July 18, 2024
  • July 18, 2024
Breaking News
January 25, 2024

சிங்கப்பூர் சலூன் திரைப்பட விமர்சனம்

By 0 139 Views

“மயிரைக் கட்டி மலையை இழுப்பது…” என்பார்கள். அப்படி ஒரு முயற்சியை ஆர்.ஜே. பாலாஜியை வைத்து இயக்குனர் கோகுல் செய்திருக்கிறார்.

எதற்காக மலையைப் போய் மயிரில் கட்டி இழுக்க வேண்டும் என்றால், ‘வந்தால் மலை… போனால் …’ என்கிற காரணத்தினால்தான். ஆனாலும், இதில் இவர்கள் சொல்லியிருப்பது எதைக் கட்டி இழுத்தாலும் அர்ப்பணிப்பும், கொள்கையில் உறுதியும் இருந்தால் மலை வந்தே ஆகும் என்பதைத்தான்.

பால்ய பருவத்தில் மனதில் பதியும் ஆசைகள் காலத்துக்கும் மறக்க முடியாததாக இருக்கும். அப்படித் தங்கள் ஊரில் முடி திருத்தும் கலைஞராக இருக்கும் லாலின் திறமையைப் பார்த்து வியந்த நாயகன், அந்தத் தொழில் மேல் ஆர்வமும் அக்கறையும் கொண்டு பெரியவனானதும், தானும் ஒரு பார்பர் ஆக வேண்டும் என்று விரும்ப, சுற்றமும், நட்பும், சுற்றி இருக்கும் சமுதாயமும் அவருக்கு என்ன தருகின்றன என்பதுதான் படத்தின் கதை.

ரஜினியும், கமலும் கூட பார்பராக நடித்திருக்கிறார்கள் என்றாலும் கூட முழுப் படத்தில் யாரும் இப்படி முடி திருத்தும் கலைஞராக வந்ததில்லை. அப்படி ‘தலைக்கு மேலே கத்திரி’ தொங்கும் ஒரு நாயகனாக நடிக்க ஒத்துக் கொண்ட ஆர் ஜே பாலாஜியை யும், இப்படி ஒரு கதையை யோசித்த இயக்குனர் கோகுலையும் பாராட்ட வேண்டும்.

அதைவிட அரிய முயற்சியாக ஆர் ஜே பாலாஜி என்றால் நமக்கு என்ன விதமான இமேஜ் வருகிறதோ அதை முற்றிலுமாக வெட்டி தள்ளி உணர்ச்சிமயமான குணச்சித்திர பாத்திரத்துக்குள் வடிவமைத்திருப்பதையும் பாராட்டி ஆக வேண்டும்.

அதைப் புரிந்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜியும் மயிரிழை கூட அந்த உணர்வை விட்டு விலகி காமெடி செய்து விடாமல் பாத்திரத்தின் தன்மையை நூல் பிடித்தது கட்டிங் செய்ததைப் போல் கச்சிதமாக செய்திருக்கிறார்.

“முடி வெட்டுவது நம்ம குலத் தொழிலா..?” என்று கேட்கும் அப்பா அவரை இன்ஜினீயரிங் படிக்க வற்புறுத்த, “இன்ஜினியரிங் மட்டும் நம்ம குலத் தொழிலா..?” என்று பாலாஜி கேட்பது தியேட்டரில் கைத்தட்டல்களை அள்ளுகிறது.

அவருக்கு ஜோடியாக வரும் மீனாட்சி சவுத்ரி இந்தப் படம் வருவதற்குள் பயங்கர உயரத்துக்குச் சென்று விட்டாலும் இந்தப் படத்தில் பாலாஜியின் உயர்த்துக்குப் பொருத்தமானவராக வருகிறார். 

பாலாஜி மிஸ் பண்ணிய கலகலப்புகள் அத்தனையையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் இந்தப் படத்தின் முன் பாதியை தன் தோளில் தூக்கி படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார்.

