March 28, 2024
  • March 28, 2024
Breaking News
April 18, 2023

சாகுந்தலம் திரைப்பட விமர்சனம்

By 0 450 Views

பான் இந்தியா சீசன் இந்திய திரைப்பட உலக உச்சந்தலையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம் இது.

புராண கால துஷ்யந்தன் சகுந்தலை காதலைச் சொன்ன சாகுந்தலம் காதல் காவியத்தை நவீன உத்திகளோடு இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குனர் குணசேகரன் முயற்சித்திற்கும் படம் இது.

மாபெரும் சக்திகளை அடைய விசுவாமித்திரர் கடுந்தவம் புரிய ஆரம்பிக்க, அவர் வரம் வாங்கி விட்டால் எங்கே தன்னை மிஞ்சி விடுவாரோ என்று பயந்து போகும் இந்திரன் அவர் தவத்தை கலைக்க மேனகையை அனுப்பி அவர் கவனத்தை திசை திருப்ப, எதிர்பார்த்த மாதிரியே மேனகையின் அழகில் விசுவாமித்திரர் விழுந்து ஒரு குழந்தையும் பிறக்கிறது.

மனிதனுக்கு பிறந்த குழந்தையானதால் அதற்கு தேவலோகத்தில் அனுமதி இல்லை என்பதால் இங்கேயே போட்டுவிட்டு மேல் உலகம் செல்கிறார் மேனகா.

அந்தக் குழந்தையை சாகுந்தலப் பறவைகள் தூக்கி வந்து கண்வ முனிவரின் ஆசிரமத்தில் போட்டு விட்டு போக, அதனாலேயே சகுந்தலை என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பிக்கிறார் கண்வ முனி.

சகுந்தலையாக சமந்தா. வண்ணத்துப்பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருக்கும் ஒரு மலராக சமந்தாவின் அறிமுகக் காட்சியை அமைத்திருக்கிறார் குணசேகரன் – அத்தனை அழகாம்.

அதுவே காட்டுக்கு வேட்டையாட வந்த துஷ்யந்த யுவராஜாவைக் கொள்ளை கொள்ள கண்டவுடன் காதல் கொண்டு, கொண்டவுடன் காந்தர்வ மணம் புரிந்து சமந்தாவைக் கர்ப்பிணியும் ஆகிவிட்டு, “கண்டிப்பாக கூட்டிச் செல்கிறேன்..” என்ற உறுதி மொழியைக் கொடுத்துவிட்டு தன் நாட்டுக்குத் திரும்புகிறார்.

வருவார் வருவார் என்று துஷ்யந்தனுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் சகுந்தலை அந்த நினைவாலேயே ஆசிரமத்திற்கு வந்திருக்கும் கோபக்கார முனி துர்வாசரைக் கவனிக்காமல் போக, அந்த ஆத்திரத்தில் “யார் நினைவால் நீ என்னை கவனிக்க மறந்தாயோ அவனுக்கு உன் நினைவு இல்லாமல் போய்விடும்..!” என்று சாபம் தந்து விட்டுச் செல்கிறார்.

அதனால் துஷ்யந்தனுக்கு சகுந்தலையின் நினைவு மறந்து போக, அவன் அரண்மனைக்குச் சென்று நேரில் சகுந்தலை நின்ற போதும், “உன்னை யார் என்றே தெரியாது..!” என்று விரட்டி விடுகிறான்.

அதன் பிறகு அவர்கள் சேர்ந்தார்களா என்பது தான் மீதிக் கதை.

சமந்தாவின் அழகும், பரிதாப முகமுமே இந்தப் பாத்திரத்துக்கு மெருகூட்டி விடுகிறது. தன்னை யார் என்று தெரியாது என்று துஷ்யந்தன் மறுத்து விரட்டும் போது அந்த ஏமாற்றத்தை அற்புதமாக காட்டியிருக்கிறார் சமந்த். 

