April 27, 2024
  • April 27, 2024
Breaking News
August 8, 2022

சீதா ராமம் திரைப்பட விமர்சனம்

By 0 649 Views

படத்தின் தலைப்பைப் பார்த்தால் ஏதோ இந்து மதப்பற்றுள்ளவர் இயக்கிய படமாகத் தோன்றலாம். அதனாலேயே இந்தப்படத்தின மீதான நம்பகத் தன்மை குறையலாம். ஆனால், படம் பார்த்த பின் அந்தக் கணிப்பு சுக்கு நூறாக உடையும்.

ஹனு ராகவபுடி இயக்கி இருக்கும் மதங்களைக் கடந்த, அத்தனை சீக்கிரம் காலத்தால் மறக்க முடியாத படம் இது.

சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட காதலையும் வீரத்தையும் நமக்குத் தெரிந்த சரித்திரப் பின்னணியில் சொல்ல முடிந்தால் அதுதான் சீதா ராமம்.

காதலின் வீரியம் கடிதத்தில் பன் மடங்காக ஆகும் என்பதைப் புரிந்து கொண்டு எழுதப்பட்ட அற்புதமான திரைக்கதை இது.

யாரும் எதிர்பார்க்க முடியாத இஸ்லாமிய மதப் பற்றுடன் கூடிய பாத்திரம் ராஷ்மிகா மண்டேனாவுக்கு. முன்னாள் பாகிஸ்தான் இராணுவ அதிகாரியின் மகளான அவர் இப்போது லண்டனில் படித்து வர, மதப் பற்றின் காரணமாக ஒரு காரை எரித்து விடுகிறார். அதற்கான நஷ்ட ஈட்டுப் பணத்தை இறந்துபோன அப்பாவின் சொத்திலிருந்து பெற்று வர நினைக்கிறார்.

ஆனால், அங்கே இவருக்கு ஒரு கடமையை வைத்துவிட்டு இறந்து போயிருக்கிறார் அவரது அப்பாவான சச்சின் கடேகர். அதை முடித்தால் மட்டுமே அப்பாவின் சொத்து கிடைக்கும் என்பதால் வேண்டா வெறுப்பாய் அதை ஏற்கிறார்.

அந்தக் காரியம் ராம் என்பவர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் இருக்கும் சீதாவுக்கு இருப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கடிதம். இத்தனை ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்கு அனுப்பப் பட்டு திரும்ப வந்திருக்கிறது. அதை உரியவரான சீதாவிடம் இந்தியா சென்று ராஷ்மிகா சேர்க்க வேண்டும்.

இந்திய நண்பன் ஒருவனுடன் சீதாவைத் தேடிப் போகும் ராஷ்மிகாவுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தும் அற்புதமானவை ராம் – சீதாவின் உணர்ச்சி பூர்வமான காதலைத் தெரிந்து கொள்வதுடன் மதம் பற்றிய ராஷ்மிகாவின் தவறான புரிதலும் சுக்கு நூறாக உடைகிறது. அத்துடன் தன்னைப் புரிந்து கொள்ளவும் செய்கிறார் ராஷ்மிகா.

ராமாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் தூள் கிளப்பி இருக்கிறார். இளம் இராணுவ வீரனுக்கான துடிப்பும், மிடுக்கும் நிறைந்திருக்கும் அவர், சீதாவை கடிதத்தின் மூலம் கண்டு அவரைத் தேடிப் பிடிக்கும்  காட்சி பரவசமானது என்றால், கடைசி வரை சீதாவைப் பற்றிய உண்மை அவருக்குத் தெரியாமலேயே போவது பரிதாபகரமானது.

சீதா மகாலஷ்மியாக புதுமுகம் மிருணாள் தாகூர். ஆரம்பத்தில் இயல்பாக அறிமுகமாகி, போகப்போக மறக்க முடியாத அழகியாகப் பதிகிறார். காதலுக்காக எதையும் தூக்கி எறியும் தியாகிகளில் இவர் ஒரு மகாராணி. அவரை வைத்து வரும் இடைவேளை யாரும் எதிர் பாராதது.

இனி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார் மிருணாள் தாகூர்.

பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் இருவரும் இந்திய ராணுவ அதிகாரிகளாக மிடுக்காக இருக்கிறார்கள்.

வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா இருவரும் திரைக்கதை தொய்வில்ல்லாமல் இருக்க  உதவியிருக்கிறார்கள்.

வசனம், பாடல்களை எழுதிய மதன் கார்க்கி தமிழுடன் விளையாடி இருக்கிறார். தன்னைப் பார்க்க வந்த மிருணாள் போய்விடக் கூடாது என்று தவிக்கும் துல்கர், மழையைக் காரணம் காட்டி, ” மழை போகக் கூடாதுன்னு சொல்லுது…” என்று சொல்ல, குடையை விரிக்கும் மிருணாள், ” குடை போலாம்னு சொல்லுது…” என்பது வசன ஹைகூ.

பி.எஸ் வினோத்தின் ஒளிப்பதிவும், கலை இயக்கமும் இணைந்து காட்சிக்கு காட்சி வானவில்லைக் காட்டி இருக்கிறது. இந்த வருட தேசிய விருது இயக்குனர் ஹனுவைத் தாண்டி இவர்களில் யாருக்கு என்பது மட்டுமே கேள்வி, சென்னை, ஹைதராபாத், பாகிஸ்தான், பாகிஸ்தான் இந்திய எல்லைப் பன  மலைகள் என்று பறந்து பறந்து படமாக்கி இருக்கிறது வினோத்தின் கேமரா.
 

ஆடை வடிவமைப்பாளர் ஷீத்தல் ஷர்மாவையும் இந்த விருதுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் எங்கோ கேட்டது போல இருந்தாலும் காதுகளையும், உள்ளத்தையும் ஆக்கிரமிக்கிறது.

1964 முதல், இந்தியா பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பற்றிய பிரச்னையை மட்டுமல்லாது இந்தியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவி வரும் தீவிரவாத அமைப்புகள், அவற்றின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவமும் இருப்பது என்பதை மட்டுமல்லாமல் இந்திய இராணுவத்தின் கையாலாகாத உண்மையையும் பாரபட்சமில்லாமல் சொல்லி இருக்கும் இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்.

கத்தி மேல் நடப்பது என்பார்கள். இது ஷேவிங் பிளேடு மீது நடப்பது போன்ற சாகசம். ஆனால், யார் இரண்டு எதிரி நாடுகள், இரண்டு மதத்தினர் எதிர்ப்பு காட்டாத விதமாக அமைந்த இந்தத் திரைக்கதையை ஒரு பாடமாகக் கொள்ளலாம்.

அதைச் சாதித்துக் காட்டி இருக்கிறார்கள் திரைக்கதை எழுதி இருக்கும் ஹனு, ராஜ் குமார் கந்தமுடி மற்றும் ஜெய் கிருஷ்ணா.

சீதா ராமம் – காதலும், வீரமும்..!