சத்யராஜின் கட்டிங்கே வித்தியாசமானது. அத்துடன் வடிகட்டிய கஞ்சனாக இருக்கும் அவரது கேரக்டர் அவரது கேரியரிலேயே மிகப் புதிதானது. ஓசி பீர் குடிக்க ஆசைப்பட்டு ஒண்ணுக்கு கூட போகாமல் அவர் படு(த்து)ம் பாட்டில் நமக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வருகிறது.

ரொம்ப காலம் கழித்து ரோபோ சங்கர் இந்தப் படத்தில் பழைய ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் “அட பொம்மனாட்டிக்கு பொறந்த கம்மனாட்டி..” என்று சத்யராஜை உரிமையோடு அழைத்துக் கலாய்க்கும் ஒய்.ஜி.மகேந்திரன் இன்னும் சில காட்சிகளில் கூட வந்திருநதால் பலமாக இருந்திருக்கும்.

வில்லன் வேடம் ஜான் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் கடைசி காட்சியில் அவரே ஆர்.ஜே.பாலாஜிக்கு ரசிகன் ஆவது எதிர்பாராத திருப்பம்.

பாலாஜிக்காக லோகேஷ் கனகராஜும், கோகுலுக்காக ஜீவாவும் ஒவ்வொரு காட்சியில் வந்திருக்கிறார்கள். அட… நம்ம முதல்வர் கூட நட்புக்காக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்.

ஒரே காட்சியில் வந்தாலும் உலக உண்மையை ஆர்.ஜே.பாலாஜிக்கு புரிய வைத்து விடுகிறார் அரவிந்த’சாமி.’

தனிப்பட்ட முறையில் எந்தப் ‘பெயரை’யும் வாங்காமல் நான்கரை கோடி ரூபாய்க்கு புதிய கடை திறப்பது என்பதெல்லாம் துளி கூட லாஜிக் இல்லாமல் இருக்கிறது.

அதேபோல் ஒரு நாள் இரவுக்குள் அத்தனை டாக்குமெண்ட்களை ரெடி பண்ணி மறுநாள் காலையில் ஒரு சொத்தைப் பதிவு செய்வது என்பதெல்லாம் நடப்பதற்கு இயலாத விஷயங்கள்.

முடி வெட்டுவதற்கு என்று தனியாக காம்பெடிஷன் எதுவும் இல்லாத நிலையில் ஒரு நடனக் குழுவுக்கு முடி திருத்தப் போய் பாலாஜி வெல்வது, தலைக்குப் பொருந்தாத ‘கட்டிங்’காக இருக்கிறது.

குறிப்பிடத்தக்க எதிர்ப்புகள் ஏதும் இல்லாமல் இயற்கையே பாலாஜியை வஞ்சிப்பது போல் வருவதும் கதையின் அழுத்தத்தைக் குறைக்கிறது. அந்த பலவீனத்தை பச்சைக்கிளிகள் பறக்கும் அந்த கிளைமாக்ஸ் நிறை செய்வது நல்ல விஷயம்.

இப்படிக் கதை மற்றும் திரைக்கதையில் இருக்கும் லாஜிக் மீறல்களை கவனமாக செப்பனிட்டு இருந்தால் படம் முழுமை பெற்று இருக்கும்.

விவேக் மெர்வின் இசை உற்சாகமாக ஒலிக்கிறது. ஒளிப்பதிவும் அதற்கு ஒத்துழைக்கிறது.

ஆனால் எந்த தொழிலும் உயர்ந்ததுதான் என்பதை அழுத்தமாக சொல்லி இருப்பதும் படித்த கல்வியை விட பாதித்த கல்வி பெரியது என்றும் உணர்த்தி இருப்பதையும் பாராட்டுவதுடன்…

முடி திருத்தும் கலைஞர்களுக்கு இந்தப் படத்தை அர்ப்பணித்திருப்பதைத் ‘தலை வணங்கி’ ஏற்கலாம்..!

சிங்கப்பூர் சலூன் – முடிவெடு… முடி எடு..!

– வேணுஜி