என்ன சாபமோ தெரியவில்லை – வருகிற படங்களில் எல்லாம் அவர் கர்ப்பிணியாகவே வருகிறார்.

காட்டுக்குள் போனால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற அளவில் புராணங்கள் சொல்லும் காட்டில் அங்கங்கே ஒவ்வொரு சாமியார் டென்ட் அடித்து தங்கி இருக்கிறார். சகுந்தலை பிறந்த போது அவருக்கு எப்படி ஒரு சாமியார் ஆதரவு கொடுத்தாரோ அதேபோல் பிள்ளை பெற்ற சமந்தாவுக்கும் இன்னொரு சாமியார் ஆதரவளித்து காத்து வருகிறார்.

துஷ்யந்தனாக நடித்திருக்கும் தேவ் மோகன் அற்புதத் தேர்வு. சமந்தாவுக்கு ஈடான அழகிலும், நடிப்பிலும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். காதல் பார்வை, சண்டையிடும் வேகம், கட்டுக்கோப்பான உடல்வாகு என்று எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருவார் தேவ் மோகன் என்று நிச்சயமாக நம்பலாம்.

கண்வ முனியாக சச்சின் கடேகரும், துர்வாச முனியாக மோகன் பாபுவும் நடித்திருக்கிறார்கள். சின்ன வேடம் என்றெல்லாம் யோசிக்காமல் வலுவான வேடம் என்பதற்காக நடித்துக் கொடுத்த மோகன் பாபுவையும் அதேபோன்ற ஒரு படகோட்டி வேடத்தில் வரும் பிரகாஷ்ராஜையும் பாராட்டலாம்.

இவர்களைத் தவிர சுபா ராஜு, ஜிசு சென் குப்தா, கௌதமி, அதிதி பாலன், ஹரிஷ் உத்தமன் போன்றோரும் கூட சின்ன சின்ன பாத்திரங்களில் வந்து போயிருக்கிறார்கள்.

இதனாலெல்லாம் படம் பிரமாண்ட பட்டுவிடாது என்று எந்த சுவாரசியமும் இல்லாமல் செல்லும் ட்ரீட்மென்ட் புரிய வைத்து விடுகிறது.

ஒரு காதல் கதையை இத்தனை பெரிய பட்ஜெட்டில் எத்தனை அழகாக ரசிக்கும்படி கொடுத்திருக்க முடியும்..? அதை முற்றிலுமாக கோட்டை விட்டுவிட்டார் குணசேகரன்.

என்னதான் புராண கால கதை என்றாலும் அதில் லாஜிக் பார்க்கக் கூடாது என்றாலும் நம்பகமான விதத்தில் கொடுத்தால் அது வெற்றி அடையும் என்பதற்கு பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்று பல உதாரணங்கள் இருக்கின்றன.

ஆனால் எந்த சுவாரசியமும் இல்லாமல் புத்தகத்தில் படிப்பது போலவே மெதுவான நகர்த்தலில் செல்லும் கதை ரொம்பவும் பலவீனப்பட்டு போகிறது.

ஒரு கார்ட்டூன் படம் போன்ற அளவில்லையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. 3டியிலும் வந்திருக்கும் இந்த படம் அதில் பார்த்தால் கூடுதல் ரசனையுடன் இருக்குமோ என்னவோ..?

ஒரு காதல் காவியத்துக்கு பாடல்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இயக்குனரோ அல்லது இசையமைப்பாளர் மணிசர்மாவோ யோசிக்கவே இல்லை. பின்னணி இசை மட்டும் ஓரளவு ரசிக்கும்படி தந்திருக்கிறார் மணிசர்மா.

சேகர் வி.ஜோசப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக விரிந்து இருக்கின்றன.

ஒரு நல்ல வாய்ப்பை வீணடித்திருக்கிறார்கள்.

சாகுந்தலம் – சமந்தாவுக்கு போதாத காலம்..!