June 20, 2024
  • June 20, 2024
Breaking News
May 9, 2023

சிறுவன் சாமுவேல் திரைப்பட விமர்சனம்

By 0 450 Views

வழக்கமாக நாம் பார்க்கும் வணிக ரீதியான படங்களில் இருந்து சற்றே வித்தியாசமான படம் இது. அதனால் வழக்கமான சினிமா ரசனையை கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு இந்தப் படம் பார்க்கப் போக வேண்டும்.

இலக்கிய உலகில் சிறுவர்களுக்கு என்று இலக்கியம் படைக்க சிலர் உண்டு. ஆனால் குழந்தைகளுக்கான படம் எடுப்பது மிகவும் அரிதாகத்தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘சாது ஃபெர்லிங்டன்’ இயக்கியிருக்கும் இந்தப் படம் முற்றிலும் சிறுவர்களுக்கான படம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

குழந்தைகளுக்கான படம் என்றால் பெரியவர்கள் குழந்தைகளை எப்படி பார்க்கிறார்கள் என்பதை தவிர்த்து குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்று அவர்களின் உலகத்திற்கே சென்று பார்க்கும் வித்தைதான் அது.

அந்த வகையில் சாமுவேல் என்ற சிறுவனின் ஒரு காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட படம் இது. நல்லது எது, கெட்டது எது என்று இனம் புரியாத பதின் பருவ தொடக்கத்தில் இருக்கும் சாமுவேல் என்ற சிறுவன் தன் மனசாட்சியை முதன் முதலாகக் கண்டெடுக்கும் நிகழ்வுதான் இந்தப் படத்தின் கரு.

சாமுவேலுக்கு பள்ளி தொடங்கி வெளியிலும் விளையாட்டுத் தோழனாக இருக்கிறான் ராஜேஷ். இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். சொற்ப வருமானத்தில் இருக்கும் இவர்களது தந்தைமார்கள் பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தர முடியாத சூழலில் இருக்கிறார்கள். அத்துடன் முரட்டு கண்டிப்புடனும் அவர்களை வளர்க்கிறார்கள்.

இவர்களெல்லாம் தென்னை மட்டை மற்றும் மரத்தில் அறுத்து மட்டைகளை செய்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க, பணக்காரச் சிறுவன் ஒருவன் நிஜ கிரிக்கெட் மட்டையைக் கொண்டு வர இவர்களுக்கும் அப்படி ஒரு கிரிக்கெட் மட்டை வாங்கி விட ஆர்வம் பிறக்கிறது.

கிரிக்கெட் வீரர்களின் உருவம் பொறித்த அட்டைகளை நூற்றுக்கணக்கில் சேகரித்து கொடுத்தால் சச்சின் டெண்டுல்கர் கையெழுத்து போட்ட கிரிக்கெட் மட்டை கிடைக்கும் என்று சாமுவேல் பயணம் செய்யும் பள்ளி வேன் டிரைவர் சொல்ல அதற்காக அந்த அட்டைகளை தேடிப் பிடித்து சேகரிக்க ஆரம்பிக்கிறான் சாமுவேல்.

இந்நிலையில் அந்தப் பணக்கார பையனின் வீடியோ கேம் திருடு போய்விட அந்த பழி ராஜேஷ் மீது விழுகிறது. அவனை நையப் புடைக்கும் அவனது தந்தை அவனைப் பள்ளியில் இருந்து நிறுத்தி தன்னுடன் கூலி வேலைக்கு அழைத்துச் சென்று விடுகிறார்.

ஒருமுறை திருட்டு பட்டம் கட்டப்பட்டதால் ராஜேஷ் தொடர்ந்து திருடனாகவே அறியப்படும் போது நமது மனது கனக்கிறது.

கிரிக்கெட் வீரர்கள் உருவம் பொறித்த அட்டைகளை வைத்து இவர்களால் கிரிக்கெட் மட்டை வாங்க முடிந்ததா, ராஜேஷ் மீதான திருட்டுப்பழி நீங்கியதா என்பதெல்லாம் மீதிக்கதை மற்றும் நீதிக்கதை.

 

சாமுவேலாக நடித்திருக்கும் அஜிதன் தவசிமுத்து மற்றும் ராஜேஷாக நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு உள்ளிட்ட அனைத்து சிறுவர்களுமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

கே.ஜி.விஷ்ணுவின் பார்வையே ஒரு தினுசாக இருக்கிறது. அதுவே அவனை கள்வனாகவும் நம்ப வைக்கிறது.

எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்பதை விட கேமராவுக்கு முன்னால் அவர்கள் பாட்டுக்கு வாழ்ந்திருக்கிறார்கள். 

கன்னியாகுமரி பகுதியில் நடக்கும் கதை என்பதால் அங்கிருக்கும் சிறுவர்களையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததில் சுத்தமான குமரித் தமிழைப் படம் முழுதும் கேட்க நேர்கிறது. அதுவே படத்தின் ஒரு சுவாரசியத்துக்கும் காரணமாக அமைகிறது.

உங்கள் முன்னால் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது என்ற நினைவில்லாமல் நீங்கள் பாட்டுக்கு நடித்துக் கொண்டிருங்கள் என்று இயக்குனர் சொல்லி இருப்பார் போல. குமரி மாவட்டத்து வழக்கும், வாழ்க்கையும் அப்படியே நம் கண் முன்னால் விரிகிறது. 

படத்தில் நடிப்பதற்கு நடிக, நடிகையரைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்த ஏரியாவில் அழகான முகங்களைத்தான் பிடிப்பார்கள். ஆனால், படத்தில் தான் படைத்த பாத்திரங்கள் எந்த வகையினரோ அப்படியே அத்தனைப் பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனரின் தேவை புரிந்து ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தியும், இசையமைப்பாளர்கள் சாம் எட்வின் மனோகர் மற்றும் ஸ்டான்லி ஜானும் அவரது எண்ண அலைவரிசையிலேயே பயணப்பட்டு இருக்கிறார்கள்.

சிறுவர்களின் டியூஷன் டீச்சர் ஆக வருபவர் தொழில் முறை நடிகையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு இளம் ஆசிரியை எப்படி இருப்பாரோ, எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே சிறுவர்களை வெளுத்து வாங்குவதும், ஆனால் அந்த ஆசிரியை மேல் சிறுவர்கள் அத்தனை பாசத்துடன் இருப்பதும் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான காட்சிகள்.

சாமுவேலின் மனசாட்சி திறக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அவன் ஓடிவரும் வழிகள் எல்லாம் ஏதோ ஒரு விசேஷத்தின் காரணமாக சீரியல் லைட் செட்கள் வண்ணமயமாக எரிந்து கொண்டிருப்பதில் காட்சியின் தேவையை ஒளிப்பதிவாளர் மிகத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார்.

 

இயல்பாக வரும் மழை சாமுவேலின் குற்றத்தை கழுவி அவன் பின்னணியில் எரியும் வண்ண விளக்குகள் அவன் மன இருள் அகன்று ஒளிர்வதாக உணர வைக்கும் அந்த இறுதிக் காட்சி இயக்குனரின் திறமைக்கு சான்று.

இப்போது பல பட விழாக்களில் கலந்து கொண்டிருக்கும் இந்தப் படம் பரிசுகளை வென்றிருக்கிறது. மேலும் பல பட விழாக்களில் உயரிய பரிசுகளைப் பெறும் சாத்தியமும் இந்தப் படத்துக்கு இருக்கிறது.

சிறுவன் சாமுவேல் – குழந்தைத்தனமான படம் அல்ல… குழந்தைகளுக்கான படம்..!

– வேணுஜி