivakarthikeyan

Sivakarthikeyan

“அருண்ராஜா பாடல் எழுதி ஒவ்வொரு பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை “இப்படியே செட்டில் ஆகிடாத…” என்று திட்டுவேன். அவன் இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர் பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுத சொன்னேன், அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதி வந்தான். “நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது..?” என்று நான் சொன்னேன்.

நானே இந்த படத்தைத் தயாரிக்க போகிறேன் என்று சொன்னேன். இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிட கூடாது என்ற பயம் இருந்தது. மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் படங்களில் நடித்து வந்தாலும் கதாநாயகி ஐஸ்வர்யா, “நான் முயற்சி பண்றேன், ஒரு வாய்ப்பு கொடுங்க…”ன்னு சொன்னார். நிறைய அடி, காயங்கள் பட்டு நடித்திருக்கிறார்.

விவசாயத்தை பற்றி பேசும் ஒரு கதாபாத்திரம் எங்கள் முதல் தேர்வே சத்யராஜ் சார் தான். அவர் ஒப்புக் கொண்டு உள்ளே வந்தபின்பு படம் இன்னும் பெரிதாகியது. என் நண்பன் அருண்ராஜா, படத்தின் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மீதான நம்பிக்கையால் இந்த படத்துக்கு என்ன தேவையோ அந்த செலவை செய்தோம். இந்த படத்தில் லாபம் வந்தால் ஒரு நல்ல விஷயத்துக்கோ அல்லது இன்னொரு படத்துக்கோ தான் செலவு செய்வேன்.

படம் தயாரிக்க போறேன்னு சொன்னவுடன் முதலில் அனிருத்திடம் சொன்னேன், அவர் நிச்சயம் ஹிட் ஆகும் என்றார். ஆராதனாவை பாட வைத்த இசையமைப்பாளர் திபுவுக்கு நன்றி. சம்பாதிக்கிற பணத்துக்கு சொத்து வாங்கி சேர்க்காம, அருண்ராஜா அண்ணன் படத்தை தயாரிக்கலாம்னு சொன்ன மனைவி ஆர்த்திக்கு நன்றி. இது நண்பர்களுக்கு நான் செய்யும் உதவி அல்ல, கடமை.

‘கனா’ படத்தைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ஹீரோவாக நடிக்க, ப்ளாக் ஷீப் குழுவினர் பங்கு பெறும் ஒரு படத்தை தயாரிக்கிறேன்..!”