March 1, 2024
  • March 1, 2024
Breaking News
January 26, 2024

ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்

By 0 106 Views

திறமைக்கும், ‘தகுதி’க்கும் இடையில் நிலவும் ஏற்றத் தாழ்வு அரசியல்தான் கதைக்களம்.

அதை ஒரு 30 வருடங்கள் முன்னோக்கிப் புரட்டிப் பார்த்து நாம் அதிகம் அறிந்த / அறிந்திடாத அரக்கோணம் பகுதிகளில் வைத்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜெயக்குமார்.

அங்கே, ஊருக்குள்ளும், காலனிக்குள்ளும் தலா ஒரு கிரிக்கெட் டீம் இருக்க, இருவருக்குள்ளும் நிலவும் பேதம் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கிறது… அது மட்டும்தான் கதையா என்றால்… இல்லை, அதற்கு மேலும் நிலவும் அடுத்த அடுக்கின் பேதங்களையும் திறமையால் உடைக்க உரக்கச் சொல்கிறது படம்.

கதை நடக்கும் 90களின் காலக்கட்டத்தில் காலனியைச் சேர்ந்த நாயகன் அசோக் செல்வன் ப்ளூ ஸ்டார் என்ற அணியின் கேப்டனாக இருக்க, ஊர்ப்பகுதி நாயகன் ஷாந்தனுவின் தலைமையில் ஆல்பா என்று இன்னொரு அணியும் இருக்கிறது.

கோவிலுக்குச் சொந்தமான மைதானத்தில் இரு அணிகளும் விளையாடிக் கொள்கிறார்கள். ஆனால், இருவரும் போட்டியிட்டு விளையாடுவதில்லை. அதற்கு ஒரு பிளாஷ்பேக் சொல்லப்படுகிறது.

முன்பு அப்படிப் போட்டி வைத்து விளையாடுகையில் ஒரு சண்டையாகி அதன் விளைவாக சிறந்த விளையாட்டு விரர் பக்ஸ் பகவதி பெருமாள், காலை இழக்கிறார். அதனால், இரு பகுதி அணிகளும் தனித்தனியாக விளையாடுவது என்றும் போட்டி வைத்துக் கொள்வதில்லை என்றும் முடிவு செய்து அதன்படியே நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போதைய அசோக் செல்வன், ஷாந்தனு தலைமையிலான இளைஞர்கள் கோஷ்டி எப்படி முடிவு எடுக்கிறது – அதன் காரணமாக மீண்டும் அவர்களுக்குள் போட்டி வைக்க நேர, என்னென்ன விளைவுகள் ஏற்பட்டன என்பது முன் பாதிப் படத்தை நிரப்புகிறது.

சான்சே இல்லை… அசோக் செல்வனையும்,  ஷாந்தனு பாக்கியராஜையும் இந்த அளவுக்கு காலக் கட்டத்தின் வகையிலாகட்டும் கதை நடக்கும் கள மாந்தர்களின் வகையிலாகட்டும் அப்படியே அச்சு அசலாக மாற்றியிருக்கிறார் இயக்குனர்.

அசோக் செல்வனை ‘ அடையாளமே ‘ தெரியவில்லை. தோல் கருத்து, கிரிக்கெட்டே மூச்சென்று ஆடி, ஷாந்தனுவின் மீது பார்வையிலேயே பகைமை பாராட்டி, கீர்த்தி பாண்டியனை கிட்டத்தில் நிறுத்திக் காதலித்து, அவள் இல்லை என்றானதும் மருகி, கண்ணீர் உகுத்து, தம்பியுடன் சகோதரச் சண்டையிட்டாலும் அவன் மனதறிந்து… வெற்றிக் கோப்பை கையில் எட்டும் வேளையிலும் போட்டியாளன் அடிபட்டது கண்டு பதறி… என்று பலவித உணர்ச்சிகளில் சிக்சர்களாக விளாசியிருக்கிறார்… வெல்டன் அசோக்..!

இன்னொரு பக்கம், பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், ஆனால் ஆளே வேறாக மாறி, ஷாந்தனு நடிப்பில் தூக்கும் விக்கெட்டுகள் அபாரம்.

இரத்தத்தில் ஊன்றிய மேலாதிக்க சிந்தனையுடன் அறிமுகமாகும் அவர், தன் தாயையொத்த அசோக்கின் அம்மாவைப் பேர் சொல்லி அழைத்து, வட்டிப் பணம் வசூலிக்கும் தோரணை ஒரு எல்லை என்றால் அதே வீட்டில் நண்பனாக வரும் வேளையில் அதே அம்மாவிடம் காட்டும் பவ்யமும், அனுமதி பெற்றே அமரும் அடக்கமுமாக அடக்கி வாசித்தே ஸ்கோர் அடிக்கிறார் ஷாந்தனு.

