சில தினங்களுக்கு முன் வெளிவரவிருக்கும் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் தன் கட்டவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யச் சொல்லி தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இது குறித்து பால் முகவர்கள் கொதித்துப் போனதுடன், பாலுக்கு போலீஸ் பாதுகாப்பும் கேட்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிம்பு தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்படதென்று அதற்கு மன்னிப்புக்கேட்டுக் கொண்டார். இதுகுறித்து பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக அதன் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் நகல் கீழே…
‘கட்அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பாலாபிஷேகம்’ செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த 22ம் தேதி தான் வெளியிட்ட காணொளி காட்சி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாகவும், அதற்காக தான் வருந்துவதாகவும் இன்று சென்னை, தேனாம்பேட்டையில் ஊடகங்கள் முன் நடிகர் சிம்பு அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
அவரது செயலை தவறென்று எடுத்துச் சொல்லி புரிய வைத்த பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் சமூக வலைதள ஊடகங்களுக்கும், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதோடு தனது ரசிகர்கள் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்பதை ஊடகங்கள் வாயிலாக ஆணித்தரமாக எடுத்துரைத்த நடிகர் சிம்பு அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.’
அன்புடன்
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனர் & மாநில தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
28.01.2019 / காலை 11.00மணி.