ஆகாதவன் என்றாலும் திறமைக்கு மதிப்பு கொடுத்து அசோக்கிடமே கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்கும் அவர், நடிப்பில் உயர்ந்து தெரிகிறார். படம் போட்டிகளுக்குச் செல்லும் வேளையில் விருதுகளுக்கு இவர் பெயரே முதன்மையாக இருக்கும்.

இந்த இரண்டு ஹீரோக்களுக்கு இடையில் இன்னொரு நிழல் ஹீரோவாக அசத்தி இருப்பவர் பக்ஸ் பகவதி பெருமாள். முட்டைக் கண்ணை உருட்டியே பல படங்களில் காமெடி செய்து வந்தவர், அதே கண்களில் இத்தனை உணர்ச்சி மயமான நடிப்பை எப்படி ஒளித்து வைத்திருந்தார் என்று தெரியவில்லை.

ஒற்றைக் காலைத் தாங்கி நடந்தாலும் ஊருக்கும் சேரிக்கும் இருக்கிற பகைமையை ஒற்றை ஆளாகத் தீர்த்து வைக்க முயலும் அவரே, திறமையை வைத்துத் தகுதியை அடைய முடியும் ஊன்றுகோலாகவும் இருப்பது அற்புதம். அவருக்கும் விருதுகள் காத்திருக்கின்றன.

நடிப்பில் மிரட்டிய நான்காமவர் அசோக்கின் தம்பியாக வரும் ப்ரித்வி பாண்டியராஜன். தம்பிக்கு உரிய ஆற்றாமை தொனிக்க, ஆடுகளம் என்று வந்துவிட்டால் அதிரடியாகும் அவரையும் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

காதலில் தோற்றாலும் காதலிப்பதில் வென்று விடுகிறார் கீர்த்தி பாண்டியன். ப்ரித்வியுடனான ரம்யா துரைசாமியின் காதலும் ரம்மியம்.

யார்தான் சரியாக நடிக்கவில்லை எனும் படியாக அசோக்கின் அப்பாவாக வரும் குமாவேலு…. அம்மாவாக வரும் லிஸ்ஸி ஆண்டனி … மேலாதிக்க மனப்பான்மையுடன் வரும் சாந்தனுவின் மாமா மற்றும் லீக் போட்டியாளர்களை உருவாக்கும் பயிற்சியாளர், எல்லா பந்துகளையும், லந்துகளுடனேயே விளாசும் பாபு, லீக் விளையாட்டு வீரர்களாக வரும் இளைஞர்கள் என்று அத்தனை பேரும் ஜொலித்திருக்கிறார்கள்.

இதற்கு அடிப்படைக் காரணம் இயக்குனர் எஸ். ஜெயக்குமார்தான் என்று மட்டையால் அடித்து சாத்தியம் செய்யலாம்.

அரக்கோணம் பகுதிக் கதை என்பதால் படத்தில் மின்சார ரயிலும் ஒரு கேரக்டர் ஆகியிருக்கிறது.

சரியான கள நிலவரத்தில் திரைக்கதை வசனத்தை எழுதி இருக்கும் தமிழ்ப் பிரபாவும் பாராட்டுக்குரியவர்.

எந்த இடத்திலும் இது சினிமா என்கிற வெளிச்சம் தெரிந்து விடக்கூடாது என்று இயல்பான வெளிச்சத்தில், அரக்கோணத்தின் முழுக் கோணத்தையும் படம் பிடித்திருக்கும் தமிழ் அ. அழகனையும், படத்தின் உணர்ச்சிகளை இசையால் தட்டித் தூக்கியிருக்கும் கோவிந்த் வசந்தாவையும் பாராட்டாமல் விட்டால் அது குற்றமே.

கலை இயக்குனருக்கும் கண்டிப்பான பாராட்டுக்கள் சேரும். ஆனால், அம்பேத்கர் சிலையின் அருகிலேயே ரஜினி ரசிகர் மன்ற போர்டை வைத்திருப்பது என்ன அரசியலோ..?

திரைக்கதை பறக்கும் முன் பாதியை விட பந்துகள் பறக்கும் பின் பாதி ரொம்பவே நீளம். இதுதான் முடிவு என்று முதல் பாதி முடியும் போதே தெரிந்துவிட்ட நிலையில் எதற்காக திரைக் கதையை இவ்வளவு இழுத்தார்கள் என்று தெரியவில்லை.

லகான் முதற்கொண்டு சென்னை 28 வழியாக தொடரும் கதைதான் இது என்றாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் அரசியல் அழுத்தமே இந்த படத்தைத் தனித்துத் தூக்கி நிறுத்துகிறது.

ப்ளூ ஸ்டார் – வெற்றிக் கோப்பை..!

– வேணுஜி